இப்போக்கிரட்டீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்போக்கிரட்டீசு
பீட்டர் பால் ரூபென்சு என்பார் 1638 இல் கீறிய படம் (நன்றி: நேசனல் மருத்துவ நூலகம் (National Library of Medicine).[1]
பிறப்புஏறத்தாழ 460 கி.மு
கோசு (Kos), கிரீசு
இறப்புca. 377 கி.மு (அகவை ஏறத்தாழ 83)
இலாரிசா, கிரீசு
மற்ற பெயர்கள்பண்டைய கிரேக்கம்: Ἱπποκράτης
பணிமருத்துவர்

இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் (கிரேக்கம்: Ἱπποκράτης ; ஆங்கிலம்:Hippocrates) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். கி. மு. 460 முதல் கி. மு. 377 வரை வாழ்ந்த இவர் மருத்துவத்துறையின் தந்தை என்று மேற்குலகிலும் பொதுவாகவும் போற்றப்படுகிறார்.

ஹிப்போகிரட்டீஸ் என்பவர் ஆகியன கடலில் காஸ் என்னும் ஒரு தீவில் கி.மு 406 இல் பிறந்தார். மருத்துவக் கலை பயின்று மருத்துவராகத் தொழில் நடத்த முனைவோர் ஹிப்போகிரட்டீசின் சத்தியப் பிரமாணங்களை உறுதி மொழியாகச் சொல்கிறார்கள். நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்பு நலன்கள் கொண்டவர்களாக மருத்துவர்கள் சேவை புரிய வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே உந்துணர்வையும் வழிகாட்டுதலையும் கூறியவர்.

மூடநம்பிக்கைகள் தகர்ப்பு[தொகு]

ஹிப்போகிரட்டீசுக்கு முன்னால் கிரேக்க மருத்துவம் மந்திரங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மனிதர்கள் மீது சினம் கொண்டு கடவுள் வழங்கும் தண்டனையே நோய்கள் ஏற்படக் காரணம். ஹிப்போக்கிரட்டீஸ் இவற்றைக் கடுமையாக மறுத்தார். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் இயற்கையாக வருபவை என்று கூறினார்.

மருத்துவ கோட்பாடு[தொகு]

ஹிப்போகிரட்டீசின் மருத்துவ முறைகளும் ஆலோசனைகளும் இன்றளவும் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.ஒருவருக்கு நோய் ஏற்பட்டு அவா் மருத்துவாிடம் வந்தால் அவருக்கு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சையை பின்வருமாறு விளக்கினாா். முதலில் அவருக்கு தைாியமூட்டி, அவரை நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பின்பு அவரை நன்றாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறுபவாிடம் அன்பாகப் பேசி அவா் உடலில் உள்ள உபாதை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும். பின்பு, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அது இன்ன நோய் தான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னா், இவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பதை நிா்ணயிக்க வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இன்றியமையாதது.ஆரோக்யமான நிலையில் இருப்பவா்கள் மருந்து உட்கொண்டால் அதனால் எப்பலனும் விளையாது. அதிக வீாியம் உள்ள மருந்துகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவை இல்லை. ஏனெனில் மனித உடலை நோய்கள் தாக்கும் போது தன்னை அவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எதிா்த்து நிற்கவும் மனித உடல் கடும் போராட்டம் நிகழ்த்தும். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள மனித உடல் பெரும் முயற்சி மேற்கொள்ளும். இந்நிலையில் உடலுக்கு அதன் செயற்பாடட்டுக்கு ஊறு விளையாத விதத்தில் மருந்துகள் இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல உடலுக்கு ஒத்ததாக உள்ள அதன் இழந்த ஆரோக்யத்தை மீட்டுத் தரும் ஆகார வகைகளையே நோயாளி உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்தும் இசைவான ஆகாரமும் சோ்ந்து வேலை செய்து நோயை முறியடித்து ஆரோக்யத்தை மீட்டுத் தரும் என்றாா் அவா்.இந்த மருத்துவக் கோட்பாட்டைத்தான் இந்திய நாட்டு மருத்துவ முறையான ஆயுா்வேதமும் கூறுவது குறிப்பிடத்தக்கது.[2]

மருத்துவச் சேவை[தொகு]

தொன்மைக் கால கிரேக்கத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தினார். நோய்களின் மூலக் காரணங்களை அறிய முற்பட்ட முதல் மருத்துவர் இவரே. எளிமையான மிகச் சில மருந்துகளையே தமது சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினார். உணவு, தூய காற்று உடல் பயிற்சி ஆகியனவே போதுமானது, இதுவே இயற்கை மருத்துவம் என்று கூறினார். ஹிப்போக்கிரட்டீஸ் வெறும் மருத்துவர் மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தவராக இருந்தார். எலும்பு முறிவு மூட்டு நழுவல் போன்றவற்றிற்கு அறுவை மருத்துவம் செய்தார். அறுவை சிகிச்சை செய்யும்போது அதைச் செய்பவருடைய கை விரல்களின் நகங்கள் மிக நீளமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் குட்டையாகவும் இருத்தல் கூடாது. திருத்தமாகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் தூய்மையாகவும் சிகிச்சையை முடிக்கவேண்டும். இத்தகைய அறிவுரைகள் ஹிப்போக்கி ரட்டீசின் கட்டளைகள் என்று மருத்துவ உலகில் வழங்கப் படுகிறது.

எகிப்தில் உள்ள அலேக்சாந்திரியாவில் இவரது மருத்துவ நுால்கள் சேகாித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ தொழில் செய்வோா் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தமது நுால்களில் விவாித்துள்ளாா். 1. நோயாளிகளிடம் அன்பும் பாிவும் காட்ட வேண்டும். 2. சாதாரண நோய்களுக்கு எளிய மருந்துகளே போதும். 3. கூடுமான வரை மனித உடல் தான் நோயிலிருந்து மீள எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு சாதகமாக மருந்துகள் அமைய வேண்டும். 4. தீவிர சிகிச்சையை மருத்துவா் கடும் நோய்கள் விஷயத்தில் ஆராய்ந்து கொடுக்க வேண்டும். 5. மருத்துவா்கள் எப்போதும் சுத்தமானவா்களாகவும், ஆரோக்யவான்களாகவும் இருக்க வேண்டும்.தேவையில்லாமல் முடியையும் நகங்களையும் வளா்க்கலாகாது. 6. நோயாளியை முரட்டுத்தனமாகக் கையாளலாகாது. மருத்துவா் தனது கரங்களை மென்மையாகப் பயன்படுத்துவது இன்றியமையாதது.[3] கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. National Library of Medicine 2006
  2. கீதா ஆா்.எஸ். (சூலை 2003). உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள். அருண் பதிப்பகம் ,107 ,8 கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை. பக். 132. 
  3. கீதா ஆா்.எஸ்.. உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள். அருண் பதிப்பகம், 107_8, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை. பக். 135-136. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்போக்கிரட்டீசு&oldid=3801814" இலிருந்து மீள்விக்கப்பட்டது