பஞ்ச சீலம் (அரசியல்)
பஞ்ச சீலம் என்னும் வடமொழிச்சொல்லுக்கு, ஐவகையொழுக்கம் என்பது பொருளாகும். புத்தர் ஐவகைக் கொள்கைகளை இல்லறத்தாருக்கும், துறவிகளுக்கும் வகுத்தார். அவை கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை என்பனவாம். இவைகளை இந்துக்கள் ஐம்பெரும் பாவங்கள் என்று குறிப்பிடுகின்றனர். இச்சொல்லை அரசியலில், 1945 ஆம் ஆண்டு இந்தோனேசிய குடியரசுத் தலைவர் டாக்டர். சுகர்ணோ கையாண்டார். இவர் தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம், தேசியம், குடியரசு, சமூக நீதி என்பனவற்றைத் தம் அரசாங்கக் கொள்கைகளாக வெளியிட்டார். இவை புத்தர் கூறியவைகளிலிருந்து வேறுபட்டவை ஆகும்.
இந்திய, சீனப் பிரதமர்கள் 1954 ஏப்ரல் 29இல் சந்தித்துத் திபெத்தைப் பற்றி ஓர் உடன்படிக்கைச் செய்தனர். அதன்படி இரண்டு நாடுகளுக்குமிடையில் நடந்த ஒப்பந்தம் கீழ்கண்ட கொள்கைகளை அடிப்படையாக உடையது என்று கூறப்பெற்றது.
ஒப்பந்தக் கொள்கைகள்
[தொகு]- ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளின் கொள்கை வேறுபட்டனவேனும், சமாதானமாக வாழவேண்டும்.
- எந்த நாடும், பிற நாட்டை ஆக்கிரமிக்கத் தாக்கக்கூடாது.
- ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.
- ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி, சமமதிப்பு கொடுத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் மதிக்க வேண்டும்.
மாற்றங்கள்
[தொகு]அறிக்கை: இருநாட்டு பிரதமர்களும் பின்னர் வெளியிட்ட தங்கள் அறிக்கையில், "பல்வேறு நாடுகள் இக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பதுடன் பொதுவான அனைத்துலக உறவுகளிலும் இவற்றைக் கையாள வேண்டும். இவை சமாதானத்திற்கும், நாட்டின் காப்பிற்கும் உறுதியான அடிப்படைகளாக விளங்கும் இப்போது நிலவும் அச்சமெல்லாம் நீங்கி நம்பிக்கையுணர்வு மலரும் " என்று குறிப்பிட்டனர்.
1954 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 இல் இந்தோனீசியப் பிரதமர், புதுதில்லிக்கு வந்திருந்த போது, அவருக்கு இந்தியப் பிரதமர் பண்டித நேரு ஒரு விருந்து அளித்தார். அப்போது நேரு மேற்குறித்த ஐந்து கொள்கைகளும், அனைத்துலக உறவுகளுக்கு அடிப்படையாகக் கொள்ளத்தக்க பஞ்ச்சீலங்கள் ஆகும் என்று குறிப்பிட்டார்.
1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்தில், இந்தோனீசியாவில் உள்ள பாண்டுங் நகரத்தில் கூடிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உலக சமாதானத்திற்குரியவென வெளியிட்ட பத்துக் கொள்கைகளில் பஞ்சசீலக் கொள்கைகளும் இடம் பெற்றன.
பின்னர், ஐரோப்பிய நாடுகளில் யூக்கோசுலாவியா நாடு, முதன் முதலாக இப்பஞ்ச்சீலக் கொள்கையை ஏற்றது.1955 சூன் மாதம் இரசியாவிற்கு நேரு சென்றிருந்தபோது, அவரும் இரசியப் பிரதமரும் சேர்ந்து, பஞ்சசீலப்படி உறவாட வேண்டுமெனக் கூட்டறிக்கை வெளியிட்டனர். 1958 ஆம் ஆண்டு வரை, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், இப்பஞ்சீலக் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் கூட, இக்கொள்கைகளை ஒப்புக் கொள்கின்றன. 1955 இல் அப்போது இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த செர்மன் கூப்பர், அமெரிக்காவானது எப்போதுமே பஞ்ச்சீலங்களைச் சொல்லிலும், செயலிலும் கடைப்பிடித்து வருவதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய காமன்வெல்த் மந்திரியாய் இருந்த ஃஓம் பிரபு, பஞ்ச சீலமே காமன்வெல்த் நாடுகளுக்கு அடிப்படையானது என்று கூறினார்.
ஐக்கிய நாட்டு சபையின் சாசனத்தில் உள்ள தத்துவங்களையே பஞ்ச சீலம் என்பது தெளிவாகக் கூறுகின்றது. இந்தக் கொள்கையின் படியே, இந்திய நாட்டின் அயல்நாட்டு உறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.