தமிழ் வரைகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் உள்ள வரைகதை தமிழ் வரைகதை அல்லது தமிழ் சித்திரக்கதை எனப்படுகிறது.

வரலாறு[தொகு]

1950 கள் தொடக்கமே தமிழில் வரைகதைகள் உண்டு. 1956 ம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது. தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதை இதுவே. ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும்] 1970 இருந்து 1990 முற்பகுதி மட்டும் தமிழ் வரைகதைகளின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் (1984-1995), வாண்டுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. இலங்கையில் இருந்து 2005 இல் இருந்து ஐஸ்பேர்க் காமிக்ஸ் வெளி வருகிறது.

1990 களில் கேபிள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகை தமிழ் வரைகதை வாசிப்பு பழக்கத்தை குறைத்தன. அதனால் பல இதழ்கள் நின்றுபோயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகி வருவதும் தேக்க நிலைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

2015 காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1]

கதை வகைகள்[தொகு]

பெரும்பாலான தமிழ் வரைகதைகள் ஐரோப்பிய, அமெரிக்க வரைகதைகளின் மொழிபெயர்ப்புகளே. மாயாவி, இரும்புக்கை மனிதன், யேம்ஸ்பாண்ட், டெக்ஸ் வில்லர் என மேற்குநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற வரைகதை நாயகர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் பட்மான், சுப்பர்மான், ஸபைடர்மான் போன்றவை மொழி பெயர்க்கப்படவில்லை. இதற்கு காப்புரிமை காரணமாக இருந்திருக்கலாம்.

துப்பறியும் கதைகள், வெளிக்கிரக கதைகள், குதிரை வீரர்-செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளிவந்தன.

வாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டன.

தமிழ் வரைகதைகளும் சமூகமும்[தொகு]

தமிழ் வரைகதைகள் மேற்குநாட்டு கூறுகளை இளையோருக்கு அறிமுகப்படுத்தின. பெரும்பாலன கதைகள் வீர சகாச கதைகளே. இவற்றில் ஒரு சில கதைகளில் மேலோட்டமான பாலிய கூறுகளும் உண்டு. அதனால் சிறுவர், இளையோர் இவ் இதழ்களை வாசிப்பதற்கு பல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. அனேக பள்ளிக்கூடங்களில் தமிழ் வரைகதை இதழ்களை வைத்திரிப்பதோ, வாசிப்பதோ பெரும் குற்றமாக கருதப்பட்டது. எனினும் சனசமூக நிலையங்களில் தமிழ் வரைகதை இதழ்கள் இருந்தன.

தமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. கல்கி எழுதி பெரும் வரவேற்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்ல்து கதா பாத்திரங்களைக் கொண்டவை.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sale at book fair 'beyond expectation'". thehindu.com. January 27, 2016. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வரைகதை&oldid=3930657" இலிருந்து மீள்விக்கப்பட்டது