இராணி சுகந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகந்தா
சிறீ சுகந்த தேவன்
இராணி சுகந்தாவின் நாணயம். 'சிறீ சுகந்த தேவன்' என சாரதா எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
காஷ்மீரின் இராணி
ஆட்சிக்காலம்பொ.ச. 904 – 906
முன்னையவர்சங்கரவர்மன்
பின்னையவர்பார்த்தா
காஷ்மீரின் சிம்மாசனத்திற்கு பொறுப்பானவர்
பொறுப்பு906 – 914
காஷ்மீரின் ஆட்சிப் பிரதிநிதி
பதவிக் காலம்902 – 904
முடியாட்சிகோபாலவர்மன்
காஷ்மீரின் ஆட்சிப் பிரதிநிதி
பதவிக் காலம்883 – 902
முடியாட்சிசங்கரவர்மன்
இறப்பு914 பொ.ச.
நிஸ்பாலக விகாரம்
துணைவர்சங்கரவர்மன்
குழந்தைகளின்
பெயர்கள்
கோபாலவர்மன்
மரபுஉத்பால வம்சம்
தந்தைசுவாமிராஜா
மதம்இந்து சமயம்

சுகந்தா (Sugandha: ஆட்சிக் காலம்; பொ.ச. 883 – 914) 10-ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தில் காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தார். இவர் காஷ்மீரின் மன்னரான சங்கரவர்மனை மணந்தார். மேலும் பொ.ச.885 முதல் 902-இல் சங்கரவர்மன் இறக்கும் வரை காஷ்மீரின் இராணி மனைவியாக இருந்தார். பின்னர், தனது மகன் கோபாலவர்மனின் சிறுவயது காரணமாக ஆட்சியாளரானார். 904-இல் அரியணைக்கு வாரிசுகளான அனைத்து வாரிசுகளும் இறந்தபோது காஷ்மீர் ராணியாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் இவர் 906 இல் தந்திரிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர்கள் பார்த்தா என்பவரை மன்னராக நிறுவினர். சுகந்தா காஷ்மீரின் அரியணையைத் தொடர்ந்து உரிமை கொண்டாடி, பின்வாங்கி அஸ்கபுரத்தில் (இன்றைய உஷ்கூர், பாரமுல்லா) வசித்தார். 914-இல் இவர் பார்த்தா மற்றும் தந்திரிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். ஆனால் போரில் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 'நிஸ்பாலக விகாரம்' என்ற புத்த மடாலயத்தில் கொல்லப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும் திருமணமும்[தொகு]

சுகந்தா, காஷ்மீருக்கு அருகிலுள்ள ஒரு இராச்சியத்தின் மன்னரான சுவாமிராஜாவின் மகளாவார். அவருக்கு சுரேந்திரவதி என்ற மனைவி உட்பட குறைந்தது மூன்று ராணிகள் இருந்தனர்.[1] பொ.ச. 885 முதல் 902 வரை காஷ்மீரின் மன்னராக ஆட்சி செய்த சங்கரவர்மனை சுகந்தா மணந்தார்.[1] சங்கரவர்மன் 902 இல் உருஷா என்ற இடத்தில் (இன்றைய ஹசாரா, பாக்கித்தான் ) ஏற்பட்ட ஒரு போரில் ஒரு அம்பு எய்ததில் இறந்தார்.[2] பின்னர், இவரது மகன் கோபாலவர்மன் ஆட்சிக்கு வந்தார். சுகந்தா கோபாலவர்மனுக்கு ஆட்சிப் பிரநிதியாக செயல்பட ஆரம்பித்தார்.[1]

சுகந்தா இராச்சிஜியத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதில் சிறந்தவராக இருந்தபோதிலும், தனது உடல் இச்சைளில் மகிழ்ச்சியடைந்தார். பல்வேறு வரலாற்றாசிரியர்கள் இவர் தனது கருவூல அமைச்சர் பிரபாகரதேவனுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் இவரை அவரது துணைவியார் என்று வர்ணிக்கின்றனர். பிரபாகரதேவன் மன்னரின் உண்மையான அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.[2] அவர் நீண்டகாலமாக அரசுக் கருவூலத்தைத் திருடுவதில் ஈடுபட்டார். இறுதியாக கோபாலவர்மனால் விசாரிக்கப்பட்டார். காலப்போக்கில், பிரபாகரதேவன் தனது உறவினரான இராமதேவனை மாந்திரீகத்தின் மூலம் மன்னரைக் கொலை செய்ய நியமித்தார். கோபாலவர்மன் காய்ச்சலால் இறந்தார். இராமதேவனின் சதி வெளிப்பட்டதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.[1][2][3]

கோபாலவர்மனின் மரணத்திற்குப் பிறகு, அவரது சகோதரர் சங்கதா மன்னரானார், ஆனால் அவரும் பத்து நாட்களுக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்தார்.[1] சங்கரவர்மனின் பரம்பரை அழிந்த பிறகு, காஷ்மீர் அரசியல் கொந்தளிப்பில் விழுந்தது. இந்த நேரத்தில் அரசவையினர் சதி செய்யத் தொடங்கினர். இரச்சியத்தின் ஆட்சியாளரைத் தேர்வு செய்ய மகா-பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் பொது நபர்கள் அடங்கிய ஒரு குழு கூடியது. சுகந்தா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததால், இவர் காஷ்மீரின் இறையாண்மையாக அறிவிக்கப்பட்டார்.[2]

ஆட்சி[தொகு]

பொ.ச.904 இல், சுகந்தா அரச அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு காஷ்மீரை தனது சொந்த உரிமையில் ஆட்சி செய்தார். கோபாலவர்மனின் மனைவி ஜெயலட்சுமியின் இன்னும் பிறக்காத குழந்தையான தனது பேரனுக்காக நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் அதைச் செய்ததாக சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.[1]

தனது பிறக்காத பேரன், தனக்குப் பிறகு ஆட்சிக்கு வருவார் என்று இவர் நம்பினார். ஆனால் ஜெயலட்சுமியின் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறாந்தது. இதனால் விரக்தியில் இருந்த சுகந்தா, தன் இரத்த உறவினர்களில் ஒருவரான சுரவர்மனின் பேரனும், அவந்திவர்மனின் ஒன்றுவிட்ட சகோதரனுமான "பாங்கு" (ஊனமுற்றவர்) என்ற புனைபெயர் கொண்ட நிர்ஜிதவர்மன் தனக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி,[1] அரியணைக்கு நியமித்தார் இதைச் செய்ய, இவர் மந்திரிகளின் ஆலோசனையையும் அனுமதியையும் பெற வேண்டியிருந்தது.[3] நிர்ஜிதவர்மனின் ஊனம் காரணமாக, அமைச்சர்கள் மற்றும் தந்திரிகளிடமிருந்து சுகந்தாவின் தேர்வு கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தது. சுகந்தா தந்திரிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக நிர்ஜிதவர்மனின் பத்து வயது மகன் பார்த்தாவை மன்னராக நியமித்தார்கள்.[1][4] பொ.ச 906-இல் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுகந்தா காஷ்மீரின் அரியணையைத் தொடர்ந்து உரிமை கோரினார். மேலும் அஸ்கபுரத்தில் (தற்போதைய உஷ்கூர், பாரமுல்லா) வசிப்பதற்காக பின்வாங்கினார்.[2]

சிறையும் மரணமும்[தொகு]

பொ.ச.914 இல், அஸ்கபுரத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுகந்தாவை ஏகாங்கர்கள், அரச மெய்க்காப்பாளர்கள் , அவருக்கு விசுவாசமான பிற பிரிவுகள், பார்த்தா மற்றும் தந்திரிகளுக்கு எதிராகப் போரை நடத்தும்படி வற்புறுத்தினார்கள்.[5] ஏப்ரல் 914 இல் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் கடுமையான போர் நடந்தது.[2] இவர் தந்திரிகளால் தோற்கடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டாள். சுகந்தா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிஸ்பாலக விஹாரம் என்ற புத்த மடாலயத்தில் கொல்லப்பட்டார்.[1] கல்கணர் இதை: "விசித்திரமானவை விதியின் வழிகள், எப்போதும் விழுந்து எழும்புகின்றன" என விவரிக்கிறார்.

மரபு[தொகு]

இன்றைய காஷ்மீரின் பதானிலுள்ள சங்கர கௌரீசுவரர் கோவில் (இடது), சுகந்தேசுவரர் கோவில் (வலது)

சில வரலாற்றாசிரியர்கள் இவரது ஆட்சியை காஷ்மீரின் "பொற்காலம்" என்று அழைக்கின்றனர். வரலாற்றாசிரியர் பிரேம்நாத் பசாஸ், "இவர் மக்களால் நேசிக்கப்பட்டார். அரசவையாளர்களால் நம்பப்பட்டார். இராணுவத்தால் போற்றப்பட்டார்" என்று கூறுகிறார்.[2]

சுகந்தாவின் ஆட்சியானது காஷ்மீரின் வரலாற்றில் ஒரு பெண் இறையாண்மையின் முதல் உறுதியான மற்றும் வரலாற்று ரீதியாக சரிபார்க்கக்கூடிய ஆட்சியை உருவாக்கியது. மேலும் தனது குடிமக்களின் விருப்பத்தின் பேரில் ஆட்சி செய்தார்.[6][7]

சுகந்தா தனது ஆட்சியின் போது, சுகந்தபுரம், கோபாலபுரம் போன்ற நகரங்களையும், கோபாலகேசவம் என்ற விஷ்ணு கோவிலையும், கோபாலமடம் என்ற மடத்தையும் கட்டினார். இவர் பதானில் அமைந்துள்ள சுகந்தேசக் கோவிலையும் கட்டினார்.[8]

சங்கரவர்மன், சுகந்தாவுடன் இணைந்து, சங்கரபுரத்தின் புதிய தலைநகரில், சங்கர கௌரீசுவரர், சுகந்தேசுவரர் என்ற இரண்டு கோவில்களை எழுப்பி மகாதேவருக்கு அர்ப்பணித்தார். இந்த இரண்டு கம்பீரமான கோவில்கள் இன்றும் நவீன கால பதானில் நிற்கின்றன.[9]

சுகந்தாவின் நாணயம் இவரது சக்திக்கு ஒரு முக்கியமான உறுதிப்படுத்தும் சான்றாகும். மேலும், அது 'சிறீசுகந்த தேவன்' என்ற ஆண்பால் அடைமொழியால் இவரைக் குறிக்கிறது.[7] பெரும்பாலான நாணயங்களில் இலட்சுமி இலலிதாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் சாரதா எழுத்துகளும் தெளிவாகத் தெரிகிறது.[10]

இதனையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Stein, Mark Aurel (1989a) [1900], Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir, Volume 1 (Reprinted ed.), Motilal Banarsidass, ISBN 978-81-208-0369-5
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Kashmir's Fairer Lords". Kashmir Life. 19 January 2016. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
  3. 3.0 3.1 Bamzai, P.N.K. (1994). Culture and Political History of Kashmir: Volume 1. M.D. Publications. பக். 139–140. https://www.google.co.in/books/edition/Culture_and_Political_History_of_Kashmir/1eMfzTBcXcYC?hl=en&gbpv=0. 
  4. Cunningham, Lieutenant A.; Engineers, Bengal (1843), "The Ancient Coinage of Kashmir. With Chronological and Historical Notes, from the Commencement of the Christian Era to the Conquest of the Country by the Moguls", The Numismatic Chronicle and Journal of the Numismatic Society, pp. 1–38, JSTOR 42720623
  5. Thapar, Romila. A History of India, vol. 1. London: Penguin Books, 1987. pp. 225–226.
  6. Coins in India: Power and Communication. Marg Publications. 
  7. 7.0 7.1 "Five extraordinary Indian queens who have been reduced to mere footnotes in history". Scroll.in. 19 April 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
  8. "The Sugandesha Temple". Travel the Himalayas. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
  9. Lawrence, Sir Walter Roper (2005). The Valley of Kashmir. Asian Educational Services. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120616301. 
  10. "Affirmation of women empowerment: Women on Indian coins-I". Mintage World. 24 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_சுகந்தா&oldid=3448462" இலிருந்து மீள்விக்கப்பட்டது