அகச்சிவப்புக் கதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகச்சிவப்பு கதிர்கள் (Infrared) ஒளியலைகளைப் போலவே மின்காந்த அலைகள், ஆனால் இவை கண்ணுக்குத் தெரியாத, 700 நா.மீ.(nm) முதல் 100 மை.மீ (µm) அலைநீளம் கொண்ட, மின்காந்த அலைகள். கண்ணுக்குப் புலனாகும் ஒளிக் கதிர்கள் ஏறத்தாழ 400-700 நா.மீ கொண்டவை. அகச்சிவப்புக் கதிர்கள், கண்ணுக்குப் புலனாகும் ஒளியலைகளை விடக் கூடுதலான அலை நீளம் கொண்டவை. அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம், நுண்ணலை(Microwave)களினதைவிட குறைவு. கண்ணுக்கு புலனாகும் ஒளி அலைகளில் மிக அதிக அலைநீளம் உடையது சிவப்பு நிறம் ஆனால் சிவப்பு அலை ஒளிக்கதிர்கள் தாங்கியுள்ள ஆற்றல் நீல ஒளிக்கதிர்கள் தாங்கி இருக்கும் ஆற்றலைவிடக் குறைவானது. கண்ணுக்குப் புலனாகா அகச்சிவப்புக் கதிர்கள் சிவப்பு ஒளியலைகளைவிடவும் குறைந்த ஆற்றல் தாங்கி இருப்பதால் அவை அகச்சிவப்புக் கதிர்கள் எனக் குறிக்கப்பெறுகின்றன. சிலர் தங்கள் உடலில் தசைப் பிடிப்பைக் குணமாக்கஅகச்சிகப்பு விளக்கு மூலமாக வெப்பச் செலுத்தம் பெறுவதால் இந்த அலையுடன் ஓர் அறிமுகம் ஏற்பட்டிருக்கும்.
நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போன இருக்கையில் நமது உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட அகச்சிகப்புக் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச் சிவுப்புக் கதிர்களை அவதானிக்கலாம். அதனால் அகச் சிவுப்புப் பார்வை/படங்கள், இரவில் பார்ப்பதற்கு இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. காட்டுத்தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை அகச்சிகப்புக் பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.