கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) என்றப் பட்டம் உலக சதுரங்க விளையாட்டை ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினால் சதுரங்க விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். உலக வாகையாளர் பட்டத்தைத் தவிர இந்த அமைப்பு வழங்கும் மிக உயரிய பட்டம் இதுவேயாகும்.

இந்த நிலையை எய்தியவர் தம் வாழ்நாள் முழுமையும் இப்பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சதுரங்க குறிப்பேடுகளில் இது பொதுவாக ஜிஎம் என சுருக்கமாகக் குறிப்பிடப் படுகிறது. சில நேரங்களில் பன்னாட்டு கிராண்ட் மாஸ்டர் என்பதன் சுருக்கமாக ஐஜிஎம் எனவும், குறிப்பாக பழைய நூல்களில், பயன்படுத்தப்படுகிறது.

கிராண்ட் மாஸ்டர், பன்னாட்டு மாஸ்டர், மற்றும் பிடீ மாஸ்டர் என்பன ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. 1978இல் நோனா கேப்ரின்டாஷ்விலி முதல் பெண் ஜிஎம்மாக பட்டம் பெற்றார். உலகப் பெண்கள் வாகையர் பட்டத்தை வென்ற இவருக்கு ஃபிடீ இந்தப் பட்டதை சிறப்பு விலக்காக அளித்தது. ஆண்களுடன் விளையாடி இந்தப் பட்டத்தை வென்ற முதல் பெண்மணி சூசன் போல்கர் ஆவார். இவர் 1991இல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் பத்து இடங்களில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் ஜிஎம் பட்டம் பெற்றவர்களாவர்.

பெண்களுக்கெனத் தனிப்பட்ட பட்டமாக பெண்கள் கிராண்ட் மாஸ்டர் (WGM) என்ற பட்டமும் ஃபிடீ மாஸ்டர் நிலைக்கும் பன்னாட்டு மாஸ்டர் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]