சுந்தரலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தளபதி சுந்தரலிங்கம் தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார்.

கும்பினி (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர். தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது[1].

மேலும் நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. சுந்தரலிங்கம் தேவேந்திரர் இனத்தைச் சேர்ந்தவர். 1997 இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. இதனை முக்குலத்தோர்கள் ஏற்க மறுத்ததால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு மாவட்டங்கள், போக்குவத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு இடப்பட்டிருந்த அனைத்து நபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.

வரலாறு[தொகு]

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டுகட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

சுந்தரலிங்கத்தின் பங்கு[தொகு]

வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித்தான் அறியப்படுகிறது. மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம்தான் தெரியவருகிறது.

சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன்,சுந்தரலிங்கத்திற்கு தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். பின்னாளில் இராமநாதபுரத்தில் ஏற்படும் கலவரத்தில் சுந்தரலிங்கமே ஒரு வெள்ளையரை வீழ்த்தி கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட இழுக்குகளை நீக்குவதாக தமிழவேள் என்னும் ஆய்வாளர் நாட்டுபுற பாடல்களை கொண்டு உறுதி செய்கிறார். மேலும் பல ஆய்வாளர்கள் தானாதிபதிதான் வெள்ளையரை கொன்றார் என்றும், மேலும் பல ஆய்வாளர்கள் மற்றவர் (வெள்ளையன்) என்பதால் குழப்பநிலை உள்ளது.

இதன்பின் தான் சுந்தரலிங்கம் துணை படை தளபதியாக கட்டபொம்மனால் நியமிக்கப்படுவதாக தமிழவேள் தனது ஆய்வு மூலம் கூறுகிறார்.

ஊமைதுரையை பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்பதற்கு சுந்தரலிங்கமும், முத்தன், கந்தன் பகடைகள் ஈடுபட்டதாகவும், மேலும் ஏழு நாளில் கோட்டையைக் கட்டி முடித்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக நடக்கும் விருப்பாச்சி மலையில் நடக்கும் போரில் ஊமைதுரையோடு சுந்தரலிங்கம் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதாக தமிழவேள் தனது ஆய்வின் மூலம் தெரிவிக்கிறார். மேலும் சில ஆய்வாளர்களால் சுந்தரலிங்கம் தனது மனைவி வடிவு வோடு , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்ததாக சொல்லப்படுகிறது.

வெண்கலச் சிலை[தொகு]

தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிஎட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மொத்த ஆக்கச் செலவு எட்டு இலட்சம் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  • நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு -வானமாமலை
  • பாஞ்சலகுறிஞ்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்- தமிழவேள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரலிங்கம்&oldid=1875773" இருந்து மீள்விக்கப்பட்டது