உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front of Tamil Eelam, NLFT) என்பது ஈழ இயக்கங்களில் ஒன்றாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். 1983 செப்டம்பரில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

1970களின் நடுப்பகுதியில் தேசிய இனப்பிரச்சனை கூர்மையடைந்ததை தொடர்ந்து இடதுசாரி இயக்கங்களிலிருந்த பலரும் தேசிய இனப்பிரச்சனை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டனர். இக்கட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-) இல் இருந்த தோழர்களிடையேயும் தேசிய இனப்பிரச்சனையின் பால் கவனம் திரும்பியது. தமிழ் மக்களுக்குத் தனியான ஓர் அமைப்பு உருவாகுவதும், அதன் வழிகாட்டலில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவதும் காலத்தின் தவிர்க்கமுடியாத தேவையென்னும் கருத்து மறைந்த தோழர் கார்த்திகேசனால் 1975 இறுதியில் முன்வைக்கப்பட்டது. 1975 செப்டம்பரில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யிலிருந்து தோழர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி தேசிய இனப்பிரச்சனை பற்றி ஆராய்ந்தனர். தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கெதிராக போராட வேண்டுமெனவும் பிரிவினையை எதிர்ப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கை அந்நிய நாடுகள் தலையிட வாய்ப்பளிக்கும் எனவே இக்கோரிக்கை பிற்போக்கானது என்னும் கருத்து பிரிவினையை எதிர்ப்பதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்விதம் கூடி முடிவுகள் எடுக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஒரு சில கருத்தரங்குகள் மட்டும் நடத்தப்பட்டன. 1977 தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணி எனும் பெயரில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆங்காங்கே சில கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1977ம் ஆண்டு ஆவணி இனக்கலவரத்தின் பின் தோழர் கார்த்திகேசன் மறைந்ததுடன் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

1979 முதற் பகுதியில், தமிழ்மக்கள் ஜனநாய முன்னணி அமைப்பைக் கூட்டி வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென ஒரு குழு உருவாக்கப்பட்டது. 1979 இல் வடபகுதியில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இளைஞர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கான அமைப்புக் குழு செயலிழந்தது. இந்நிலையில் 1979 புரட்டாதியில் சில தோழர்கள் கல்முனையில் ஒன்று கூடி சில தீர்மானங்களை எடுத்தனர். தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் தனித்துவமும் சுதந்திரமும் கொண்ட ஒர் அமைப்பாக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பெயரில் தொடர்ந்து செயல்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. முன்பே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியெனும் பெயர் பாவிக்கப்பட்டாலும் 1979 புரட்டாதியில் தான் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டது.