குகென்ஹெயிம் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும்.

நேர்வியன் ஆற்றங்கரையில், குகென்ஹெயிம் நூதனசாலை பில்பாவோ

பிராங்க் கெரி (Frank Gehry) என்னும் கட்டிடக்கலைஞருடைய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம், 1997ல் பொதுமக்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டதுமே, உலகின் கவர்ச்சிகரமான, நவீன கட்டிடங்களிலொன்றாகப் பிரபலமானது. இந்த நூதனசாலையின் வடிவமைப்பும், கட்டுமானமும், பிராங்க் கெரியின் பாணியினதும், வழிமுறைகளினதும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கெரியின் மற்ற கட்டிடங்களைப் போலவே, இக் கட்டிடமும், தீவிர சிற்பத்தன்மையுடையதாகவும், இயல்பான வளைவுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. முழுக்கட்டிடத்தில் எங்கேயுமே தட்டையான மேற்பரப்பு இல்லையென்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைப் பாலமொன்று கட்டிடத்தின் ஒரு பகுதிக்குக் குறுக்கே செல்கிறது, கட்டிடத்தின் பெரும் பகுதி, கடதாசித் தடிப்புள்ள டைட்டேனியம் தகடுகளால் மூடப்பட்டுள்ளது.

கட்டிடம், துறைமுக நகரமொன்றில் அமைக்கப்பட்டதால், ஒரு கப்பலைப்போலத் தோன்றவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மினுக்கமான தகடுகள் மீன் செதில்களை ஒத்துள்ளன. இவை, கெரியின் வடிவமைப்புகளில் அடிக்கடி காணப்படும் organic வடிவங்களைக் குறிப்பாக மீன்போன்ற அமைப்புக்களைப் பிரதிபலிப்பதுடன், அது அமைந்திருக்கும் நேர்வியன் ஆற்றையும் நினைவூட்டுகிறது.

அத்துடன் கெரியின் வழமையான தன்மைக்கு ஒப்பக் கட்டிடம் தனித்துவமான, காலத்தோடிசைந்த தொழில்நுட்பத்தின் உற்பத்தியாகவும் உள்ளது. கட்டிடத்தின் வடிவமைப்பில் பெருமளவுக்குக் கணினி உதவி வடிவமைப்பு (Computer aided design) முதலியன பயன்படுத்தப்பட்டன. கட்டிட அமைப்பின் கணனி simulations, முந்திய சகாப்தத்தின் கட்டிடக்கலைஞர்களால் நினைத்துப் பார்த்திருக்க முடியாத பல விடயங்களை முடியக்கூடியனவாக்கிற்று. கட்டுமானத்தின்போது, கற்பலகைகள் "லேசர்" எனப்படும் சீரொளிக் கதிர் கொண்டு வெட்டப்பட்டன.

இந்த நூதனசாலை, பில்போ நகரத்துக்கும், பாஸ்க் நாட்டிற்குமான புத்தூக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகத் திறந்துவைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட உடனேயே, குகென்ஹெயிம் பில்போ, உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளைக் கொண்டுவரும், ஒரு பிரபல சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடமாகியது. பில்போவை உலகப்படத்தில் இடம்பெறச் செய்த பெருமையில் பெரும் பங்கு இக்கட்டிடத்துக்கும் உரியதென்று பரவலாகக் கருதப்படுகிறது.

இங்குள்ள காட்சிப்பொருள்கள் அடிக்கடி மாறுகின்றன. பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டுக் கலைப் பொருட்களாகும். பாரம்பரிய ஓவியங்களும், சிற்பங்களும் சிறுபான்மையே.

வெளி இணைப்புகள்[தொகு]