பஞ்சகவ்யம்
பஞ்சகவ்யம் அல்லது பஞ்சகவ்வியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இந்து சமயக் கோயில்களில் அபிசேகப் பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகவும், இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருளாகவும்(உரம்) பயன்படுத்தப்படுகிறது.
பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.
இலண்டனில் கோமியத்தை இஸ்கான் இயக்கத்தினர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவதை சிலர் எதிர்க்கின்றனர்.[1]
சொல்லிலக்கணம்
[தொகு]பஞ்சகவ்யா - பஞ்ச + கவ்யா. பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து வகையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது. இதனை பஞ்சகவ்யா, பஞ்சகாவியா என்றும் அழைக்கின்றனர்.
இந்து சமயத்தில்
[தொகு]இந்து சமயத்தின் நம்பிக்கைப்படி பசு என்பது தேவர்கள் வாழுகின்ற உயிராகும். அதனால் பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களை தெய்வீகமாக கருதுகின்றார்கள். பசுவிலிருந்து கிடைக்கும் பால், சாணம், கோமியம் இவற்றோடு பாலிருந்து கிடைக்கும் தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு பஞ்சகவியா தயாரிக்கப்படுகிறது. இதனை அபிசேகப் பொருள்களில் ஒன்றாக தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்கின்றார்கள்.[2] அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றார்கள். இதனை பக்தர்கள் உட்கொள்கிறார்கள். சுவாமி சிலைக்கு பஞ்சகவியத்தால் அபிசேகம் செய்யப்படும் போது வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மனநோயைப் போக்கும் என இந்துக்கள் நம்புகின்றனர்.
சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு பஞ்சகவிய கிருதம் என்ற மருத்தினைத் தயாரித்தனர். [2] இந்துக் கோயில்களின் கும்பாபிஷேக விழாக்களின் போது இவ்வாறு பஞ்சகவிய அபிசேகம் செய்தல் சடங்காக உள்ளது. [3]
இயற்கை விவசாயத்தில்
[தொகு]கொடுமுடி மருத்துவர் நடராஜன் என்பவர் இந்துக் கோயில்களில் கொடுக்கப்படும் பஞ்சகவியத்தினை சோதனை முயற்சியாய் பயிர்களுக்கு பஞ்சகவ்யத்தினை கொடுத்து வெற்றிபெற்றார். அவருடைய பரப்புரைகளின் மூலமாக இயற்கை விஞ்ஞானி என்று அழைக்கப்பட்ட நம்மாழ்வார் பஞ்சகவியத்தினைப் பற்றி அறிந்து இயற்கை விவசாயத்தில் பஞ்சகவியத்தினை ஒரு இடுபொருளாக ஆக்கினார். [4]
வேளாண்மையில் பயன்பாடு
[தொகு]- பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
- பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
பயன்படுத்தும் முறை
[தொகு]ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இங்கிலாந்து கடைகளில் மாட்டு சிறுநீர் விற்பனை: சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
- ↑ 2.0 2.1 பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாக கூறுவது ஏன்- தினமலர் கோயில்கள்
- ↑ பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- ↑ நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன் 13 - ‘நசியனூர்’ மோகனசுந்தரம் பசுமை விகடன்