கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்
Kodaikanal Solar Observatory
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்
நிறுவனம்இந்திய வானியற்பியல் மையம்
அமைவிடம்கொடைக்கானல், இந்தியா
ஆள்கூறுகள்
10°13′56″N 77°27′53″E / 10.23222°N 77.46472°E / 10.23222; 77.46472
உயரம்2,343 மீட்டர்கள் (7,687 அடி)
இணையதளம்
http://www.iiap.res.in/centers/kodai
Telescopes
வானிறுத்தி60 செ.மீ எதிரொளிர்வி
கிரப்-பார்சன்கள்20 செ.மீ ஒளிவிலக்கி


கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் ( Kodaikanal Solar Observatory) என்பது இந்திய வானியற்பியல் மையத்திற்குச் சொந்தமானதும், அதே நிறுவனத்தால் இயக்கப்படவும் கூடிய ஒரு சூரிய வான் ஆய்வகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பழனி மலையின் தெற்கு உச்சியில் அமைந்துள்ளது.

1909 ஆம் ஆண்டு சனவரி மாதம் இங்குதான் முதன்முதலில் எவர்செட்டு விளைவு கண்டறியப்பட்டது. இந்த ஆய்வகத்தில் திரட்டப்பட்ட சூரிய தரவுகள் இந்தியாவில் கிடைக்கப்பெறும் மிகப்பழமையான தொடர் வரிசைத் தரவுகளாக கருதப்படுகின்றன. பூமத்திய செறிவு மின்னோட்டம் தொடர்பாக இங்குத் திரட்டப்படும் துல்லியமான தரவுகள் தனித்துவம் மிக்கவையாகும்.

அயன மண்டல ஆழம் காணல், புவிகாந்தம், எப் மண்டல செங்குத்து நகர்வு, சூரியனின் மேற்பரப்பு ஆய்வுகள் போன்றவை இங்கு வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இங்கு திரட்டப்படும் தரவுகளின் தொகுப்புகள் தேசியத் தரவு மையம் மற்றும் உலாகாயத் தரவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன[1].

இரண்டு விஞ்ஞானிகளும் 19 தொழில்நுட்ப வல்லுநர்களும் இங்கு முழுநேரப் பணியாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

வரலாறு[தொகு]

1881 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவின் வானிலை ஆய்வுச் செய்தியாளர் பிலான்போர்டு சூரிய ஆய்வுக்கான விதையை விதைத்தார். "பூமியின் மீதான சூரிய வெப்ப சக்தியினை துல்லியமாக அளவிடுவது, குறிப்பிட்ட காலத்திற்கான அதன் வேறுபாடுகள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மேம்பட்ட சூரிய கண்காணிப்பு முறைகள் முதலிய முன்னேற்ற நடவடிக்கைகளை இவர் பரிந்துரைத்தார்.

20 அங்குல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட சூரியன், விண்மீன்களின் புகைப்படங்கள், அவற்றின் கதிர்நிரல் வரைபடங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவமும் அவை குறிப்பாக தென்னிந்தியாவின் மலை வாழிடத்தில் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும்[2] 1882, மே மாதத்தில் நார்மன் இராபர்ட்டு போக்சான் மதராசில் முன்மொழிந்தார்.

1893 ஆம் ஆண்டு மதராசு மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை தொடர்ந்து, சூரியனைப் பற்றிய புரிதல்களை அதிர்கரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. தென்னிந்தியாவின் மிக உயரமான, தூசு குறைந்த கொடைக்கானலில் ஒரு சூரிய இயற்பியல் வான் ஆய்வகத்தை நிறுவிட இலார்டு கெல்வின் முடிவு செய்தார். மிச்சி சிமித் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1895 இல் பணிகள் துரிதமாக நடந்தன. மதராசு வான் ஆய்வகத்திலிருந்த கருவிகள் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் நிறுவப்பட்டது.

இவ்வான் ஆய்வகத்தில் முதலாவது உற்றுநோக்கல் 1901 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன[3]. அயன மண்டலத்தை ஆய்வு செய்வதற்கான அயனமண்டல உயர அளவி, புவிகாந்த வசதிகள் 1955 இல் இங்கு நிறுவப்பட்டன. டி.இராயிட்சு, ஏ.எல். நாராயணன், அமில்குமார் தாசு போன்றவர்கள் 1922 ஆம் ஆண்டுக்கும் 1960 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கு இயக்குநர்களாகப் பணிபுரிந்தனர். வைணு பாப்பு 1960 இல் இங்கு இயக்குநராகப் பதவியேற்றார்[4]. நவீன கதிர் நிரல் வரைபட வசதிகள் கொண்ட 12 மீ சூரிய கோபுரம் ஏ.கே. தாசுவால் 1960 இல் இங்கு நிறுவப்பட்டு சூரியமைய்ய நிலஅதிர்ச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தப்புல வரைபட ஆய்வுமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 1977 இல் இங்கிருந்த வானியல் அறிஞர்கள் பலர் பெங்களூருக்கு மாற்றப்பட்டு அங்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தைத் தொடங்கினர்[5].

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில் தற்பொழுது நடைபெறும் ஆய்வுகள்:

  • செயல் திறனுள்ள மண்டலங்களில் உருவவியல் மாற்றங்களுக்கான அவதானிப்புகள், பொருள் விளக்கம் கூறுதல், சூரியப் பிழம்பு போன்ற நிலைமாறும் இயல்புகள் தோற்றத்தில் இவற்ரின் பங்கு ஆகியனவற்றை ஆய்வு செய்தல்.
  • ஒளிபுகு சூரியப் புறவெளி மண்டல கால்சியம் கே குறிகாட்டிகளுக்கு பங்களிக்கும் காரணிகள் குறித்த ஆய்வுகள்.
  • காந்தப் புலங்களை ஆய்வு செய்தல்.
  • கடைசி 10 சூரிய சுழற்சிகளை எதிர்கால ஆய்வுகளுக்காகப் பயன்படுத்த, 100 ஆண்டுகளுக்கான புகைப்படங்களை எண்மியம் ஆக்குதல்.
  • அயனமண்டலத்து மத்தியக் கோட்டின் அமைப்பு. அதன் இயக்கவியல் போன்றவற்றை ஆய்வு செய்தல், இப்பாதிப்பால் சூரியனுக்கும் விண்மீன்களுக்குமிடையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தல்.
  • மையக்கோட்டின் செறிவு மின்னோட்டத்தை அளவிடுதல் மற்ரும் ஆய்வு மேற்கொள்ளுதல்.
  • மேற்பரப்பு வெப்பம், அழுத்தம், மழைப்பொழிவு போன்ற மணிக்கு மணிக்கு தேவையான புள்ளி விவரங்களை இந்தியா மற்ரும் உலகாய வானிலை அளவீட்டு நிறுவனங்களுக்கு வழங்குதல்.
  • வானியல் நூலகம், இரவு நேர விண்வெளி அவதானிப்பு, பல்கலைக் கழகக் கல்வி, விண்வெளி குறித்த சொற்பொழிவுகள், செயல்முறைப் பட்டறைகள் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை உண்டாக்குதல் முதலிய நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Global Atmosphere Watch, Swiss Federal Laboratories for Materials Testing and Research (EMPA), Dübendorf, Switzerland. Station Characteristics, Kodaikanal பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
  2. MONTHLY WEATHER REVIEW. MAY, 1906
  3. Indian Institute of Astrophysics – A Brief History, Solar Observatory at Kodaikanal, retrieved 3/13/2007.[1]
  4. Bappu, M.K.V. (June 2000). "The Kodaikanal Observatory – A Historical Account". Journal of Astrophysics and Astronomy (Bangalore: Indian Academy of Sciences) 21: 105. doi:10.1007/bf02702374. Bibcode: 2000JApA...21..103.. http://articles.adsabs.harvard.edu//full/seri/JApA./0021//0000105.000.html. 
  5. Swarup Govind, "Historical perspective and research centres in India in the fields of solar astronomy and Sun-Earth relationship," National Centre for Radio Astrophysics, TIFR, Pune 411007, India. retrieved 3/13/2007 [2]