மெல்வின் ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெல்வின் ஜோன்ஸ் (சனவரி 13, 1879 – சூன் 1, 1961) என்பவர் பன்னாட்டு அரிமாசங்கங்களின் நிறுவனராவார்

வாழ்க்கையும்,கல்வியும்[தொகு]

இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சிலா ஆற்றின் கரையில் இருந்த இராணுவ முகாமில் பிறந்தார். இவரது தாயார் பெயர் லிடியா தந்தை கால்வின் ஜோன் அமெரிக்க இராணுவத்தில் கேப்டனாக இருந்தார். அப்போது அமெரிக்க இராணுவத்துக்கும் சையு அப்பாக் இந்தியர்களுக்கும் இடையில் போர் நடந்துகொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் போருக்குப்பின் இவரின் தந்தை செயிண்ட் லூயிசுக்கு மாற்றப்பட்டார். அங்கே மெல்வினின் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது. இவரது கல்லூரிjfபடிப்பை யூனியன் வணிகக் கல்லூரியிலும், இல்லினாய்ஸ் மாகாணத்தின் செடாக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் பயின்றார்.

வாழ்க்கைத் துணை[தொகு]

இவர் ரோசா அமெண்டா என்ற பெண்ணைக் காதலித்து 1909இல் மணந்தார்.

தொழில்[தொகு]

படிப்பை முடித்தபின் 1904இல் சிகாகோவில் இருந்த ஜான்சன் ஹிக்கின்ஸ் காப்பீட்டு முகமையில் விற்பனையாளர் பணியில் சேர்ந்தார். தொழிலில் ஏற்பட்ட அணுபவத்தைக் கொண்டு இவரே சொந்தமாக ஒரு காப்பீட்டு முகமை நிறுவனத்தைத் துவக்கி சிகாகோ நகரின் வெற்றிகரமான தொழிலதிபரானார்.

வணிக வட்டம்[தொகு]

அக்காலகட்டத்தில் சிகாகோ நகரின் வணிக வட்டம் என்ற அமைப்பு இயங்கிவந்தது. வணிக வளர்ச்சிக்காக, கருத்து பரிமாற்றம் செய்ய இவ்வமைப்பு ஒவ்வொரு வாரமும் கூடிவந்தது. இச்சங்கத்தில் உறுப்பினரான மெல்வின் தனது திறமையால் 1915இல் அச்சங்கத்தின் செயலாளர் ஆனார்[1]. இவரது பேச்சாற்றலாலும், திட்டங்களாலும் அனைவரையும் கவர்ந்தார். 1916இல் வணிக வட்டத்தின் இயக்குநர் கூட்டத்தில் சங்கம் தன் குறுகிய வட்டத்தில் இருந்து சமுதாயத்திற்கும், ஏழ்மையில் துன்பப்படும் மக்களுக்கும் தொண்டாற்றவேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி அனைவரையும் இணங்க வைத்தார்[2].

அரிமா சங்கம்[தொகு]

இதுபோன்ற வணிக வட்டங்கள் பல அக்காலத்தில் நாடு முழுவதும் இயங்கிவந்தன. இச்சங்கங்களைத் தொடர்பு கொண்டு அனைத்துச் சங்கப் பிரதிநிதிகளையும் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் கூட்டினார். இச்சங்கங்களை ஒருங்கிணைத்து லயன்ஸ் கிளப் என்ற பெயரில் இயங்குவதென அனைவரையும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வைத்தார்[3]. அவரையே அதன் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். இச்சங்கத்தின் சட்டதிட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் சீர்செய்யப்பட்டு 1920ஆம் ஆண்டு கனடாவில் உள்ள லின்ஸ்டாரில் ஒரு கிளை துவக்கப்பட்டது இதன்பின் அரிமாசங்கம் ஒரு பன்னாட்டு இயக்கமானது. இதன் பின்னர் அரிமாசங்கம் மிக வேகமாக வளர்ந்தது.

தனது காப்பீட்டுத் தொழிலை 1926இல் விட்டுவிட்டு அரிமாசங்கத்தின் முழுநேரபணியாளராகப் பொறுப்பேற்றார். இச்சங்கத்தின் வளர்ச்சி 1950இல் 4,00,000 உறுப்பினர்களை எட்டியபோது சர்வதேச அரிமாசங்கங்களின் ஆயுட்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பினை ஆட்சிக்குழு இவருக்கு வழங்கியது. பின்னர் இவரின் பதவி ”நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்” எனப் பெயர் மாற்றப்பட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்வின்_ஜோன்ஸ்&oldid=3568491" இருந்து மீள்விக்கப்பட்டது