இதய அடைப்பிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலது புறத்தில்: இதயத்தின் உச்சிப் பகுதியில் இருந்து அடைப்பிதழ்களை நோக்கிக் காண்பிக்கும் இதயத்தின் முப்பரிமாண மீளமைப்புத் (3D reconstruction) தோற்றம், கீழே உள்ள விளக்கப்படத்திற்குப் பொருந்துமாறு படிமம் 180° புரட்டப்பட்டுள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் புலப்படவில்லை, இருகூர் மற்றும் பெருநாடி அடைப்பிதழ்களின் ஒருபகுதி இதழ்கள் மட்டும் தென்படுகின்றன. இடது புறத்தில்: இரண்டு இருபரிமாண படங்கள்; மேலே உள்ள படத்தில் முக்கூர், இருகூர் அடைப்பிதழையும், கீழேயுள்ள படத்தில் பெருநாடி, இருகூர் அடைப்பிதழையும் தெளிவாகக் காணலாம்.

இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர், heart valve) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது.

மனிதன் உட்பட பாலூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.[1][2][3]

இதயத்தில் காணப்படும் நான்கு வகையான அடைப்பிதழ்களாவன:[4]

  • இரண்டு இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ் (ஏட்ரியோவென்றிக்குளர் – AV); இவை இடது, வலது இதயத்தின் மேல், கீழ் அறைகளைக்கிடையே அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் அல்லது மைட்ரல் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இரண்டு அரைமதி அடைப்பிதழ்கள்; பெருநாடி அடைப்பிதழ், நுரையீரல் அடைப்பிதழ் ஆகியன இதயத்தில் இருந்து தமனிகள் வெளியேறும் அமைவிடத்தில் காணப்படுகின்றன.

இதய அடைப்பிதழ்கள் சரியாக உரிய நேரத்தில் மூடப்படாமல் தொழிற்படுமாயின், குருதி ஒரு வழியே முன்னோக்கிப் பாய்வது தடைப்பட்டு, வந்தவழியே (பிழையான திசையில்) பின்னோக்கிப் பாயும், இந்த நிலை பின்னொழுக்கு எனப்படும்.

இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ்[தொகு]

மேலே காட்டப்பட்டுள்ள முப்பரிமாண மின் ஒலி இதய வரைவின் விளக்கப்படம் இதுவாகும். MV: இருகூர் அடைப்பிதழ் , TV: முக்கூர் அடைப்பிதழ் , AV: பெருநாடி அடைப்பிதழ் , Septum: இதயவறைப்பிரிசுவர். தொடர்க்கோடு மின் ஒலி இதய வரைவில் தென்படும் இதயவறைப்பிரிசுவர், இதயவறைச் சுவர் ஆகியவற்றின் எல்லையைக் குறிக்கின்றது, புள்ளிக்கோடு வலது கீழ் இதயவறைக்குரிய சுவர் அமைவிடத்தை அறிவுறுத்துகிறது.

சிறிய அடைப்பிதழ்களான இவை, கீழிதயவறை சுருங்கும் போது அங்கிருந்து மேல் இதயவறைக்கு குருதி பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கிறது. இவை கீழிதயவறையுடன் இதயவாயினாண்கள் மூலமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டுள்ளன, இவை ஒன்று சேர்ந்து துணை அடைப்பிதழ் உபகரணம் என அழைக்கப்படுகிறது. இவற்றின் தொழிற்பாடு அடைப்பிதழ்களை கெட்டியாகப் பிடித்து வைத்திருத்தல் ஆகும். இதனால் அடைப்பிதழ் மேலிதயவறை நோக்கிப் புரட்டப்படுதல் தடுக்கப்படுகிறது. அடைப்பிதழ்களின் திறந்து மூடலில் துணை அடைப்பிதழ் உபகரணம் எந்தவித பங்கும் வகிப்பதில்லை, மாறாக, அமுக்க வித்தியாசத்தின் காரணத்தாலேயே அவை திறந்து மூடுகின்றன. இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ்கள் மூடும் ஒலியானது முதல் இதய ஒலி(S1) ஆகும்.

இருகூர் அடைப்பிதழ்[தொகு]

மைட்ரல் வால்வு எனவும் பெயர் கொண்ட இந்த அடைப்பிதழ், இரு இதழ்களைக் கொண்டுள்ளது. இது இடது மேல் இதயவறையில் இருந்து இடது கீழ் இதயவறைக்குக் குருதி பாய்வதற்கு இசைவளிக்கிறது. இந்தத் தடுக்கிதழ் வாதக்காய்ச்சலினால் முக்கியமாகப் பாதிக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும்.

முக்கூர் அடைப்பிதழ்[தொகு]

மூன்று இதழ்களைக் கொண்ட இந்தத் தடுக்கிதழ் இதயத்தின் வலது மேல் இதயவறையில் இருந்து வலது கீழ் இதயவறைக்குக் குருதி பாய்வதற்கு இசைவளிக்கிறது.

அரைமதி அடைப்பிதழ்[தொகு]

இவை இதயத்தில் இருந்து வெளியேறும் தமனிகளான நுரையீரல் நாடி, பெருநாடி ஆகியவற்றின் தொடக்க அடியில் அமைந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு இதழ்களினதும் வடிவம் பிறை போன்றதாகும். இதயத்தின் சுருக்கத்தின் போது கீழ் இதய அறைகளில் இருந்து தமனிகளுக்கு குருதி பாய்ச்சப்படுவதற்கு இசைவளிக்கும் அதேநேரத்தில் மீண்டும் பின்நோக்கி இதயவறைகளுக்குள் குருதி பாய்வதைத் தடுக்கிறது. இவை இதயவாயினாண்களைக் கொண்டிருப்பதில்லை.

பெருநாடி அடைப்பிதழ்[தொகு]

இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது, மூன்று இதழ்களைக் கொண்டுள்ளது. கீழ் இதயவறையின் சுருக்கத்தின் போது இடது கீழ் இதயவறையில் அமுக்கம் அதிகரிக்கும், இது பெருநாடியில் உள்ள அமுக்கத்தைவிடக் கூடும்போது பெருநாடி அடைப்பிதழ் திறக்கின்றது, இதனால் இடது கீழ் இதயவறையில் இருந்து குருதி பெருநாடிக்கு வெளியேறுகிறது. இதயவறைச் சுருக்கம் முடிவடையும் போது இடது கீழ் இதயவறை அமுக்கம் விரைவாகக் குறைகிறது, இதனால் பெருநாடி அமுக்கம் காரணமாக பெருநாடி அடைப்பிதழ் மூடப்படுகிறது, இதனால் ஏற்படும் ஓசை இரண்டாம் இதய ஒலியின் (S2) ஒரு பகுதியான A2 ஆகும். பிறப்புக் குறைபாடு காரணமாக இரண்டு இதழ் கொண்ட பெருநாடி அடைப்பிதழ் காணப்படலாம்.

நுரையீரல் அடைப்பிதழ்[தொகு]

வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்திருக்கும் மூன்று இதழ்களைக் கொண்டுள்ள அரைமதி தடுக்கிதழாகும். பெருநாடி அடைப்பிதழைப் போலவே தொழிற்படுகின்றது. கீழ் இதயவறையின் சுருக்கத்தின் போது வலது கீழ் இதயவறையில் அமுக்கம் அதிகரிக்கும், இது நுரையீரல் நாடியில் உள்ள அமுக்கத்தைவிடக் கூடும்போது நுரையீரல் நாடி அடைப்பிதழ் திறக்கின்றது, இதனால் வலது கீழ் இதயவறையில் இருந்து குருதி நுரையீரல் நாடிக்கு வெளியேறுகிறது. இதயவறைச் சுருக்கம் முடிவடையும் போது வலது கீழ் இதயவறை அமுக்கம் விரைவாகக் குறைகிறது, இதனால் நுரையீரல் நாடி அமுக்கம் காரணமாக நுரையீரல் நாடி அடைப்பிதழ் மூடப்படுகிறது, இதனால் ஏற்படும் ஓசை இரண்டாம் இதய ஒலியின் (S2) ஒரு பகுதியான P2 ஆகும். வலது இதய அறையில் அமுக்கமானது இடது இதய அறையை விடக் குறைவான காரணத்தால் இரண்டாவது இதய ஒலியின் P2 பகுதி மெல்லியதாகக் கேட்கின்றது. சில இளம் வயதுடையோரில் உட்சுவாசத்தின் போது A2, P2 பிளவுபட்டுக் கேட்கும், இது ஒரு சாதாரண உடற்செயலியல் நிகழ்வு ஆகும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "Heart Valves". Heart and Stroke Encyclopedia. American Heart Association, Inc. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05. {{cite web}}: External link in |work= (help)
  2. Klabunde, RE (2009-07-02). "Pressure Gradients". Cardiovascular Physiology Concepts. Richard E. Klabunde. பார்க்கப்பட்ட நாள் 2010-08-06.
  3. Klabunde, RE (2007-04-05). "Cardiac Valve Disease". Cardiovascular Physiology Concepts. Richard E. Klabunde. பார்க்கப்பட்ட நாள் 2010-08-06.
  4. முடியுருக்குடா அடைப்பிதழ், மற்றும் கீழ்ப்பெரு நாள அடைப்பிதழ் இவற்றுள் அடங்கவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_அடைப்பிதழ்&oldid=2809743" இலிருந்து மீள்விக்கப்பட்டது