பந்தலூர்

ஆள்கூறுகள்: 11°29′N 76°20′E / 11.483°N 76.333°E / 11.483; 76.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தலூரிலுள்ள மேங்கோ ஆரஞ்சு எனப்படும் குக்கிராமம்

பந்தலூர் (Pandalur) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

11° 29' 0" வடக்கு 76° 20' 0" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் பந்தலூர் அமைந்துள்ளது. இந்திய சீர் நேரத்தின் படி பந்தலூரின் நேரம் +05:30 சேர்க்கப்படுகிறது. பந்தலூர் ஒரு மூன்றாம் நிலை நகராட்சி கிராமம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

  • ஊட்டி (65 கி.மீ), மாவட்டத் தலைமையிடம்
  • கூடலுர் (23 கி.மீ), அருகிலுள்ள நகரம்
  • அருகிலுள்ள விமான நிலையங்கள், கோழிக்கோடு (110 கி.மீ), கோவை அனைத்துலக விமான நிலையம் 135 கி.மீ)
  • சுல்தான் பாத்தெரி (32 கி.மீ) – அருகிலுள்ள கேரள நகரம்.

பந்தலூரிலிருந்து அருகாமையிலுள்ள கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடுகின்றன.

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் நடுவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர் தேவாலா நகரம் மற்றும் பந்தலூரில் சுரங்கங்கள் வெட்டி, தங்க கனிமங்கள் எடுத்துள்ளனர். இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனம் இங்கு ஒரு பண்ணைக் குடியிருப்புப் பகுதியை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாக பந்தலூரில் நீதிமன்றம் , குதிரை பந்தைய மைதானம் , குடியிருப்பு வளாகம், ராணுவ முகாம் , காவல் நிலையம் மற்றும் அங்காடிகள் , உணவகங்கள், அஞ்சலகங்கள், வணிக நிறுவனங்கள் பேராலயங்கள் போன்றவை உருவாகின. தங்கம் மற்றும் மைகா சுரங்கங்களில் கிடைத்த புதிய வேலை வாய்ப்புக்கள் காரணமாக அன்றைய சென்னை மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ், மலையாள மற்றும் கன்னட மக்களின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்தது. முக்கிய அரசு அலுவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பந்தலூரில் தோன்றின. சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தங்கக் கனிமங்களின் அளவு சராசரியைக்காட்டிலும் பெருமளவு படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும் வரை தங்கம் வெட்டப்படுவது தொடர்ந்தது.

தங்கச் சுரங்கங்கள் இனி இந்த பகுதியில் வெற்றி பெறாது என்று பிரித்தானிய நிறுவனங்கள் தீர்மானித்தவுடன் அவர்கள் விவசாயத் தொழில்களுக்கு மாறினர். பெரிய அளவிலான தேயிலை தோட்டங்களை உருவாக்கினர்.

இப்புதிய தொழிற்துறையின் வெற்றியை உறுதிப்படுத்த காலநிலையும் மண்ணும் உதவின. இவை தேயிலைப் பயிர் வளர்வதற்கு ஏற்ற சூழலைக் கொடுத்தன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பந்தலூரில் காப்பியும் தேயிலையும் பயிரிடப்பட்டன. இக்காலத்தில் பல ஐரோப்பியர்கள் நீலகிரியிலும் வயநாட்டிலும் குடியேறியிருந்தனர். டி.எச். மக்லியோடு மற்றும் என்றி அட்சென்விலர் போன்றவர்கள் அவர்களில் சிலராவர்.

பந்தலூரைச் சேர்ந்த குஞ்சாலிக்குட்டி ஆச்யி என்பவர் பிரித்தானியர்களுக்கான மனித சக்தியை வழங்குபவராக இருந்தார். மலபார் நகரத்திலிருந்து ஏராளமான மக்களை இவர் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பி வைத்தார். இதனால் பிரித்தானிய நிர்வாகத்திற்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். கான் பகதூர் குஞ்சாலிக்குட்டி என இவரை அவர்கள் அடையாளப்படுத்தினர். இக்காலத்தில் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது. கிலாபத் இயக்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த சமூகத்தினரை இவர்கள் நீக்க முயன்றனர். கிலாபத் கிளர்ச்சியாளர்களின் குழு ஒன்று பந்தலூருக்கு வந்து குஞ்சன்குட்டியின் கடையை அடித்து நொறுக்கியது. படுகா சமூகத்தைச் சேர்ந்த நண்பர் மல்ல கவுடா குஞ்சன்குட்டியை காப்பாற்றி பிழைக்க வைத்தார்.

இந்த பகுதியில் இருந்த நிலத்தின் பெரும்பகுதி நிலம்பூர், கோவிலகம் மற்றும் மைசூர் மகாராசாவின் சுதேச அரசுகளின் சொத்து ஆகும். நெல்லியாலம் ராணி என்பவர் இப்பகுதியிலிருந்த மைசூர் மகாராசாவின் சொத்துக்களை நிர்வாகம் செய்தார். சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியையும் அனுபவித்தார். நெல்லியாலம் ராணி கோட்டையின் எஞ்சிய பகுதிகள் இன்னும் கூட நெல்லியாலம் கிராமத்தில் காணப்படுகிறது.

பனியாக்கள், குரும்பர்கள், காட்டு நாயக்கர்கள் போன்ற பழங்குடியின மக்களுக்கு பந்தலூர் ஒரு புனித இடம் என்று நம்பப்படுகிறது. அப்போது இங்கு கவுடர் சமூகம் ஆதிக்கம் செலுத்தியது. நெல்லியால்கம் கிராமத்திற்கு அருகில் பொன்னானி என்ற இடத்தில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த சிறீ மாகா விச்னு ஆலயம் கேரள கட்டடக்கலை நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மலபார் மக்களின் குடியேற்றத்தால் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் உட்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

விலங்குகள்[தொகு]

நீலகிரி வரையாடு, நீலகிரி குரங்கு, தேவாங்கு, மலபார் மலை அணில், வெளிமான், புலி, குரைக்கும் மான், காட்டெருமை மற்றும் ஆசிய யானை போன்றவை பொதுவாக காணப்படும் விலங்குகள் ஆகும். இங்கு ஒரே வாழிடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பறவைகள்[தொகு]

கொண்டைக்குருவிகள், ஈப்பிடிப்பான்கள், சிட்டுக்குருவிகள், காகங்கள், மரங்கொத்திகள், வானம்பாடிகள், பஞ்சரட்டைகள், கிளிகள், காட்டுக்கோழிகள், குண்டுகரிச்சான், நீலகிரி காட்டுப்புறா போன்ற பறவையினங்களை இங்கு காணமுடியும்.

தாவரங்கள்[தொகு]

பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா மற்றும் தோதகத்தி போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் மரங்களாகும். பந்தலூரில் பல்வேறு மூலிகைகளும், மிளகு போன்ற கொடிகளும், மிகுந்து காணப்படுகின்றன. நீலகிரியின் சிறப்பம்சங்களுள் ஒன்றான 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை இங்கு காணமுடியும்.

பொருளாதாரம்[தொகு]

பந்தலூர் தாலுக்காவின் பெரும்பகுதி தேயிலைத்தோட்டங்களால் நிறைந்தது. குறு மற்றும் பெரு விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், அதனை சார்ந்து இயங்கும் தொழில்கள் என தேயிலை இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

எம். திராவிடமணி என்பவர் தமிழ்நாடு சட்டப்பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூடலுர் தொகுதி அரசியல்வாதியாவார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தலூர்&oldid=3706326" இலிருந்து மீள்விக்கப்பட்டது