குணரத்தினம் அம்மையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணரத்தினம் அம்மையார் (1906-1999) தென்னாப்பிரிக்க அரசியல், சமூக, பொருளாதார உரிமைப் போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்மணி ஆவார். பெண்களின் கல்வி, சுதந்திரம் அகியவற்றில் அக்கறை காட்டியவர். மருத்துவராகப் பணி புரிந்தவர். கேசவலு குணரத்தினம் நாயுடு என்பது இவரது முழுப்பெயர் ஆகும். இருப்பினும் இப்பெயரில் சாதி அடையாளம் உள்ளதால் தம் பெயரைச் சுருக்கமாக டாக்டர் குணம் என்று அமைத்துக் கொண்டார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

இவருடைய தந்தையார் ஆர்.கே.நாயுடு மயிலாடுதுறையில் பிறந்தவர். தாயார் தங்கச்சி நாயுடுவின் குடும்பம் மொரீசியசில் குடியேறியிருந்தது.டாக்டர் குணம் டர்பன் என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கிலப் பள்ளியில் சேர்வதற்கு முன் சத்திய ஞான சபை என்னும் பள்ளியில் தமிழ் படித்தார். இளம் அகவையிலேயே கூர்த்த மதியும் துணிவும் கொண்டு வளர்ந்தார். மருத்துவக் கல்வி பயில ஆசைப்பட்டார். அந்தக் காலத்தில் இந்தியப் பெண்களுக்கு மருத்துவக் கல்வி வசதி தென்னாப்பிரிக்காவில் இல்லை. எனவே 1928 இல் எடின்பர்க்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார்.எடின்பர்க்கில் படித்த காலத்தில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் சி.வி.ராமன், 'சில்வர் டங்' சீனிவாச சாத்திரி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தன.

பொதுப் பணி[தொகு]

மருத்துவப் படிப்பு முடித்து 1936 ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய டாக்டர் குணம் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். அக்காலத்தில் நேட்டாலில் வாழ்ந்து வந்த இந்தியர்களுக்குக் கல்வி உரிமைகள் இல்லை. வேலை வாய்ப்புகள் தரப்படவில்லை. குழந்தைகளுக்குச் சத்துணவு இல்லை. இத்தகைய சூழலில் நேட்டால் இந்தியக் காங்கிரசு தொடங்கப் பட்டது. டாக்டர் குணம் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். நேட்டால் இந்தியக் காங்கிரசின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேட்டால் இந்தியக் காங்கிரசின் அமைப்பு நெறிகளின்படி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. பின்னர் பெண்களுக்கு முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.

போராட்டங்கள்[தொகு]

தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கையால் கருப்பு இனமக்களும் இந்தியர்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர். நிலவுடைமை மற்றும் பிரதிநிதித்துவச் சட்டத்தைக் கொண்டு வந்த தென்னாப்பிரிக்க அரசு இந்தியர்களைத் தனிச்சேரிகளில் ஒதுக்கி வைக்க முடிவு செய்தது. இச்சட்டத்திற்கு எதிராகப் போராட மக்கள் திரண்டனர். அணி அணியாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் டாக்டர் குணம் முன்னணியில் இருந்து போராடினார். 1946 ஆம் ஆண்டு சூன் திங்களில் இவர் சிறைப்படுத்தப்பட்டார்.இப்போராட்டக் காலத்தில் ஜி எம் நாயக்கர், டாக்டர் யூசுப் டாடு போன்ற தலைவர்களுடன் டாக்டர் குணம் தொடர்பு கொண்டார். தென்னாப்பிரிக்க அரசின் அடக்குமுறைகளினால் பல முறை சிறைக்குச் சென்றார்.

பிற பணிகள்[தொகு]

அரசியல் போராட்டங்கள் மட்டுமல்லாது பெண்களின் கல்விக்கும் உரிமைகளுக்கும் பாடுபட்டார். ஊனமுற்றோர் நலத்திற்கு ஆவன செய்தார். செஞ்சிலுவை சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். திருமணங்களுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்வதைக் கண்டித்தார். குழந்தைகள் வளர்ச்சி பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

இறுதிக் காலம்[தொகு]

1970 ஆம் ஆண்டில் இலண்டனுக்குச் சென்றார். ஆத்திரேலியாவிலும் சிம்பாப்வே நாட்டிலும் சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1990 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார். 1994 இல் நடந்த சனநாயகத் தேர்தலில் பங்கு கொண்டார். தம் வாக்குரிமையைப் பயன்படுத்தினார். 1999 ஆம் ஆண்டில் காலமானார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணரத்தினம்_அம்மையார்&oldid=2769756" இலிருந்து மீள்விக்கப்பட்டது