பன்னாட்டு அரிமா சங்கங்கள்
உருவாக்கம் | 1917 |
---|---|
நிறுவனர் | மெல்வின் ஜோன்ஸ் |
வகை | நலிந்தோர்க்கான சேவை |
தலைமையகம் | இலினோய், ஐக்கிய அமெரிக்கா |
உறுப்பினர்கள் | 1.4 மில்லியன் |
அமைப்பாளர் | மெல்வின் ஜோன்ஸ் |
வலைத்தளம் | http://www.lionsclubs.org |
பன்னாட்டு அரிமா சங்கங்கள் (Lions Clubs International, LCI) உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது[1].
மெல்வின் ஜோன்ஸ்
[தொகு]1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917ம் ஆண்டு இந்த "அரிமா சங்கம்" என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது.
ஹெலன் கெல்லர்
[தொகு]தன்னுடைய ஒன்னரை வயதிலேயே பார்வையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் கெல்லர் என்ற அம்மையார் 1925ம் ஆண்டு நடைபெற்ற அரிமா சங்க பன்னாடு கூட்டத்தில் பார்வைத் திறனை காப்பதற்கும்,பார்வையற்றோர்க்கு தொண்டு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். உங்களால் பார்க்கமுடிகிறது, உங்களால் கேட்க முடிகிறது,நீங்கள் இரக்கமுள்ளவர்களாகவும் திகழ்கிறீர்கள். குருட்டுத் தண்மைகெதிரான புனித வீரர்களாக நீங்கள் தொடர்ந்து விளங்கமாட்டீர்களா? என்று வினவினார். அரிமாக்கள் அதை ஏற்று "பார்வைத்திறன் காத்தல், மற்றும் பார்வையிழந்தோர்க்கு பாடுபடுதல்"என்பதை தங்கள் முக்கிய செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டனர்.
அரிமா சங்கங்களின் குறிக்கோள்கள்
[தொகு]- அனைத்து நாட்டு நல்லுறவை உலகெங்கும் உள்ள பெருமக்களிடையே உருவாக்கி வளர்த்தல்
- நல்லரசு, நற்குடிமை ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளைப் பெருக்குதல்
- குடிமை, கலாச்சாரம், சமுதாயம்,ஒழுக்கம் ஆகிய துறைகளில் மக்கள் நலமுற வாழ ஊக்கத்துடன் செயல்படுதல்
- உறுப்பினர்களிடையே நட்பும், நல்லுறவும், புரிந்து கொண்டு பழகும் பண்பு வளரச் செய்து ஒற்றுமையை மலர்வித்தல்
- பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி கருத்து வழங்க ஏற்பாடு செய்தல். ஆனால் கட்சி அரசியலும், பாகுபடுத்தும் மதமும் சங்க உறுப்பினர்களால் வாதிக்கப்பட மாட்டாது.
- சொந்த பண வருவாயை நோக்கமாக கொள்ளாமல், தொண்டுள்ளம் கொண்ட சமூகப்பணி செய்பவர்களை ஊக்குவித்தல், வாணிபம், தொழில், அரசுத்துறை, தனியார் முயற்சி ஆகியவற்றில் திறமையும், நெறிமுறைத் தரத்தையும் ஊக்கி வளர்த்தல்.
இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம்
[தொகு]பெப்ரவரி 3, 1956 ஆம் ஆண்டு மும்பையில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304, கூட்டுமாவட்டம் 1973-74ல் 321,322,323,324 என்று பிரிக்கப்பட்டது.
கூட்டுமாவட்டம் 324
[தொகு]வருவாய் மாவட்டங்கள் சென்னை,செங்கற்பட்டு,வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி ஆகியவை 324A மாவட்டம் என்றும் தமிழகத்தின் மீதமுள்ள மாவட்டங்கள் 324B என்றும், ஆந்திரமாநில சங்கங்கள் 324C என்றும், கர்நாடக மாநில சங்கங்கள் 324D என்றும், கேரள மாநில சங்கங்கள் 324E எனவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Structure of Lions Clubs International". Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.