இயேசு பேசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசு மற்றும் அவரது சீடர்களின் மொழி அரமேயம் என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்தொற்றுமை நிலவுகிறது.[1][2] பொ. ஊ. முதலாம் நூற்றாண்டு யூதேயாவில் பொதுவான மொழியாக இருந்தது அரமேயம் ஆகும். கலிலேயாவில் இருந்த நாசரேத்து மற்றும் கப்பர்நாகும் கிராமங்களில் இயேசு தன்னுடைய பெரும்பாலான நாட்களைக் கழித்தார். இவை அரமேயம் பேசிய சமுதாயக் குழுக்களாகும்.[3] இயேசு அநேகமாக அரமேயத்தின் ஒரு கலிலேய வழக்கு மொழியைப் பேசி இருப்பார் என்று கருதப்படுகிறது. எருசேலத்தில் பேசிய வழக்கு மொழியிலிருந்து இது வேறுபட்ட வடிவத்தில் இருந்தது.[4] இவரது திருத்தூதர்களின் குறியீட்டு மறு பெயர்கள் அல்லது பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இயேசு மற்றும் குறைந்தது இவரது திருத்தூதர்களில் ஒருவர் யூதேயாவை பூர்வீகமாகக் கொண்டிராதவர்களுடன் பேசும் அளவிற்கு போதிய கொயினே கிரேக்கத்தையும் அறிந்திருந்தனர் என்று கருதப்படுகிறது. சமயத் தேவைகளுக்காக எபிரேயத்தையும் இயேசு நன்றாக அறிந்திருந்திருக்க வேண்டும் என்பதும் உகந்ததாக உள்ளது.[5][6][7][8]

பல மொழிகள் நிலவிய பண்பாடு[தொகு]

இயேசுவின் பணி பெரும்பாலும் நாசரேத்து மற்றும் கப்பர்நாகும் என்னும் ஊர்களில் நிகழ்ந்தது. அவ்விடங்களில் மக்கள் பெரும்பாலும் அரமேய மொழி பேசினர். மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்திருந்த பெருநகர்களில் கிரேக்க மொழியும் வழங்கியது. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த விவிலியம் பற்றி விவாதிக்கும் அளவுக்காவது இயேசுவுக்கு எபிரேயம் தெரிந்திருக்கலாம். மக்கள் நடுவே வழங்கிய கொய்னே (Koine) என்னும் நடைமுறைக் கிரேக்கமும் அவருக்குத் தெரிந்திருக்கும் எனலாம்.

1) இலத்தீன் மொழி[தொகு]

இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டில் இலத்தீன் மொழி பெரும்பாலும் உரோமை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. உரோமையர் கி.மு. 63இல் பாலஸ்தீன நாட்டில் ஆட்சி அதிகாரம் திணிக்கத் தொடங்கினர். ஆனால் அக்காலத்தில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் இலத்தீன் வழக்கத்திற்கு வரவில்லை.

2) கிரேக்க மொழி[தொகு]

இலத்தீனைவிட கிரேக்க மொழி இயேசு வாழ்ந்த நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அலக்சாந்தர் மன்னர் (கி.மு. 356 - கி.மு. 323) பாலஸ்தீனப் பகுதியை கி.மு. 331இல் கிரேக்க ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் அங்கே கிரேக்க கலாச்சாரமும் மொழியும் பரவின. குறிப்பாக, துறைமுகப் பட்டினங்களில் கிரேக்க தாக்கம் மிகுதியாக இருந்தது. ஆயினும் அரமேய மொழியே யூதர் நடுவில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

இயேசு கிரேக்க மொழியைச் சிறப்பாகக் கற்றறிந்திருப்பார் என்று சொல்ல முடியாது. தம் போதனைகள அவர் கிரேக்கத்தில் அளித்திருக்கவும் முடியாது. நாசரேத்து மக்களும் கடற்கரையோரம் வாழ்ந்த மக்களும் கிரேக்க மொழியைத் தவிர்த்திருப்பார்கள். தேவையான பொழுது, பயன்படுத்த வேண்டிய அளவுக்கு அவர்கள் கிரேக்கத்தைத் தெரிந்திருப்பார்கள்.

இயேசு பிலாத்துவிடம் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட போது கிரேக்க மொழியில் பேசியிருக்கக் கூடும்.

3) எபிரேயம்[தொகு]

எபிரேய மொழி யூத மக்களின் புனித மொழி. மிகப் பழமையான மொழியும் கூட. இசுரயேலர் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் எபிரேய மொழி வீழ்ச்சி கண்டது (கி.மு. 598). அசீரிய, பெர்சிய பகுதிகளில் பேசப்பட்ட அரமேய மொழி முதன்மை பெற்றது. பாபிலோனியாவிலிருந்து வீடு திரும்பிய இசுரயேலர்(கி.மு. 538) மீண்டும் அரமேயம் பேசலாயினர். எபிரேய மொழி பெரும்பாலும் மறைந்துவிட்டாலும், மறக்கப்படவில்லை. கி.மு. 180இல் சீராக் நூல் எழுதப்பட்டதைக் குறிப்பிடலாம்.

அதே சமயத்தில் தொழுகைக் கூடத்தில் வழிபாட்டின்போது பழைய ஏற்பாட்டு பாடங்கள் எபிரேய மொழியில் வாசிக்கப்படுவதை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போகவே, அரமேய மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறப்பட்டது.

4) அரமேயம்[தொகு]

கிறித்துவுக்குப் பின் முதல் நூற்றாண்டில் யூத மக்கள் சாதாரண, அன்றாட வாழ்வில் பயன்படுத்திய மொழி அரமேய மொழியாகும். கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவிலிருந்து கல்வெட்டுகள், கல்லறைகள் மீது பொறிக்கப்பட்ட வசனங்கள் முதலியவை அரமேய மொழியில் எழுதப்பட்டன. சாக்கடல் அருகே கும்ரான் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களில் சில, அரமேய மொழியில் எழுதப்பட்டுள்ளன.

அரமேயம் என்னும் மொழி செமித்திய குடும்பத்தைச் சார்ந்தது. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை வழங்கிவந்த முதன்மை மொழி அது. அலக்சாந்தர் மற்றும் உரோமையர் ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கமும் இலத்தீனும் பரவத் தொடங்கியபோதிலும் அரமேயம் தன் முதன்மையை இழக்கவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அரபு ஆதிக்கம் ஏற்படும்வரையிலும் அரமேயம் சிறப்புற்றிருந்தது.

இயேசுவின் சீடர்கள் கலிலேயாவைச் சார்ந்தவர்கள். அப்பகுதியில் அரமேயம் பரவலாகப் பேசப்பட்டது. அம்மொழி பேசிய யூதரே கிறித்தவ சமயத்தைக் கானான், சிரியா, மெசபத்தாமியா ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுசென்றனர். இந்தியாவுக்கு முதன்முறையாகக் கிறித்தவ மறையைக் கொணர்ந்தவர்களும் அரமேய (சிரிய) மொழி பேசியவர்களே.

இயேசு யூத இனத்தவர். கலிலேயாவில் வளர்ந்து பணிசெய்தவர். பன்னாட்டு மொழியாக விளங்கிய கிரேக்கம் வணிகத் தொடர்பால் கலிலேயாவில் புழங்கியிருந்தாலும் இயேசுவுக்கு கிரேக்க மொழி ஓரளவுக்கே தெரிந்திருக்கும். நாசரேத்தில் தச்சுத் தொழில் செய்த அவருக்குத் தொழில் அடிப்படையில் கிரேக்கம் அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

இயேசு எபிரேய மொழியை யூதர்களின் தொழுகைக் கூடத்தில் கற்றறிந்திருக்க வேண்டும். அவர் பரிசேயருடனும் சதுசேயருடனும் விவாதங்கள் செயதபோது எபிரேய மொழியைப் பயன்படுத்தியிருப்பார். ஆனால் மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவித்தபோது இயேசு அரமேய மொழியில் போதித்தார் என அறிஞர் முடிவுசெய்கின்றனர்.

புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அரமேயச் சொற்கள் சில[தொகு]

எபிரேய மொழியும் அரமேய மொழியும் செமித்திய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்பதோடு, தமக்குள்ளே நெருங்கிய உறவு கொண்டவை ஆகும். இயேசுவின் வாழ்வு பற்றிய தகவல்களையும் அவர் வழங்கிய போதனைகளையும் தருகின்ற நற்செய்தி நூல்களாகிய புதிய ஏற்பாட்டுப் பகுதிகள் கிரேக்கத்தில் எழுதப்பட்டன. ஆனால், அவ்வாறு எழுதப்படுவதற்குமுன் அவற்றிற்கு எபிரேய-அரமேய மூல வடிவம் இருந்திருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

இன்று நம்மிடையே உள்ள புதிய ஏற்பாடு கிரேக்க மூலத்தில் இருந்தாலும் அதில் இயேசு கூறிய சில சொற்கள் எபிரேய-அரமேய மூலத்தில் உள்ளன. குறிப்பாக மாற்கு நற்செய்தியில் இதை நாம் காணலாம். மேலும் இயேசு தேர்ந்துகொண்ட சீடர்களும் வேறு பலரும் தாங்கிய பெயர்கள் அரமேயத்தில் இருப்பதையும் காணலாம். இடப் பெயர்களும் அம்மொழியில் உள்ளன. இயேசுவின் கூற்றுகளிலிருந்தும், ஆட்பெயர்கள் மற்றும் இடப்பெயர்களிலிருந்தும் சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்படுகின்றன:

தலித்தா கூம் (Ταλιθα κουμ = Talitha kum)[தொகு]

மாற்கு 5:41:

எப்பத்தா (Εφφαθα = Ephphatha)[தொகு]

மாற்கு 7:34:

அப்பா (Αββα = Abba)[தொகு]

மாற்கு 14:36

குறிப்பு
אבא ( 'abbā )என்னும் அரமேயச் சொல் பிற்கால எபிரேயத்திலிருந்து பெறப்பட்டது. தமிழில் அப்பா என்பது அப்படியே அரமேயத்திலும் வரும். மாற்கு அப்பா என்றால் தந்தை என்று பொருள் எனக் கூறவில்லை. கிரேக்கத்திலும் Αββα, Πατηρ (Abba, Pater = Abba, Father) என்றே மூல பாடம் உள்ளது.

இவ்வாறு அப்பா, தந்தையே என வரும் பிற இடங்கள்: உரோமையர் 8:15, கலாத்தியர் 4:6.

பரபா என்னும் பெயரில் அப்பா என்னும் அரமேயச் சொல் அடங்கியுள்ளது. Bar Abba (בר אבא), என்றால் அப்பாவின் மகன் (Son of the Father) என்பது பொருள் (காண்க: மாற்கு 15:6-15).

ராக்கா (Ρακα = raka)[தொகு]

மத்தேயு 5:22

மாம்மன் (Μαμωνᾶς — Mamōnâs = Mammon)[தொகு]

மத்தேயு 6:24

லூக்கா 16:13

குறிப்பு
இங்கே வருகின்ற செல்வம் என்னும் சொல் மூல பாடத்தில் (எபிரேய-அரமேய மொழி) மாம்மன் = ממונא என உள்ளது. இதுவே கிரேக்கத்தில் Μαμωνᾶς என்றாயிற்று.

ரபூனி (Ραββουνει = Rabbuni)[தொகு]

யோவான் 20:16

மாற்கு 10:51

குறிப்பு
இயேசுவுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பெயராக ரபி என்னும் சொல்லும் நற்செய்திகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: மத்தேயு 26:25,49; மாற்கு 9:5; 11:21; 14:45; யோவான் 1:49; 4:31; 6:25; 9:2; 11:8.

எபிரேயத்திலும் அரமேயத்திலும் ரபி என்பது רבוני (Rabbi) என்று வரும்.

மாரனாத்தா (Μαραναθα = Maranatha)[தொகு]

1 கொரிந்தியர் 16:22

குறிப்பு: அரமேய மொழியில் מרנא תא அல்லது מרן אתא (Maranatha) என்றால் ஆண்டவரே வருக அல்லது எம் ஆண்டவரே வருக எனப் பொருள்படும்.

ஏலி, ஏலி லெமா சபக்தானி? (Ηλει Ηλει λεμα σαβαχθανει = Eli Eli lema sabachthani[தொகு]

மத்தேயு 27:46

மாற்கு 15:34

குறிப்பு

இயேசு சிலுவையினின்று உரத்த குரலெழுப்பிக் கூறியதாக வருகின்ற தொடர் இரு பாடங்களாக வந்துள்ளது. Eli Eli lema sabachthani? என்று மத்தேயுவும், Eloi Eloi lama sabachthani? என்று மாற்கும் தந்துள்ளனர். இந்த இரு வடிவங்களுமே எபிரேய மொழிதான் என்பது அறிஞர் கருத்து.

கொர்பான் (Κορβαν = Korban)[தொகு]

மாற்கு 7:11

குறிப்பு

அரமேய மொழியில் கொர்பான் (קרבן) என்பது காணிக்கை எனப் பொருள்படும். (காண்க: மத்தேயு 27:6.

ஓசன்னா (Ὡσαννά = Hosanna)[தொகு]

மாற்கு 11:9

குறிப்பு

ஓசன்னா என்பது அரமேயத்தில் הושע נא = hosanna என்பதாகும். இறைவா, எங்களை விடுவித்தருளும் என்பது இதன் பொருள். வாழ்த்துச் சொல்லாகவும் இது பயன்பட்டது.

"பார்" (βαρ = Bar) என்னும் அசை பெற்று வருகின்ற அரமேயப் பெயர்கள்[தொகு]

அரமேயத்தில் பார் (Bar) என்பது எபிரேயத்தில் பென் (Ben) என்பதற்கு இணையானது. இதற்கு "(இன்னாரின்) மகன்" என்பது பொருளாகும். இத்தகைய பெயர்கள் பல நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பல இடங்களில் வருகின்றன. எடுத்துக்காட்டுகள்:

  • பர்த்தலமேயுஉழுநில மகன் (மத்தேயு 10:3).
  • யோனாவின் மகனான சீமோனே – Šim`ôn bar-Yônâ (மத்தேயு 16:17).
  • நீ யோவானின் மகன் சீமோன் – Simon bar-Jochanan ('Simon son of John') (யோவான் 1:42).
  • பரபா – (Βαραββας = Barabbas). இதன் மூலம் Bar-Abbâ = son of the father = அப்பாவின் (தந்தையின்) மகன்). (மத்தேயு 27:16).
  • திமேயுவின் மகன் பர்த்திமேயு – (Βαρτιμαιος = Bartimaeus). சான்றோன் மகன் என்பது பொருளாகலாம். (மாற்கு 10:46).
  • பர்சபா – (Βαρσαββας = Barsabbas). இது bar-Šabbâ ='son of the Sabbath' = ஓய்வுநாளின் மகன் எனப் பொருள்படும். (திருத்தூதர் பணிகள் 1:23).
  • பர்னபா (Βαρναβας = Barnabas). இது Bar-Navâ என்னும் அரமேயப் பெயரிலிருந்து வருகிறது. இதன் பொருள் இறைவாக்கின் மகன் (son of prophecy) அல்லது இறைவாக்கினன் ஆகும். (திருத்தூதர் பணிகள் 4:36).

கேபா (Κηφας = Cephas/Kephas)[தொகு]

யோவான் 1:42

1 கொரிந்தியர் 1:12

கலாத்தியர் 1:18

மேற்காட்டிய பாடங்களில் கேபா என்னும் பெயர் சீமோன் பேதுருவுக்கு ஒரு சிறப்புப் பெயராகக் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சீமோன் என்பது இயற்பெயர்; சிறப்புப் பெயர் கேபா என்பதற்குப் பாறை என்பது பொருள். இது பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இராய் என்றிருந்தது. தெலுங்கு மொழிவழக்கில் அது கல், பாறை என்னும் பொருளுடையது. கேபா என்பது கிரேக்கத்தில் பெண்பால் என்பதால் அது ஆண்பாலாக மாற கேபாஸ் (Κηφας = Cephas/Kephas) என்றாயிற்று. அதன் கிரேக்க மொழிபெயர்ப்பும் பேத்ரா என்னும் பெண்பால் சொல்லிலிருந்து பேத்ரோஸ் (Πέτρος = Petros) என ஆண்பாலாக மாற்றப்பட்டது.

தோமா (Θωμας = Thomas)[தொகு]

யோவான் 11:16

தோமாவின் பெயர் பிற திருத்தூதர் பெயர்களோடு நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது. திருத்தூதர் பணிகள் நூலிலும் உள்ளது. இருப்பினும் யோவான் நற்செய்தியில் மட்டுமே தோமாவைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன (காண்க: யோவான் 11:16; 20:24; 21:2).

தோமா (תאומא = tômâ) என்னும் அரமேயப் பெயருக்கு இரட்டையர் என்பது பொருள்.

தபித்தா (Ταβειθα = Tabitha)[தொகு]

திருத்தூதர் பணிகள் 9:36

இப்பெண் சீடரின் பெயர் அரமேயத்திலும் (தபித்தா - טביתא) கிரேக்கத்திலும் (தொற்கா - Δορκας = Dorkas) தரப்பட்டுள்ளது. இதன் பொருள் பெண் மான் என்பதாகும்.

புதிய ஏற்பாட்டில் அரமேய மொழியில் வரும் இடப் பெயர்கள்[தொகு]

பல இடங்களின் பெயர்கள் புதிய ஏற்பாட்டு நூல்களில் அரமேய மொழியில் உள்ளன. சில எடுத்துக்காட்டுகள்:

கெத்சமனி (Γεθσημανει = Gethsemane)[தொகு]

மத்தேயு 26:36

மாற்கு 14:32

இயேசு கைது செய்யப்படுமுன் தம் சீடர்களை அழைத்துக் கொண்டு ஒலிவத் தோட்டம் சென்று இறைவேண்டலில் ஈடுபட்டார். அவர் சென்ற இடம் கெத்சமனி என்னும் பெயர் பெற்றது. அப்பெயரின் கிரேக்க வடிவம் எபிரேய மூலத்தில் 'Gath-Šmânê' = גת שמני என வரும். அதன் பொருள் ஒலிவ எண்ணெய் ஆலை என்பதாகும்.

கொல்கொதா (Γολγοθα = Golgotha)[தொகு]

மாற்கு 15:22

யோவான் 19:17

கொல்கொதா என்னும் பெயர் அரமேயத்திலிருந்து வருகிறது. மண்டைஓடு என்பது அதன் பொருள். பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் கபாலஸ்தலம் என்றிருந்தது. வுல்காத்தா (Vulgata = Vulgate) என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் calvaria (ஆங்கிலத்தில் calvary) என்பதும் இப்பொருளையே தரும்.

அரமேயத்தில் இது גלגלתא = Gûlgaltâ என்று இருந்திருக்கும்.

கபதா (Γαββαθα = Gabbatha)[தொகு]

யோவான் 19:13

கபதா என்பது அரமேயம் என்பர் அறிஞர். இதன் பொருள் உயர்ந்த இடம், மேடை என்பதாகும். இதன் அரமேய வடிவம் גבהתא = Gabbatha.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Aramaic language | Description, History, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06. Jesus and the Apostles are believed to have spoken Aramaic.
  2. "What Language Did Jesus Speak?". Zondervan Academic (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06. There is wide consensus among scholars that Aramaic was the primary language spoken by the Jews of first century Palestine.
  3. "Aramaic language | Description, History, & Facts". Encyclopedia Britannica.
  4. "Aramaic". The Eerdmans Bible Dictionary. (1987). Ed. Allen C. Myers. Grand Rapids, MI: William B. Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2402-1. “It is generally agreed that Aramaic was the common language of Israel in the first century AD. Jesus and his disciples spoke the Galilean dialect, which was distinguished from that of Jerusalem (Matt. 26:73)” 
  5. James Barr (biblical scholar) (1970). "Which language did Jesus speak? – some remarks of a Semitist". Bulletin of the John Rylands University Library of Manchester 53 (1): 9–29. doi:10.7227/BJRL.53.1.2. https://www.escholar.manchester.ac.uk/uk-ac-man-scw:1m2973. 
  6. Porter, Stanley E. (1997). Handbook to exegesis of the New Testament. Brill. pp. 110–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09921-2.
  7. Hoffmann, R. Joseph (1986). Jesus in history and myth. Prometheus Books. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87975-332-3.
  8. Gleaves, G. Scott (October 2015). "Did Jesus Speak Greek?". American Society of Overseas Research 3 (10). https://www.asor.org/anetoday/2015/10/did-jesus-speak-greek/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசு_பேசிய_மொழி&oldid=3948701" இலிருந்து மீள்விக்கப்பட்டது