ஜமீன் கோடங்கிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜமீன் கோடாங்கிபட்டி தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். விளாத்திகுளத்திலிருந்து மதுரை சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோடங்கிபட்டியின் பழைய பெயர் விசுவநாதபுரம் ஆகும். பண்டைய காலத்தில் இந்த கிராமத்தில் ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். நாயக்கர் சமுதாய மக்கள் கோடாங்கிகளாகவும் இருந்துள்ளனர். பின்பு காலப்போக்கில் ஜமீன் கோடாங்கிபட்டி என்று பெயர் மாறிவிட்டது. இந்த ஊரை உருவாக்கியவர் சில்லன்ன குலத்தைச் சேர்ந்த சீல்பொம்மு நாயக்கர். இங்கு அனைத்து சமூகங்களும் வாழ்ந்து வருகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் நாயக்கர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் கோவில்கள் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். மேலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு.

இங்குள்ள கோவில்கள்[தொகு]

வீரசின்னையா கோவில்[தொகு]

இந்த கோவிலின் சிறப்பானது தங்களது பொருட்கள் ஏதாவது தொலைந்தால் வீரசின்னையா கோவிலை வணங்கி வேண்டினால் அந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்பது இன்றளவும் சுற்று வட்டார கிராமங்களில் பிரபலமாகும். இதற்கு பரிகாரமாக வெல்லக்கட்டி கொண்டு வந்து இங்கு பூஜை செய்து பிரசாதமாக கொடுப்பது வழக்கமாகும். மேலும் இந்த கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று விஷேச பூஜைகள் நடைபெறும். அன்று ஊர் நாயக்கர் வீட்டில் இருந்து கரும்பு கட்டுகள்,மூங்கில் கூடைகளுடன் தேவராட்டத்தோடு அனைத்து பொது மக்களும் இந்த கோவிலில் பள்ளயப்பெட்டி பூஜையில் கலந்துகொள்வார்கள். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கரும்பினால் ஆன ஊஞ்சல் கட்டி வேண்டுவர். வேண்டிய பல பேருக்கு குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது. மேலும் அன்று இரவு வீரசின்னையாவின் வாழ்க்கை வரலாறுகளை நாயக்க சமுதாய பெண்மணிகள் பாடல்களாக பாடுவார்கள். பின்பு மறுநாள் காலையில் அனைத்து மக்களும் கோவிலில் கூடி பள்ளயபெட்டி பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த கோவிலில் மஞ்சள் பொடியையும் நிலத்தடி மண்ணையுமே விபூதியாக பூசிக்கொள்வார்கள்.

முத்தாலம்மன் கோவில்[தொகு]

இந்த கோவில் கிழக்கு தெருவில் வசிக்கும் நாயக்கர்களுக்கும் மற்றும் குறிபிட்ட சில சமூகத்தினருக்கும் மட்டும் பாத்தியப்பட்ட கோவில் என்றாலும், இந்த கோவிலை அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வணங்கி மழைக்கஞ்சி ஊற்றினால் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும். எங்கள் ஊரின் காவல் தெய்வமாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்கில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 3வது புதன் கிழமை அன்று இந்த கோவிலுக்கு மழைக்கஞ்சி ஊற்றுவார்கள். இதை எதிர் பார்த்துதான் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் விதைக்கவே ஆரம்பிப்பார்கள். ஊரின் நடுவே அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து பெண்களின் குலவை சத்தத்துடன்,மேள தாளத்துடன்,சாமி ஆட்டத்துடன்,அனைத்து பொது மக்களும் அவர் அவர் வீட்டில் இருந்து மஞ்சள் நீர் குடத்துடன்,வீதி உலா வருவர். தாங்கள் படைக்க இருக்கும் பிரசாதங்களையும் கொண்டு வருவர். பின்பு அனைத்து பிரசாதங்களையும்,மற்றும் மழைக்கஞ்சியையும் கலந்து பக்த பெருமக்களுக்கு கொடுப்பார்கள். இந்த கோவிலின் சிறப்பானது சுற்று வட்டார கிராமங்களுக்கே தெரியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அப்பணசாமி கோவில்[தொகு]

இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலை மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும். மேலும் அப்பணசாமி என்ற பெயர் இந்த கிராமத்தில் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்களிலும் பெரும்பாலும் இந்த பெயர் கொண்டவர்களாகத்தான் இருப்பர். இந்த கோவிலுக்கு செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் வெளி இடங்களில் இருந்து அதிகம் பேர் தரிசிக்க வருவார்கள். அப்பணசாமியின் பெயரை அழகர் ஆற்றில் இறங்கும் போது இன்றளவும் உச்சரிப்பர். இவரும் சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் வாழ்ந்து விருதுநகர் மாவட்டம் போடப்ப நாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்கு கடைசியாக காட்சி அளித்து மறைந்ததாக வரலாறு உண்டு. தற்போதும் அந்த கிராமத்தில் அப்பணசாமி கோவில் உள்ளது. எங்கள் கிராமத்து மந்தையில் இருக்கும் எட்டுகால் மண்டபம் முதல் ஊரைச்சுற்றிலும் பெரும்பாலான சொத்துக்கள் இவருடைய பெயரிலேயே இருந்துள்ளன. எங்கள் கிராமத்தில் இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த பூஜையில் கலந்து கொள்ள இந்த கோவிலில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் இரவு வேளையில் கோவிலில் சேராதவர்கள் இங்கு செல்ல அஞ்சுவார்கள். இந்த கோவிலை பற்றி ஏராளமான வரலாறுகள் இருந்தும், சிறப்பம்சங்கள் இருந்தும் பெரும்பாலான விசயங்களை வெளியில் சொல்ல கூடாது என்பது எங்களது முன்னோர்களின் வாக்காகும். ஆதலால் அதிகம் சொல்ல இயலவில்லை. இந்த கிராமத்தில் உள்ள ஜோதிடம் சொல்லும் நாயக்கர்கள் இவரது அருள் பெற்ற பின்பே அந்த தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

ஜக்கம்மாள் கோவில்[தொகு]

நாயக்கர்களின் குல தெய்வமும்,காவல் தெய்வமுமாக இந்த கோவில் அமைந்துள்ளது. இலந்தை முள் கொண்டு கோட்டை அமைத்து இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் முள் கோட்டை அமைக்கும் போது வீட்டிற்கு ஒரு கம்பளத்து ஆண்மகன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நாயக்கர்களில் தலைமுறை தலைமுறையாக குறி சொல்லும் பழக்கமுடைய நாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால் ஒவ்வொரு வாரம் செவ்வாய்,வெள்ளியன்று இங்கு பூஜை செய்வதும்,ஆடு,சேவல் அறுத்து நேர்த்தி கடன் செய்வதும் வழக்கமாக கொண்டு வருகிறார்கள். இந்த கோவிலில் நாயக்கர்களின் துணையுடன் நேர்த்தி கடன் செய்து சாமி கும்பிடுவதால் எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் சரியாகி விடும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும். இங்கு நேர்த்தி கடன் செலுத்தும் போது ஒவ்வொரு நாயக்க சமுதாய குல வகையிலிருந்தும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வன்னியானந்த சுவாமி கோவில்[தொகு]

சித்தர்களில் ஒருவராக கருதப்பட்ட வன்னியானந்தரும் இங்கு வாழ்ந்து மறைந்ததாக வரலாறுகள் உண்டு. பிள்ளைமார் சமூகத்தினரால் வைகுண்ட ஏகாதசியன்று நடைபெறும் இந்த கோவிலுக்கான நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது. அன்று மாலை அன்னதானமும்,அதைத் தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் திருஉலா வருவதும் கண்கொள்ளாக் காட்சியாகும். அன்று இரவு முழுவதும் ஊரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்று அதிகாலை சன்னதியில் வந்தடையும் இந்த கோவிலில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்லாது அனைத்து சொந்தபந்தங்களும் கலந்து கொள்வார்கள்.

செல்வ விநாயகர் கோவில்[தொகு]

இந்த கோவிலின் தினசரி பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் ஆவணி மாதம் நடக்ககூடிய வருஷாபிஷேகம் மிகவும் பிரபலமானது. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த விழாவுக்கு நாட்டின் எந்த பகுதியில் இந்த கிராம மக்கள் இருந்தாலும் அன்றைய தினம் கண்டிப்பாக வந்து விடுவார்கள். இங்கு கோவிலில் ஒரு வாரம் நிகழ்ச்சிகள் நடப்பதை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்து இன்றும் ரசித்துவிட்டு செல்வார்கள். முதல் நாள் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மாலையில் ஊர்நாயக்கர் வீட்டிலிருந்து வானவேடிக்கையுடனும், அதிர வைக்கும் உருமி சத்தத்துடனும், யானை ஊர்வலத்துடனும், கம்பளத்தார்களின் பாரம்பரிய கலையான தேவராட்டத்துடனும், வீரமிக்க இளைஞர்களின் சிலம்பாட்டத்துடனும், வீர மங்கைகள் எடுத்துச்செல்லும் மாவிளக்கு நிகழ்ச்சிகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மேலும் ஒருவாரம்வரையிலும் விளையாட்டு போட்டிகளும், நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சிந்தனையை தூண்டும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். எங்கள் கிராமத்தில் நடக்கும் முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்று.

சீலமுத்தையா கோவில்[தொகு]

இந்த கோவில் மஞ்சனத்தி மரத்தடியில் ஒற்றைக்கல்லால் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உருவ வழிபாடோ கட்டிடமோ கிடையாது. அது போல அமைக்கக்கூடாது என்பதும் எங்கள் முன்னோர்கள் வாக்கு. கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த கோவிலில் வெறும் தேங்காய் உடைத்து வழிபட்டால் பாதிப்பு நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் உடைத்த தேங்காயை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது. இந்த கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டும் கண்டிப்பாக பெண்கள் செல்லக்கூடாது.

சீலக்கம்மாள் கோவில்[தொகு]

கிராமத்தின் தலைவாசலான வடக்குப்பகுதியில் காவல் தெய்வமாக காட்சியளிக்கும் இந்த தெய்வத்திற்கு பல வரலாறுகள் உண்டு. எங்கள் கிராமத்தின் பெரிய வீட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து எட்டையபுரத்து அரண்மனையில் மணமுடித்து வைக்கப்பட்டார். பின்பு திருமணம் முடிந்து மறுவீட்டிற்கு வரும்பொழுது தாய்வீட்டிற்கு பலகாரங்கள் கொண்டுவந்தார். அப்பொழுது அவரது தாயார் இவர் கொண்டு வந்த பலகாரங்களை வீட்டில் வைக்காமல் முற்றத்தில் உள்ள பந்தலில் வைத்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்று இவர் கேட்கும்பொழுது அவரது தாயார் அரண்மனையில் பல சமூக மக்கள் வேலையாட்களாக இருப்பார்கள் அவர்கள் செய்துதரும் பலகாரம் என்பதால் தீட்டு இருக்கும் எனவும் சகோதரர்கள் வந்த பின்பு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அவர் தீட்டு இருக்கும் இடத்தில் என்னை எதற்காக மணமுடித்து வைத்தீர்கள் என்று கோபமடைந்து அங்கு செல்லாமல் தன்னைத்தானே தீயில் மாய்த்துக்கொண்டதாக வரலாறுகள் சொல்கின்றது.பண்டையகாலத்தில் தன்னைத்தானே தீயில் மாய்த்துக்கொள்வதற்கு குண்டம் ஏறுதல் என்று பெயராகும். இந்த குண்டம் ஏறுதலுக்கு கூட ஏதாவது ஒரு அரண்மனையின் அனுமதி பெற்ற பின்பு அவர்கள் தரும் புளியமரத்து கட்டைகளால் தான் மாய்த்துக்கொள்ள வேண்டும். தனது சகோதரர் ஸ்ரீ பொம்மையசாமியின் கட்டளைப்படி எங்கள் கிராமத்தின் வடக்குப்பகுதியில் இன்றும் காவல் தெய்வமாக காட்சியளிக்கிறார். இன்றும் இவருக்கு வருடம் தோறும் பெரியவீட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து இலந்தை முள் கோட்டை அமைப்பது வழக்கமாகும்.

வடசித்தம்மாள் கோவில்[தொகு]

கிராமத்தின் எல்லையில் வடக்குப்பகுதியில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலுக்கும் ஏராளமான பழமைவாய்ந்த வரலாறுகள் உண்டு. இவர் சித்தவ நாயக்கன்பட்டி வகையறாவைச் சேர்ந்தவர் என்றும் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது சகோதரர் மற்றும் தோழிகளை சந்திக்க குறிப்பிட்ட சில பகுதிக்கு சென்றுவரும் பொழுது இவரது கணவர் வீட்டில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. ஆகவே எந்த குற்றமும் செய்யாத தூய்மையான தன்னை சந்தேகப்பட்டதால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பண்டைய கால முறைப்படி புதூர் அரண்மனையின் எர்ரபாபு நாயக்கர் என்பவரிடம் குண்டம் வாங்கி சித்தாடை கட்டிக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இறந்த பின்பு தனது சகோதரருக்கு காட்சியளித்து தனது குஞ்சத்தை பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தால் என்றும் இந்த கிராமத்திற்கு காவல் தெய்வமாக இருப்பேன் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது.தற்பொழுதும் அந்த குஞ்சத்தை கிராமத்தில் பாதுகாத்து வருகிறார்கள். வருடம் தோறும் சித்திரை மாதத்தில் விரதம் இருந்து இந்த கோவிலுக்கு இலந்தை முள் கொண்டு கோட்டை அமைக்கப்படுகிறது. தற்போது இந்த கோவிலை எர்ரகோடாங்கி நாயக்கர் வம்சாவளிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

கலாச்சாரமும் பண்பாடும்[தொகு]

இந்த கிராமத்தின் கோட்டை என்று அழைக்கப்படக்கூடிய பகுதியில் பல காவல் தெய்வங்கள் இருந்ததாகவும் அதனால் கோட்டைப்பகுதிக்கு வரும் பொழுது காலணி அணிந்து வருவதும் சைக்கிளில் ஏறிச்செல்வதும் தடைசெய்யப்பட்டு இருந்தன. பின்பு காலப்போக்கில் நாகரீக வளர்ச்சியால் அந்த பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன. இப்பொழுதும் இக்கிராமத்தில் வெளி ஊர்களில் இருந்து வரும் வெளி ஆட்கள் இரவு நேரங்களில் வருவதில்லை. காரணம் கிராமத்தின் காவல் தெய்வங்களே. இங்கு நடக்கும் நாயக்கர்களின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் திருமணம் உட்பட இரவு நேரங்களில் தான் நடக்கும். முதல் நாள் பெண் அழைத்து வருவதிலிருந்து திருமணம் முடிந்த மறுநாள் வரையிலும் நடக்கும் சடங்குகள் பழைய கலாச்சார முறையிலேயே இன்றளவும் நடந்து வருகிறது. மேலும் கம்பளத்தார் மட்டுமே ஆடக்கூடிய தேவராட்டக்கலையை சிறுவயதிலேயே அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருவார்கள். இளைஞர்கள் நாயக்கர் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தேவராட்டம் ஆடிவருகிறார்கள். மாற்று சமூகத்தினருக்கு தேவராட்டம் ஆடக்கூடாது என்ற முன்னோர்களின் கட்டுப்பாட்டையும் வாக்கையும் காப்பாற்றி இன்றளவும் கடை பிடித்து வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீன்_கோடங்கிபட்டி&oldid=3098836" இலிருந்து மீள்விக்கப்பட்டது