கிசோர்கஞ்ச் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் கிசோர்கஞ்ச் மாவட்டத்தின் அமைவிடம்

கிசோர்கஞ்ச் மாவட்டம் (Kishoreganj District) (வங்காள மொழி: কিশোরগঞ্জ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. வடகிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிசோர்கஞ்ச் நகரம் ஆகும்.[1]

மாவட்ட எல்லைகள்[தொகு]

டாக்கா கோட்டத்தில் உள்ள கிசோர்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் மைமன்சிங் மாவட்டம், தெற்கில் நரசிங்கடி மாவட்டம், கிழக்கில் பிரம்மன்பரியா மாவட்டம் மற்றும் ஹபிகஞ்ச் மாவட்டங்களும், மேற்கில் மைமன்சிங் மாவட்டம் மற்றும் காஜிபூர் மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

2688.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், 105 கிராம ஒன்றியக் குழுக்களையும், 946 வருவாய் கிராமங்களையும், 1775 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2300 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0941 ஆகும். இம்மாவட்டம் ஆறு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம்[தொகு]

கிசோர்கஞ்ச் மாவட்டத்தில் பழைய பிரம்மபுத்திரா ஆறு, புலேஷ்வரி ஆறு, கொரௌத்திரா ஆறு, தனு ஆறு, மெக்னா ஆறு, நர்சுந்தா ஆறு, மோக்ரா ஆறு, சிங்குவா ஆறு, சுதி ஆறு, காளி ஆறு போன்ற ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், நில வளமும் மிக்கதாக உள்ளது. இங்கு நெல், சணல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், நிலக்கடலை, கரும்பு, விளாச்சி, உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

2688.59 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 29,11,907 ஆக உள்ளது. அதில் 14,32,242 ஆண்கள் ஆகவும், பெண்கள் 14,79,665 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.4% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 104 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1083 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 40.9 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

இம்மாவட்டத்தில் ஜவகுருல் இசுலாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, சாகித் சையத் நஸ்ரூல் இசுலாம் மருத்துவக் கல்லூரி, அப்துல் ஹமிது மருத்துவக் கல்லூரி, பஜித்பூர் பட்டப் படிப்பு கல்லூரி, அரசு குருதயாள் கல்லூரி, வாலிநெவாஸ் கான் கல்லூரி, மித்தாமைன் கல்லூரி, பௌரா மகளிர் கல்லூரி, கொச்சிஹதா கல்லூரி, பகுன்டியா கல்லூரி, கதியாதி கல்லூரி, அப்துல் மன்னன் மகளிர் கல்லூரி முதலிய கல்வி நிலையங்கள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hakim Arif (2012). "Kishoreganj District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Kishoreganj District, Bangladesh
  3. Community Report Kishoreganj Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோர்கஞ்ச்_மாவட்டம்&oldid=3239896" இலிருந்து மீள்விக்கப்பட்டது