யூபலினோஸ்
யூபலினோஸ் (Eupalinos, பண்டைக் கிரேக்கம்: Εὐπαλῖνος ) அல்லது மெகாராவின் யூபலினோஸ் என்பவர் பண்டைய கிரேக்க பொறியாளர் ஆவார். இவர் சாமோஸ் தீவில் உள்ள யூபலினோசின் சுரங்கப்பாதையை கிமு 6 ஆம் நூற்றாண்டில் அமைத்தவர் ஆவார்.
அந்தச் சுரங்கப்பாதையானது கிமு 550 மற்றும் 530 க்கு இடையில் அமைக்கப்பட்டது ஆகும். [1] அது வரலாற்றில் அறியப்பட்ட இரண்டாவது சுரங்கப்பாதையாகும். இது இரு முனைகளிலிருந்தும் தோண்டப்பட்டது மேலும் அவ்வாறு செய்வதில் வடிவியல் அடிப்படையிலான அணுகுமுறை முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த சுரங்கம் அமைக்கபட்ட காலத்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக அது இருந்ததால் யூபலினோசின் சுரங்கப்பாதை பண்டைய பொறியியலின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இது சமோசின் சர்வாதிகாரியான பாலிகிரேட்சின் கட்டளையினால் கட்டப்பட்டது. அச்சரங்கமானது குறிப்பிடத்தக்க அளவாக 1,036 மீட்டர்கள் (3,399 அடி) நீளமானது. அது ஒரு மலையின் அடிவாரத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் வழியாக குடையப்பட்டு நகரத்திற்கு தேவைப்பட்ட தண்ணீரைக் கொண்டு வர பயன்படுத்தபட்டது; இந்த சுரங்கப்பாதை இன்னும் உள்ளது.
கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு தனது Histories நூலில் (3.60) சுரங்கப்பாதையை குறித்து சுருக்கமாக விவரிக்கிறார் மற்றும் மெகாராவின் யூபலினோசை அதன் கட்டிடக் கலைஞர் என்று அழைக்கிறார்:
நான் சாமோசின் வரலாற்றில் எனக்கு தேவைப்பட்டதை விட நீண்ட காலம் தங்கி இருந்தேன். ஏனென்றால் கிரேக்க உலகில் மூன்று பெரிய கட்டிடங்கள் மற்றும் பொறியியல் சாதனைகளுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள்: முதலாவது, கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம், எட்டு அடி அகலம், எட்டு அடி உயரம் கொண்ட ஒரு சுரங்கப்பாதை, தொல்லாயிரம் அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தின் வழியாக அமைக்கபட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதன் வழாயாக தண்ணீர் குழாய் அமைக்கபட்டு நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இது நாஸ்ட்ரோபஸின் மகன் யூபாலினஸ் என்ற மெகாரியனின் பணி.
யூபலினோஸ் வரலாற்றில் முதல் நீர்ம பொறியியலாளராகக் கருதப்படுகிறார், இவரது பெயர் தவிர, இவரைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. [2]
ஏதென்சுக்கும் கொரிந்துக்கும் இடையிலான புதிய விரைவு நெடுஞ்சாலையின் இணைப்பை எளிதாக்குவதற்காக, அண்மையில் கொரிந்தியாவில் உள்ள ஜெரனியா மலைகளின் கீழ் யூபலினோசின் பெயர் சூட்டபட்ட ஒரு பெரிய சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த விரைவுச் சாலையில் ஒரே அகலம் கொண்ட மூன்று அடுத்தடுத்த சுரங்கங்களில் இதுவே மிக நீளமானது.
குறிப்புகள்
[தொகு]