கிருஷ்ண பக்தி
| கிருஷ்ண பக்தி | |
|---|---|
| இயக்குனர் | ஆர். எஸ். மணி |
| தயாரிப்பாளர் | லேனா செட்டியார் |
| நடிப்பு | பி. யு. சின்னப்பா கே. ஆர். ராமசாமி என். எஸ். கிருஷ்ணன் சிதம்பரம் ஜெயராமன் டி. பாலசுப்பிரமணியம் டி. ஆர். ராஜகுமாரி எஸ். பி. எல். தனலட்சுமி டி. ஏ. மதுரம் பி. ஏ. பெரியநாயகி ஏ. ஆர். சகுந்தலா எம். எல். வசந்தகுமாரி |
| இசையமைப்பு | எஸ். வி. வெங்கட்ராமன் குன்னக்குடி வெங்கட்ராம ஜயர் |
| விநியோகம் | கிருஷ்ணா பிக்சர்ஸ் |
| வெளியீடு | சனவரி 14, 1949 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கிருஷ்ண பக்தி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
உடுமலை நாராயணகவி எழுதிய பாடல்களை பி. யு. சின்னப்பா, எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர் பாடியுள்ளனர். லேனா என அழைக்கப்பட்ட எஸ். எம். லட்சுமணன் செட்டியார் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.
எஸ். டி. எஸ். யோகி, சுத்தானந்த பாரதியார், கு. ப. சேது அம்மாள், சாண்டில்யன் ஆகியோர் திரைக்கதை வசனம் எழுதியிருந்தனர். எம். எல். வசந்தகுமாரி இப்படத்தில் மட்டுமே பாடி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரைக்கதை [தொகு]
பரம பாகவத சிரோன்மணி என்ற வெளிவேடமிட்டு ஊரை ஏமாற்றும் வஞ்சகன் ஒருவன், ராஜசிம்மன் எனும் மன்னனிடம் ராஜகுருவாக (பி. யு. சின்னப்பா) இருக்கிறான். அவனது போலிப் பக்தியை உண்மை என நம்பி, அவனது வஞ்சக வலையில் வீழ்ந்து விடுகிறாள் தேவகுமாரி (டி. ஆர். ராஜகுமாரி) என்ற அழகிய தேவதாசி. தன்னைக் குருவாகக் கருதி வந்த தேவகுமாரியை, ராஜகுரு கெடுக்க நினைக்கும் போது, அவனது மனச்சாட்சி அனவது பரம விரோதியாக உருவெடுத்து அவன் தவறை விளக்கி, உபதேசம் செய்கிறது. திருந்திய ராஜகுரு தேவகுமாரியைத் தன் குருவாக எண்ணி, ஓர் உண்மை பக்தனாக மாறுகிறான்.