குலக்கல்வித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1953 இல் சென்னை மாநில முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை ஜாதி அமைப்பை பலப்படுத்தும் குலக் கல்வித் திட்டமென திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது.

பொருளடக்கம்

திட்டம் [தொகு]

1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
  2. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
  3. இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
  4. இத்தகு தொழில்கள் (கைவினை மற்றும் வேளாண்மை) செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.
  5. இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
  6. இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.

இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.[1][2][3][4][5]

எதிர்ப்பு [தொகு]

திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்:[6][7][8][9][8]

  1. மாணவர்கள் தத்தமது குலங்களின் தொழிலைக் கற்பது மூலம், ஜாதி முறை நிரந்தரமாகும். ஏற்கனவே கல்வியில் முன்னணியில் உள்ள பிராமணர்களின் ஆதிக்கம் மேலும் பலப்படும்
  2. ஆசிரியர்களுக்கு வேலை நேரமும், பளுவும் கூடினாலும் அதற்கேற்றவாறு ஊதியம் கூடவில்லை
  3. ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அத்திட்டத்தை கொண்டு வந்தார்.
  4. கிராமப்புறப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்த அத்திட்டம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாழாக்கத் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்ட ஒன்றாகும்.

போராட்டங்களும் ஒத்திவைப்பும் [தொகு]

1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாத்துரையின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. சென்னையில் திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.[10][11][5]

கைவிடப்பட்டது [தொகு]

ஆகஸ்ட் 1953 இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954 இல் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.[12][13][14][15][16][17]

குறிப்புகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

மேலும் படிக்க [தொகு]

  • Rajaji, a Life by Rajohan Gandhi ( Chapter: Downfall)
  • The Rajaji Store by Rajmohan Gandhi
"http://ta.wikipedia.org/w/index.php?title=குலக்கல்வித்_திட்டம்&oldid=1353305" இருந்து மீள்விக்கப்பட்டது