ஒலிபெருக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானொலி, கணினி முதலியவற்றில் காணப்படும் எளிமையான விரிகூம்பு ஒலிபெருக்கி. இது மலிவாகக் கிடைக்கும், குறைந்த விலையுடைய, குறைந்த திறனுடனும் குறைந்த ஒலிதரத்துடனும் ஒலிபெருக்கும் வகையைச் சேர்ந்த ஓர் ஒலிபெருக்கி.
விலை மிக்க, உயர்ந்த ஒலிதரம் கொண்ட நான்கு-வகை ஒலிபெருக்கி அமைப்பு அல்லது ஒலிபெருக்கி ஒருங்கியம்.

ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை மிகைப்படுத்தி அல்லது பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஆனால் பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி (பண்புமாற்றி அல்லது டிராசிடியூசர் வழி மாற்றி), தக்கமுறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். இதில் குறிப்பாக மிகைப்படுத்தப்பட்ட மின்னலைகளை ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். கருத்தளவில் இதுவொரு மின்-ஒலி மாற்றி (ஒரு பண்புமாற்றி). ஆங்கிலத்தில் இதனை எலக்ட்ரோ-அக்கூசிட்டிக் (electroacoustic) பண்புமாற்றி என்பர். பண்புமாற்றியை ஆங்கிலத்தில் டிரான்சிடியூசர்( transducer) என்பர். ஆங்கிலத்தில் வழங்கும் அக்கூசிட்டிக் (accoustic) என்னும் சொல்லின் பொருள் கேட்கும் ஒலியைப் பற்றியது என்பதாகும்.

ஒலிபெருக்கி எப்படி இயங்குகின்றது ?[தொகு]

ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக அசையும், அதாவது எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றார்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிச்சுருளுக்கு மின்சுருள் என்று பெயர். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றார்போல காந்தப் புலம் வெவ்வேறு அளவிலும் திசையிலும் ஏற்படும். இப்படி ஏற்படும் காந்தப்புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவாதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.

பரவலாகக் காணப்படும் ஓர் ஒலிபெருக்கியின் படம். இதில் சிவப்பாக தெரியும் பகுதி நிலைக்காந்தம் (permanent magnet). மின்சுருளுக்கு இணைப்பு தர இரண்டு மின் முனைகள் இருப்பதையும் பார்க்கலாம். அதிரும் விரிகூம்பையும் காண்க. மின்சுருளின் மின்தடையை 3 ஓம் (ohm) என்று குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கவும்
உயர் அதிர்வெண் ஒலிகளை ஒலிபெருக்கும் துடியன் என்னும் ஒலிபெருக்கியின் உட்புற அமைப்பு. வணிகப்பெயரான செலீனியம் டி.டபிள்யூ.1 (Selenium TW1) எனப்படும் வரிசையைச் சேர்ந்த இத் துடியனின் (tweeter) உட்பாகங்கள், இடமிருந்து வலமாக: அடித்தளம், காந்தம், அதிரும் மேல்தட்டு, தாங்கி, ஒலியைத் தூண்டும் சுருள், மேல் முகப்புச் சட்டி

பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேள்-ஒலி (கேளொலி) என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஏர்ட்ஃசு (hertz) வரை இருக்கும். அவை எல்லாவற்றையும் மின்னலையாக மாற்றும் பொழுது சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெவ்வேறான அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் சீராக மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்தி மீண்டும் ஒலியலைகளாக மாற்றும்பொழுது அவ்வொலியலைகளை மாற்றும் கருவிகள் ஒரே சீரான தரத்துடனும் துல்லியத்துடனும் மாற்றுவதில்லை. இக்குறைபாடுகள் ஒலிதரத்தைக் குறைக்கின்றது. இதனை ஒலிதரத்திரிபு என்பர். இதனை ஒலித்தரச் சரிவு என்றும் கூறலாம். இதனால் கேட்கும் ஒலித்தரத்தை உயர்த்த வெவ்வேறு வகையான ஒலிபெருக்கிகளும் பயன்படுத்துவதுண்டு. குறைந்த அதிர்வெண் கொண்ட (அதிக அலைநீளங்கள் கொண்ட) ஒலியலைகளை திறம்பட மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு அடிபெருக்கி அல்லது முரசம் (வூஃவர், woofer) என்றுபெயர், அதேபோல அதிக அதிர்வெண் கொண்ட உயர் துடிப்பு கொண்ட (குறைந்த அலைநீளம் கொண்ட) ஒலியலைகளைப் பெருக்கும் கருவிகளுக்கு துடியன் (டுவீட்டர், tweeter), மிகுதுடியன் (சூப்பர் டுவீட்டர், supertweeter) என்றும் பெயர். ஒலிபெருக்கி நுட்பியலில் (தொழில்நுட்பத்தில்) கேளொலி அதிர்வெண் பட்டையை (அடுக்கத்தை)ப் பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.

வரலாறு[தொகு]

தொலைபேசி வரலாற்றில் புகழ்பெற்ற யோஃகான் ஃவிலிப் ரைசு (Johann Philipp Reis) என்பார் முதன் முதலில் தொலைபேசிக்கான ஒலிபெருக்கி ஒன்றை 1861 இல் உருவாக்கினார். ஆனால் ஓரளவுக்கு பேச்சொலியை அப்படியே மிகைப்படுத்த வல்லதாக இருந்தது. பின்னர் 1876 இல் அலெக்ஃசாண்டர் கிராம் பெல் தன்னுடைய தொலைபேசிக்கான ஓர் ஒலிபெருக்கியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். பின்னர் 1877 இல் எர்ணசுட்டு சீமனும் (Ernst Siemens), அதன் பின்னர் 1881 இல் நிக்கோலா டெசுலாவும் ஒலிபெருக்கிகள் செய்தனர்[1]. தாமசு எடிசன் தன்னுடைய உருளை ஃவோனோகிராஃவ் (phonograph) என்னும் கருவிக்காக ஒரு ஒலி மிகைப்புக் கருவியைக் கண்டுபிடித்து பிரித்தானிய காப்புரிமம் வென்றார். 1898 இல் அழுத்தத்தில் உள்ள காற்றின் அடிப்படையில் இயங்கிய ஒரு ஒலி பெருக்கிக் கருவிக்கு ஓரேசு சார்ட் (Horace Short) என்பவர் ஒரு காப்புரிமம் பெற்றார். ஆனால் இவை எல்லாமும் போதிய ஒலிமிகைப்புத் தரமும் திறமும் கொண்டவையாக இல்லை.

தற்காலத்தில் பயன்படும் பல வகையான ஒலிபெருக்கிகள் ஆல்வர் லாட்ச் (Oliver Lodge) என்பார் 1898 இல் தொடங்கி நிலைநிறுத்திய நகர்-சுருள் இயக்கி வகையைச் சேர்ந்த ஒலிபெருக்கிகள் ஆகும்.[2] இவற்றை செயல்முறையில் முதன்முதல் செய்து பரப்பியவர்கள் கலிபோர்னியாவில் உள்ள நாப்பா என்னும் இடத்தில் இருந்த பீட்டர் எல். சென்சனும் (Peter L. Jensen) எடுவின் பிரிதாமும் ஆவர். தொலைபேசிகளில் பயன்படுத்த சென்சனுக்கு காப்புரிமம் தர மறுத்துவிட்டார்கள், எனவே இவர்கள் 1915 இல் இதனை வேறுவிதமாக மாற்றி, பொதுக்கூட்டத்தில் பயன்படுமாறு உள்ள மாகுனோவாக்ஃசு (Magnovox) என்னும் கருவியை உருவாக்கினர்.[3]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Tesla and the Loudspeaker". பார்க்கப்பட்ட நாள் 2007-02-21.
  2. "Loudspeaker History". Archived from the original on 2006-09-05. பார்க்கப்பட்ட நாள் 2007-02-21.
  3. "Jensen History". Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2009-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிபெருக்கி&oldid=3547018" இலிருந்து மீள்விக்கப்பட்டது