நுரைச்சோலை அனல்மின் நிலையம்
Lakvijaya Power Station | |
---|---|
நாடு | இலங்கை |
அமைவு | 08°01′06″N 79°43′22″E / 8.01833°N 79.72278°E |
நிலை | Operational |
அமைப்பு துவங்கிய தேதி | 11 மே 2006 |
இயங்கத் துவங்கிய தேதி | 22 மார்ச்சு 2011 |
அமைப்புச் செலவு | US$1.35 billion |
இயக்குபவர் | இலங்கை மின்சார சபை |
இலங்கையின் மின் தேவையை அனல்மின்வலு கொண்டு பூர்த்தி செய்வதை குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத் திட்டங்களில் பாரிய முதற்றிட்டமே நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டமாகும். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில்ஒவ்வொன்றும் 300 மெகாவற் திறனளவு கொண்ட மூன்று உற்பத்தி நிலையங்களை அமைப்பது திட்டத்தின் முழுமையான வரைவாகும். மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்படும் இந்நிலையத்தின் முதற்கட்டப்பணி முடியும் தருவாயில்[1] 2011ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 300 மெகாவற் திறனுள்ள முதல் நிலையம் செயலாக்கத்திற்கு கொணரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது[2].
பின்னணி
[தொகு]இருபத்தியோராம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் வரை இலங்கையின் தேசிய மின் தேவையின் பெரும்பகுதியை நீர்மின் வலுவே நிறைவேற்றி வந்தது. இருப்பினும் இடைக்கிடையே ஏற்படும் வரட்சியான காலநிலை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதுடன் அது தேசிய பொருளாதாரத்தையும் பெருமளவிற்கு பாதித்துள்ளது. நீர் மின்வலுவுக்கு பாதிலாக மாற்று மின்வலுவொன்றின் தேவை நீண்டகாலங்களாக உணரப்பட்டே வந்தது. அனல் மின் நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் என்று 1970 ஆம் ஆண்டுகளில் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. காரணம்
- அக்கால கட்டங்களில் இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்த நிலை,
- தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைகள்,
- சூழலியலாளர்களின் எதிர்ப்பு.
அமைவிடம்
[தொகு]புத்தளம் மாவட்டத்தில் பாலாவி கல்பிட்டி பிரதான வீதியிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் கடற்கரையோரமாக 95 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.
எதிர்பார்ப்பு
[தொகு]900 மெகாவற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று அனல்மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதே நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முழுமையான திட்டம். மூன்று கட்டப் பணிகளும் பூர்த்தியடைந்து முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமாயின் இலங்கையில் மின் உற்பத்திக்கு ஏற்படும் செலவீனத்தைப் பல மில்லியன் ரூபாய்களால் குறைக்கக் கூடியதாக இருக்குமென்பதுடன், குறைந்தளவு கட்டணத்தைச் செலுத்தி மின் அலகுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இலங்கையில் நீர்மின் உற்பத்தியை விட, அனல் மின் உற்பத்திக்குக் குறைந்தளவு செலவீனமே ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூன்று கட்டங்கள்
[தொகு]நுரைச் சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டன. முதற்கட்டப் பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பமாகின. 2011 ஆரம்பத்தில் இதில் 300 மெகாவற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதன் மூலம் 300 மெகாவற் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட விருப்பதுடன் இது நாட்டின் மின் தேவையின் 17 வீதத்தை நிவர்த்தி செய்வதாக அமையும். அதேசமயம் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடுத்த இரண்டு கட்டங்களையும் பூர்த்தி செய்து நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் 900 மெகாவற்ஸ் மின்சாரத்தை நுரைச்சோலையிலிருந்து உற்பத்தி செய்து வெயாங்கொட மின்விநியோக நிலையத்தின் ஊடாக விநியோகிக்க முடியுமாக இருக்கும்.
நிதியுதவி
[தொகு]சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சீனாவின் எக்ஸின் வங்கியின் 455 மில்லியன் அமெரிக்க இலகு கடனைக் கொண்டு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ஆரம்பமாகின.
இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் முக்கிய பங்காளியாக சீனாவின் தேசிய இயந்திர ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கூட்டுத்தாபனம் அமைந்துள்ளது. இதன் கட்டுமானப் பணிகளில் இலங்கைப் பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்களுடன், சீனாவைச் சேர்ந்த பணியாளர்களும் இணைந்துள்ளனர்.
சூழலியலாளர்களின் எதிர்ப்பு
[தொகு]நுரைச்சோலை அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப் படையும், அதிக வெப்பம் மற்றும் தூசுப் படலங்கள் வெளியேறி சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சுழலியலாளர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை
[தொகு]நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்வதால் வெளியேறும் புகையை வடிகட்டி சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படாதவாறு வெளியேற்றும் பொறிமுறை கையாளப்படவுள்ளது. இவ்வாறு புகை வெளியேற்றப்படும் போது வடிகட்டப்படும் துகள்கள் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு ஒருதடவை வெளியேற்றப்படும். சுழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறே அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாக இத்திட்டத்தின் சிரேஷ்ட திட்டப்பணிப்பாளர் கூறுகின்றார். பாவிக்கப்பட்ட நீர் மீண்டும் சுத்தமாக்கப்பட்டு கடற்கரையில் வெளியேற்றப்படும் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்வு
[தொகு]இந்த மின் நிலையத்தை அமைப்பதால் சுமார் 80 குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்கள் வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், மீன்பிடியை ஜீவனோ பாயமாகக் கொண்டிருந்த மக்களுக்கு மீன்பிடிப் படகுகளும், விவசாயத்தை ஜீவனோ பாயமாகக் கொண்டிருந்த மக்களுக்கு விவசாயத்திற்கென இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளன.
நிலக்கரிக் களஞ்சியம்
[தொகு]ஒரு மணித்தியாலயம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 114 தொன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தோனேசியாவிலிருந்து பெறப்படும் நிலக்கரியைக் கொண்டே இங்கு மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, சீனா போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் நிலக்கரியைவிட இந்தோனேசியாவிலிருந்து பெறப்படும் நிலக்கரி விலை குறைந்ததாகக் காணப்படுகிறது. மூன்று மாதங்கள் மின் உற்பத்தி செய்வதாயின் 7 மில்லியன் தொன் நிலக்கரி தேவைப்படும். எனவே மூன்று மாதங்களுக்குத் தேவையான நிலக்கரிகளை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான களஞ்சிய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக மின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிலக்கரி ஏற்கனவே குவிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுகின்றது.
இந்தோனேசியாவிலிருந்து கப்பல் மூலம் எடுத்துவரப்படும் நிலக்கரி நுரைச்சோலை அனல் மின்னிலையம் அமைந்திருக்கும் கடற் பகுதிக்கு நேரடியாகக் கொண்டு வரப்படும். எனினும், கரையோரத்திலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மிதவைகளுக்கு மாற்றப்பட்டே நிலக்கரி கரைக்கு எடுத்துவரப்படும்.
ஒவ்வொரு கப்பலிலும் 65,000 தொன் நிலக்கரி இலங்கைக்குக் கொண்டுவரப்படும். கப்பலிலிருந்து பாரிய மிதவைகளில் எடுத்துவரப்படும் நிலக்கரிகள் பாரம் தூக்கிகள் மூலம் நீண்ட இயந்திர பட்டிகளின் ஊடாக களஞ்சியப் பகுதிக்குக் கொண்டுவரப்படும். நிலக்கரி கொள்வனவு இலங்கை நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப் படுவதுடன், இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிலக்கரிகள் கப்பல்கள் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இந்திய நிலக்கரி இல்லை
[தொகு]குறைந்த விலையில் இந்தியாவிலிருந்து நிலக்கரியைக் கொள்வனவு செய்யக்கூடியதாகவிருந்ததாலும், அதில் கந்தகத்தின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால் இயந்திரங்களைப் பாதிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் இந்தியாவிலிருந்து நிலக்கரியைக் கொள்வனவு செய்வதில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இயந்திரப் பட்டிகள்
[தொகு]களஞ்சியத்திலிருந்து இயந்திரப் பட்டிகள் மூலம் சூளைக்கு எடுத்து வரப்படும் நிலக்கரிகள் 10 மில்லி மீற்றர் பரிமாணமுடைய சிறு துண்டு களாக்கப்பட்டு, கந்தகம் மற்றும் நைதரசன் வேறாக்கப்படும். கடல்நீரை வெப்பப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் நீராவியைக்கொண்டு இயந்திரங்கள் செயற்படும். கடல் நீரைக் கரைக்குக் கொண்டுவந்து சுத்திகரித்து வெப்பமாக்கிப் பயன்படுத்தப்படும் திட்டமே உள்ளது.