அஞ்சலி அப்பாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சலி அப்பாதுரை (Anjali Appadurai) கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு நடைபெறவுள்ள உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.[1] இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநில வம்சாவளியைச் சேர்ந்தவராவார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கனடாவில் வசிக்கிறார். அஞ்சலிக்கு 6 வயது இருக்கும்போது இவருடைய பெற்றோர் கனடாவில் குடியேறினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பிரிட்டிசு கொலம்பியாவின் குக்குவிட்லாம் நகரில் அஞ்சலியின் குடும்பம் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஆர்பர் நகரில் செயல்படும் அட்லாண்டிக் கல்லூரியில் பன்னாட்டு அரசியல், பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். அஞ்சலி காலநிலை நீதி ஆர்வலர், தொடர்பாளர் மற்றும் அமைப்பாளர். காலநிலை நெருக்கடியின் முன் வரிசையில் கனடாவில் காலநிலை மாற்ற செய்தி மற்றும் சொற்பொழிவை வலுப்படுத்த இவர் பணியாற்றுகிறார்.[2]சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஐ.நா. சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

அரசியல்[தொகு]

கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிசு கொலம்பியா புதிய சனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாகாண முதல்வராக 62 வயதாகும் இயான் ஓர்கன் பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவியான முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிசு கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத் துறை அமைச்சர் டேவிட் எபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நவம்பர் 13- ஆம் தேதி வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி உட்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்படுபவர் பிரிட்டிசு கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். வரும் 2024- ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார்.

ஆர்வங்கள்[தொகு]

சுற்றுச்சூழல், அரசியல் மட்டுமன்றி இசை, சல்சா நடனத்திலும் அஞ்சலி அப்பாதுரைக்கு ஆர்வம் அதிகம்.[3] பல்வேறு இசை தொகுப்புகளையும் அஞ்சலி வெளியிட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. "Climate Justice & Inequality: Centring Justice in the Climate Emergency — with Anjali Appadurai". www.sfu.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  3. "Our Team". Climate Emergency Unit (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  4. "கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி". தமிழ் நியூசு இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220831165041/https://ztamilnews.com/2022/08/31/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE/. பார்த்த நாள்: 31 August 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_அப்பாதுரை&oldid=3924472" இலிருந்து மீள்விக்கப்பட்டது