உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்னலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேக்னலியம் (Magnalium) ஒரு அலுமினிய உலோகக் கலவையாகும். அலுமினியத்தோடு மக்னீசியம், சிறிய அளவில்  நிக்கல் மற்றும் வெள்ளீயம்[1] ஆகியவை கலந்த உலோகக் கலவையாகும். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குத் தேவையான, குறைந்த அரிமான எதிர்ப்புத்திறன் கொண்ட சில உலோகக் கலவைகள், 50% வரை மெக்னீசியத்தைக் கொண்டிருக்கலாம். இது பொறியியல் மற்றும் வாணவெடித்தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்

[தொகு]

குறைவான அளவிலான (சுமார் 5%) மக்னீசியம் கொண்ட உலோகக்கலவைகள், அதிக வலிமை, அதிக அரிமான எதிர்ப்பு மற்றும் தூய அலுமினியத்தை விட குறைந்த அடர்த்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய கலவைகள் தூய அலுமினியத்தை விட எளிதாக உலோக பற்றவைப்புச் செய்ய வாய்ப்புள்ளவையாகவும், வேலைகளுக்கு எளிதில் பயன்படக்கூடியவையாகவும் இருக்கின்றன.[2] அதிக அளவு மக்னீசியம் (சுமார் 50%) கொண்டிருக்கும் உலோகக்கலவைகள்  அலுமினியத்தை விட  மிகவும் எளிதில் நொறுங்கக்கூடியவையாகவும், அரிமானத்திற்கு உள்ளாகக்கூடியவையாகவும் உள்ளன.

பயன்கள்

[தொகு]

பொதுவாக இந்தக் கலப்புலோகம் அலுமினியத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும், குறைந்த அளவு மக்னீசியத்தை கொண்டிருக்கும் உலோகக்கலவைகளின் அதிக வலிமை, குறைந்த அடர்த்தி மற்றும் அதிக பணித்திறன் ஆகியவை வானூர்தி மற்றும் தானுந்து வாகனங்களின் உதிரிபாகங்களில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. 

ஐம்பது விழுக்காட்டிற்கும் (50%) அதிகமாக மக்னீசியத்தைக் கொண்டுள்ள உலோகக்கலவைகள் எளிதில் நொறுங்கக்கூடியவையாகவும், எளிதில் அரிக்கப்படுபவையாகவும் உள்ளன. இதன் காரணமாக, இத்தகைய உலோகக்கலவைகள் பொறியியல் சார்ந்த பயன்பாடுகளுக்கு பொருத்தமற்றவையாக உள்ளன. இருப்பினும், இத்தகைய உலோகக்கலவைகள் தூளாக்கப்படும் போது உருவாகும் எரியக்கூடிய தன்மை, தூய மக்னீசியத்தை விட அதிகமான அரிமான எதிர்ப்புத் தன்மை, தூய அலுமினியத்தைக் காட்டிலும் அதிக வினைபடுதன்மை ஆகிய பண்புகள் இவற்றை வாணவெடித்தொழிலில் தீப்பொறிகளை உருவாக்கும் உலோக எரிபொருளாகப் பயன்படுத்தக் காரணமாக இருக்கின்றன. மேக்னலியம் தூளும் கூட படபடவென்ற ஒலியுடன் எரியும் தன்மை கொண்டது. இது தானாகவே எரிக்கப்படும் போது, மக்னீசியத்தின் வினைபுரியும் தன்மை மற்றும் அலுமினியத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கிடையே ஒரு நடுவுநிலையைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கூறியபடி, வாணவெடித்தொழிலில் இந்த உலோகக்கலவை பயன்படுத்தப்படுவதில் உள்ள  மற்றுமொரு வசதி இதன் நொறுங்கும் தன்மையாகும். இதை எளிதில் சுத்தியால் உடைத்து, பயன்படுத்தக்கூடிய அளவிலான துாளாக, ஒரு அரவை இயந்திரத்தில் நொறுக்கி விடலாம். இதை குண்டு ஆலையில் மிக நுண்ணிய தூளாக ஒரு சில மணி நேரங்களில் அரைத்து விடலாம். அலுமினியத்தை இவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ஒரு சில நாட்களாகலாம்.

ஒரேயளவு தூளாக்கப்பட்ட அலுமினியத்தூளோடு ஒப்பிடும் போது, மேக்னலியத்தூள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது, மக்னீசியத்திற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதற்கும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இவை ஈரப்பதம் மற்றும் மற்ற சேர்மங்களுடன் (போரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் கலவைகள்) இணக்கமின்மை போன்ற ஆபத்துக்களையும் கொண்டவையாகும். இது தராசின் சட்டம் மற்றும் ஒளிக்கருவிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jones, Franklin D. (1954), Engineering Encyclopedia, vol. 2, Industrial Press, p. 782, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4067-0137-1. {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  2. magnalium — Infoplease.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்னலியம்&oldid=4165109" இலிருந்து மீள்விக்கப்பட்டது