பருப்பொருளியல்
பருப்பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் ஒரு பிரிவு. இது நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. நுண்பொருளியலும், இதுவும் பொருளியலின் இரு பெரும் பிரிவுகளாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், விளைவு, நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.