உள்ளடக்கத்துக்குச் செல்

மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி
(മാര്‍ ഗീവര്‍ഗിസ് ആലഞ്ചേരി)
எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலத் தலைமைப் பேராயர்-கர்தினால்
கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி
சபைகத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை
உயர் மறைமாவட்டம்எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் மறைமாநிலம்
ஆட்சி துவக்கம்தேர்வு: மே 24, 2011;
பதவியேற்பு: மே 29, 2011
முன்னிருந்தவர்கர்தினால் வர்க்கி விதயத்தில்
பிற பதவிகள்தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) மறைமாவட்ட ஆயர் (1997 - 2011)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுநவம்பர் 19, 1972
ஆயர்நிலை திருப்பொழிவுபெப்ருவரி 2, 1997
பேராயர் ஜோசப் பௌவத்தில்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுதேர்வு:சனவரி 6, 2012;
நியமனம்:பெப்ருவரி 18, 2012
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்பு19 ஏப்ரல் 1945 (1945-04-19) (அகவை 79)
துருத்தி, கேரளம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை- சீரோ-மலபார் வழிபாட்டுமுறை

கர்தினால் ஜார்ஜ் (அ) கீவர்கீஸ் ஆலஞ்சேரி (George Cardinal Alencherry) (Mar Geewargis [George] Alencherry) (மலையாளம்: മാര്‍ ഗീവര്‍ഗിസ് ആലഞ്ചേരി) என்பவர் (பிறப்பு: ஏப்ரல் 19, 1945) 2011ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாளிலிருந்து எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் சீரோ-மலபார் வழிபாட்டுமுறைத் திருச்சபையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்[1]. இவருக்கு முன் பதவியிலிருந்த கர்தினால் வர்க்கி விதயத்திலின் இறப்பை (ஏப்ரல் 1, 2011) தொடர்ந்து மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் ஒப்புதலோடு நியமனம் பெற்றார்[2].

குருத்துவப் படிப்பு

[தொகு]

ஆலஞ்சேரி கேரள மாநிலத்தில் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்க உயர் மறைமாவட்டமாகிய எர்ணாகுளம்-அங்கமாலி என்னும் ஆட்சிப்பகுதியில் துருத்தி என்னும் ஊரில் பிறந்தார். அவர் 1972ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சங்கனாச்சேரி உயர் மறைமாவட்டப் பேராயரின் செயலராகவும், மறைமாவட்ட கோவில் பங்கில் துணைக் குருவாகவும் பணியாற்றினார். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி இயக்குநராகவும் செயல்பட்டார்.

மார் ஆலஞ்சேரி கேரளத்தில் ஆலுவா நகரில் அமைந்துள்ள புனித யோசேப்பு திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் இறையியல் பயின்றார். பின்னர் பிரான்சு நாட்டில் பாரிசு நகரில் உள்ள கத்தோலிக்க நிறுவனத்தில் மறைக்கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொடக்க காலப் பணிகளும் தக்கலை ஆயராக நியமனமும்

[தொகு]

பாரிசு நகரிலிருந்து திரும்பியபின் ஆலஞ்சேரி மறைக்கல்வி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொச்சியில் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையில் அமைந்துள்ள "அருட்பணி வழிகாட்டல் மையம்" என்னும் நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

ஆலஞ்சேரி கோட்டயத்தில் வடவாத்தூர் நகரில் "பௌராஸ்திய வித்யாபீடம்" என்னும் பெயர்கொண்ட திருத்தந்தை கீழை மரபு சமயத் துறையிலும், ஆலுவா நகரில் அமைந்துள்ள திருத்தந்தை மெய்யியல் மற்றும் இறையியல் நிறுவனத்திலும் பேராசிரியராகச் செயல்பட்டு, அருட்பணி ஆலோசனை மற்றும் கோட்பாட்டு இறையியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் தலைமைக் குருவாக 1996, நவம்பர் 11ஆம் நாளிலிருந்து பணியாற்றினார். 1997, பெப்ருவரி 2ஆம் நாள் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தக்கலை மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

சீரோ-மலபார் சபையின் தலைமை ஆயராக நியமனம்

[தொகு]

2011, மே மாதம் 24ஆம் நாள் ஆலஞ்சேரி எர்ணாகுளம்-அங்கமாலி உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆலஞ்சேரியை அப்பதவியில் உறுதிசெய்து மே மாதம் 25ஆம் நாள் நியமித்தார். கத்தோலிக்க திருச்சபையின் உட்பிரிவுகளாக நிலவுகின்ற வெவ்வேறு வழிபாட்டு முறைச் சபைகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதும், எல்லாக் கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை கொணர்வதும், சமயங்கள் நடுவே உரையாடல் வளர்ப்பதும் தம் பணிக்காலத்தின் முதன்மைகளாக இருக்கும் என்று மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி கூறியுள்ளார்.

மறைச்சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமை ஆயர்

[தொகு]

மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபையில் முதல்முறையாக மறைச்சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆயர் ஆவார். 1992இல் சீரோ-மலபார் வழிபாட்டு முறை சபையைத் தன்னாட்சி சபையாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உருவாக்கியபோது, தலைமை ஆயரையும் பிற ஆயர்களையும் நியமிக்கும் உரிமை திருத்தந்தைக்கு மட்டுமே உரியது என்று விதித்தார். அதன்படி, அவரே மார் (கர்தினால்) அந்தோனி படியறா என்பவரை சீரோ-மலபார் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுத்து, நியமனம் செய்தார்.

2004ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை சபை தன் ஆயர்களையும், தலைமை ஆயரையும் தேர்ந்தெடுக்க உரிமை கொண்டுள்ளது என்று அறிக்கை விடுத்தார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டோரை ஆயர் பணியில் உறுதிசெய்து நியமிக்கும் பொறுப்பு திருச்சபையின் தலைமைப் பீடத்துக்கு உரியது.

கர்தினால் பதவிக்கு உயர்த்தப்படல்

[தொகு]

மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரிக்கு முன் தலைமை ஆயர் பதவி வகித்த மூவரும் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அவர்கள் கர்தினால் ஆன்றணி படியற, கர்தினால் ஜோசப் பாறேக்காட்டில் மற்றும் கர்தினால் வர்க்கி விதயத்தில் ஆவர். அவர்களைப் போன்று ஆலஞ்சேரியும் கர்தினாலாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வத்திக்கான் நகரிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2012, சனவரி 6ஆம் நாள் வெளியானது[3]

அந்த அறிவிப்பின்படி, 2012, சனவரி 6ஆம் நாள் ஆலஞ்சேரியைக் கர்தினாலாக உயர்த்தப்போவதாக திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவித்தார். ஆலஞ்சேரியையும் ஹாங்காங்க் பேராயர் ஜான் டாங் ஹோன் என்பவரையும் உள்ளிட்ட 22 பேரைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2012, பெப்ருவரி 18ஆம் நாள் உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த சடங்கின்போது கர்தினால் நிலைக்கு உயர்த்தி, நியமனம் செய்தார்[4].

கர்தினால் ஆலஞ்சேரிக்கு உரோமையில் அமைந்துள்ள புனித பெர்னார்து கோவில் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்_கீவர்கீஸ்_ஆலஞ்சேரி&oldid=4169195" இலிருந்து மீள்விக்கப்பட்டது