பள்ளி மேலாண்மைக் குழு
Appearance
பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.
நோக்கங்கள்
[தொகு]- பள்ளியின் வளர்ச்சியில் பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துதல்,
- பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாட நூல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்து, சமுதாயத்துக்கும் பள்ளிக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல்,
- அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல், 14 வயது) பள்ளியில் சேர்ப்பது அத்தோடு அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது,
- மாற்றுத்திறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகள் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்,
- மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும்
- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் நோக்கங்களாகும்[1].
இக்குழுவின் தலைவராகப் பள்ளியில் பயிலும் ஏதேனும் ஒரு குழந்தையின் பெற்றோர் இருப்பார்கள். இதில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள உறுப்பினர்களில் பாதிக்கும்(50%) குறையாத எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இக்குழு அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கண்கானிக்கப்படுகிறது.[2].
பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கம் மற்றும் விதிமுறைகள்
[தொகு]பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கத்தில் பின்வரும் விதிமுறைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.[3].
- ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் பள்ளி மேலாண்மைக் குழுவினை ஏற்படுத்துதல்.
- பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட 24 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டதாகப் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
- இதில் 75 சதவீதம் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.
- மீதமுள்ள 25 சதவீதத்தினரில்
- மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிரதிநிதிகள் (உள்ளாட்சி அமைப்பின் ஒப்புதலுடன்)
- மூன்றில் ஒரு பங்கு தொடர்புடைய பள்ளியின் ஆசிரியர் (பள்ளியின் பணியாற்றும் ஆசிரியர்களின் முடிவின்படி)
- மூன்றில் ஒரு பங்கு உள்ளூரைச் சேர்ந்த கல்வியாளர்கள் (பெற்றோர்களின் ஒப்புதலுடன்) இடம்பெற வேண்டும்.
- பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் குழுவிலுள்ள மற்ற பெற்றோர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும்.
- ஓர் ஊராட்சியில் இரண்டு அதற்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பின் ஒரு பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவரும் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகவும் மற்ற பள்ளிகளில் சம்மந்தப்பட்ட பள்ளிகள் அமைந்திருக்கும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகவும் இணைக்கப்பட வேண்டும்
- பள்ளி மேலாண்மைக் குழு குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது கூட்டப்பட வேண்டும். இதற்கெனத் தனி பதிவேடுகள், தீர்மானங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும். [4].
- இக்குழுவில் 50 சதவீதத்திற்குக் குறையாமல் பெண்கள் இருக்க வேண்டும்.
- சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இக்குழுவில் கொடுக்கப்பட வேண்டும்.
- இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு வருடங்களாகும். அதன் பின்பு குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்".
- ↑ "பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏன்? அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் இதன் செயல்பாடுகள் என்ன ?".
- ↑ https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/SMC%20Constitution%20Delhi.pdf Guidelines to formulate SMC
- ↑ "பள்ளி-மேலாண்மைக்-குழு-கூட்டங்களை-மாதந்தோறும்-நடத்த-வலியுறுத்தல்".