பேச்சு:இந்திய-ஆரிய மொழிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மயூரநாதன், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்று கூறுவதினும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் என்று கூறுவது தமிழ் வழக்குக்கு உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். அண்மையில், நானும் சில இடங்களில் இந்தோ-ஐரோப்பிய மொழி என்று எழுதியுள்ளேன். அதே போல இந்திய-ஐரோப்பியம், திராவிடம், தென் திராவிடம், இந்திய-ஈரானியம் (இந்திய-இரானிய மொழி, இந்திய-ஈரானிய மொழி), இந்திய-ஆரியம் (இந்திய-ஆரிய மொழி), என்று அம் விகுதி இட்டு வருவது சரியெனத் தோன்றுகின்றது. இந்தோ-ஐரோப்பியன் என்பதில் உள்ள அன் விகுதி வருதல் தமிழ் மொழியில் சரியில்லை. திராவிடம் என்பது சரி, திராவிடன், திராவிடியன் என்று மொழியை, மொழிக் குடும்பத்தைச் சொல்வது பொருந்தாது என நினைக்கின்றேன். நீங்களும், பிற பயனர்களும் இது பற்றி கருத்து தெரிவியுங்கள். பல இடங்களில் (பகுப்பு உட்பட), சீர் செய்ய வேண்டியுள்ளது. அண்மையில், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பகுப்பில், ஹிந்தி, குஜராத்தி முதலாக மொழிகள் இல்லாததைக் கண்டு, இந்திய-ஐரோப்பிய மொழிப் பகுப்பில் சென்று பார்த்த மொழுது அங்கு இருந்தன (இப்பொழுது ஹிந்தியை மட்டும் பகுப்பு பாற்றியுள்ளேன்).--செல்வா 12:52, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மயூரநாதன், மேலுள்ள கருத்தை நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை.--செல்வா 14:41, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

இந்தியம், ஐரோப்பியம் என்று எழுதுவது கூடுதல் பொருத்தம் உள்ளதாகத் தெரிகிறது. எனக்கு இவ்வாறு மாற்றுவதில் மாற்றுக்கருத்து இல்லை. எவருக்கும் இதில் மறுப்பு இல்லையானால் ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் மாற்றம் செய்வதில் நானும் ஈடுபடுகிறேன். ஆனால், இந்"திய"-ஐரோப்பிய மொழி என்று எழுதும்போது, இந்தியாவைச் சேர்ந்த இந்திய மொழி என்ற பொருள் படுவதுபோல் தோன்றியது (இந்"திய" மக்கள் என்பது போல). அதனால்தான் இந்தோ-ஐரோப்பிய என்று பயன்படுத்தினேன். கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர்களும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்றே பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி மேலும் சிந்தித்தால் நல்லது. Mayooranathan 19:16, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

இங்கே இந்திய என்றாலும் இந்தோ என்றாலும் இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிக்கவே. இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை, வங்காள தேசம், நேப்பாளம், பூட்டான் ஆகிய எல்லா நாடுகளும் "இந்திய" துணைக்கண்டத்தில் உள்ளவைதான். மொழிகள் துறையில் பல மொழியியல் கருத்துக்கள் (இரட்டைக் கிளவி, உயிர்மெய் எழுத்து, echo words முதலான) இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் சிறப்பியல்புகளாகக் காண்கின்றனர். எனவே "இந்திய" என்றாலும் இந்தோ என்றாலும் ஒன்றுதான். மனம்+தர்மம் = மனோதர்மம் என்று மாறுவது வடமொழி இயல்பு. அதே போல இந்தோ-ஐரோப்பிய என்பது வடமொழி இயல்பு. இந்திய-ஐரோப்பிய என்பது தமிழ் மரபு. இந்தோ-ஐரோப்பியம் என்று இருப்பது உகந்தது என்றால் அப்படியே இருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றுதான் (இந்திய துணைக்கண்டம்,. இந்தியா அல்ல). இந்தியப் பெருங்கடல் என்றாலும் அப்படியே (ஆனால் இங்காவது இன்றைய இந்திய நாட்டைக் குறிக்கலாம்; அருகில் இருக்கும் பெரிய நாட்டின் பெயரில் இருப்பது நிலவியல் வழக்கு என நினைக்கிறேன்) வில்லியம் ஜோன்சு சமசுகிருதத்திற்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த தொடர்பை 1786ல் பறைசாற்றிய பிறகே இத்துறை சூடு பிடித்தது நீங்கள் அறிவீர்கள், எனவே அதில் இருந்தது அன்றைய "இந்தியா"தான். [வில்லியம் ஜோன்சுக்கு முன்பே, 1647ல் ஸ்கித்திய மொழிகள் பற்றி ˚டச்சு ஆய்வாளர் மார்க்கஸ் ˚வான் ˚பாக்ஸார்ன் (Marcus van Boxhorn)) இன்றைய ஐரோப்பிய மொழிகள், ஆரிய மொழிகள் (சமசுகிருதம் அப்பொழுது கருத்தில் கொள்ளவில்லை) ஒற்றுமையுறவுகளைப் பற்றி கூறியிருந்திருக்கிறார் என்பது வேறு கதை]--செல்வா 19:07, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

இந்தியா என்ற சொல் அன்று மட்டுமன்றி இன்றும் இந்திய நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகள் பலவற்றையும் சேர்த்துக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது என்பது சரியே. அதில் எனக்குப் பிரச்சினை கிடையாது. நான் முன்னர் எழுதிய குறிப்பு எனது கருத்தைச் சரியாகப் புரிய வைக்கவில்லை எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் Indo-European என்னும்போது, அது இந்தியா, ஐரோப்பா ஆகிய இரு பகுதிகளிலும் வழங்கி வருகின்ற மொழிகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு மொழிக்குடும்பத்தைக் குறிக்கிறது. ஆனால் இந்திய-ஐரோப்பிய மொழி என்று சொல்லும்பொழுது, வேறு விதமாகப் பொருள் படுகின்றதோ என்பதுதான் எனது ஐயம். எடுத்துக்காட்டாக, இலத்தீன் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழி எனும்போது அது, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஐரோப்பிய மொழி என்னும் பொருளைத் தருவதுபோல் தோன்றுகிறதல்லவா? எழுதும் போது இடைக்கோடு போட்டு எழுதினால் பிரச்சினை இருக்காது. ஆனால் பேசும்போது நிலை வேறு. இந்தோ, ஆஃப்ரோ, ஆஸ்திரோ போன்ற சொற் பயன்பாடுகளில் எனக்கும் விருப்பம் கிடையாது. இது, ஒரு சொல்லைக் கடன்வாங்குவது மட்டுமன்றி ஒரு இலக்கணக் கூறைக் கடன்வாங்குவதாகும். இந்திய-ஐரோப்பியம் என்ற பயன்பாட்டில், பொருள் திசை திரும்பாதெனில் அச் சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்குச் சம்மதமே. Mayooranathan 06:20, 28 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மயூரநாதன், உங்கள் மறுமொழிக்கும், கருத்துகளுக்கும் நன்றி. நிங்கள் சொல்வது உண்மைதான் : இந்திய-ஐரோப்பியம் என்னும் பொழுது இந்தியாவைச் சேர்ந்த ஐரோப்பா என்னும் பொருள் தர வாய்ப்புள்ளது (முன்னர் உங்கள் கூற்றில் இந்தியாவைச் சேர்ந்த இந்திய மொழி என்னும் தொடரைக் கண்டு தவறுதலாகப் புரிந்து கொண்டேன்), ஆனாலும் இந்தியமும், ஐரோப்பியமும் என்னும் இணைப்பும், இந்தியாவுடன் தொடர்புடைய ஐரோப்பா (மொழிகள் பற்றி) என்ற பொருளும் தரவல்லது. இந்திய-ஐரோப்பிய என்று இடைக்கோடு இட்டு எழுதுவதால் குழப்பம் வராது என்று நினைக்கிறேன்.--செல்வா 13:11, 28 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
உண்மைதான் முதற் குறிப்பில் இந்தியாவைச் சேர்ந்த ஐரோப்பிய மொழி என எழுதுவதற்குப் பதிலாகத் தவறுதலாக 'இந்தியாவைச் சேர்ந்த இந்திய மொழி எனத் தவறாக எழுதிவிட்டேன். பல கட்டுரைகளில் இந்தோ- என்பதற்குப் பதிலாக இந்திய- என்று மாற்றம் செய்துளேன். படிப்படியாக ஏனையவற்றையும் மாற்றலாம். Mayooranathan 13:54, 28 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]