இருதயகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருதயகுமாரி
பிறப்புஇருதயகுமாரி
1930
ஆறன்முளா (தற்போதைய கேரளம்), இந்தியா
இறப்பு8 நவம்பர் 2014
தொழில்
  • எழுத்தாளர்
  • கல்வியாளர்
  • மொழிபெயர்ப்பாளர்
மொழிமலையாளம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கல்பனிகதா
குறிப்பிடத்தக்க விருதுகள்கேரள சாகித்ய அகதாமி விருது
பெற்றோர்போதேசுவரன் (தந்தை)

இருதயகுமாரி ( Hridayakumari ) (1930 - 8 நவம்பர் 2014) ஓர் இந்திய எழுத்தாளரும், கல்வியாளரும், அறிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் பேச்சாளரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாள மொழியில் எழுதினார். மேலும் 1991 இல், இவரது கல்பனிகதா என்ற புத்தகத்திற்கு கேரள சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

தொழில்[தொகு]

இருதயகுமாரி கேரள மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து ஆங்கிலத்தைக் கற்பித்தார். இறுதியில் 1986 இல் திருவனந்தபுரத்தில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணி ஓய்வு பெற்றார்.[1][2] இவர் முன்பு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் கற்பித்தார்; எர்ணாகுளம் மகாராஜாவின் கல்லூரியிலும், தலச்சேரியில் உள்ள பிரென்னன் கல்லூரியிலும், பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியிலும் கற்பித்தார்.[1] இவர் எஸ் குப்தன் நாயர் விருது, கேப்டன் லட்சுமி விருது, சங்கரநாராயணன் தம்பி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ருள்ளார்.[3][4]

இலக்கியப் பணிகள்[தொகு]

ஓய்வு பெற்ற பின்னர் இருதயகுமாரி இலக்கியம், கவிதை மற்றும் தத்துவம் பற்றிய பொது விரிவுரைகளை வழங்கினார்.[2] கேரளாவில் கல்விச் சீர்திருத்தங்களைக் கையாளும் பல அரசாங்கக் குழுக்களிலும் இவர் பணியாற்றினார். மேலும் கல்லூரியின் தேர்வுக் கட்டமைப்புகளை சீர்திருத்துவதற்காக கேரள மாநில உயர்கல்வி அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[3][5]

இவர் இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். கல்பனிகதா என்ற இவரது புத்தகம் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஜான் கீட்ஸ், பெர்சி பைச்சு செல்லி மற்றும் குமரன் ஆசான், சங்கம்புழா கிருட்டிண பிள்ளை மற்றும் எடப்பள்ளி ராகவன் பிள்ளை போன்ற ஆங்கில மற்றும் மலையாளக் கவிஞர்களை ஒப்பிட்டு, இலக்கியத்தில் புனைவியம் பற்றிய ஆய்வாகும்.[1] 1991 இல், கல்பனிகதா கேரள சாகித்ய அகாதமி விருதை வென்றது.[1] பின்னர் அவர் ஓர்மகளிலே வசந்தகாலம் என்ற சுயசரிதையை வெளியிட்டார். அதில் இவர் ஆசிரியராக இருந்த அனுபவங்களை விவரித்தார்.[1][6]

இருதயகுமாரி தனது சகோதரியும், கவிஞருமான சுகதகுமாரியின் கவிதைகள், அத்துடன் வள்ளத்தோள் நாராயண மேனன் (மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு) மற்றும் இரவீந்திரநாத் தாகூர் (ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு) ஆகியோரின் படைப்புகள் உட்பட பல படைப்புகளை மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் இடையில் மொழிபெயர்த்துள்ளார்.[6] இருதயகுமாரி, சுகதகுமாரியின் சாகித்ய-அகாடமி விருது பெற்ற ராத்திரிமழா என்ற புதினத்தை மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.[6]

சொந்த வாழ்க்கை[தொகு]

இருதயகுமாரி 1930 ஆம் ஆண்டு ஆரன்முலாவில், சமசுகிருத பேராசிரியரும், அறிஞருமான வி. கே. கார்த்யாயனிக்கும், கவிஞரும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான போதேசுவரனுக்கும் மகளாகப் பிறந்தார்.[4][3]இவரது சகோதரிகளான சுகதகுமாரி மற்றும் போ. சுஜாதா தேவி ஆகிய இருவரும் எழுத்தாளர்களாகவும் மற்றும் சமூக ஆர்வலர்களாகவும் உள்ளனர்.[2] இவரது மகள் சிறீதேவி பிள்ளை ஒரு பத்திரிகையாளர்.[2]

இறப்பு[தொகு]

இருதயகுமாரி அவர் 8 நவம்பர் 2014 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 TNN (9 November 2014). "Writer, critic and noted educationist Hridayakumari dead | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  2. 2.0 2.1 2.2 2.3 "Writer Hridayakumari passes away". Business Standard India. Press Trust of India. 2014-11-08. https://www.business-standard.com/article/pti-stories/writer-hridayakumari-passes-away-114110800364_1.html. 
  3. 3.0 3.1 3.2 Trivandrum), T. K. Devasia (Reporting from. "Noted writer Hridayakumari passes away". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  4. 4.0 4.1 "Tearful Adieu to Doyenne of Teaching". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  5. "Noted Malayalam Writer B. Hridayakumari Dead". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  6. 6.0 6.1 6.2 "Three sisters and four Akademi awards: Sugathakumari and her writer siblings". The News Minute (in ஆங்கிலம்). 2020-12-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதயகுமாரி&oldid=3894686" இலிருந்து மீள்விக்கப்பட்டது