டேவிட் கிராஸ்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் கிராஸ்மன்
דויד גרוסמן Edit on Wikidata
டேவிட் கிராஸ்மன் (4 செப்டம்பர் 2015)
பிறப்பு25 சனவரி 1954 (அகவை 70)
எருசலேம்
படித்த இடங்கள்
  • Hebrew University Secondary School
பணிபுதின எழுத்தாளர், எழுத்தாளர்
விருதுகள்Peace Prize of the German Publishers' and Booksellers' Association, பன்னாட்டு புக்கர் பரிசு, Israel Prize, Berman Literature Prize, Chevalier des Arts et des Lettres, Brenner Prize

டேவிட் கிராஸ்மன் (எபிரேயம்: דויד גרוסמן‎; பிறப்பு- ஜனவரி 25, 1954) ஓர் இஸ்ரேலிய எழுத்தாளர். இவரது நூல்கள் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல பரிசுகளையும் வென்றுள்ளன.

2008ல் வெளிவந்த தனது To the End of the Land நாவலில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையைப்   பேசியுள்ளார். அந்நூல் வெளியான பிறகு ஒரு சிறுவர் நூலும், சிறுவர்களுக்கான இசை நாடகமொன்றும் பல கவிதைகளும் எழுதியுள்ளார்.  2014ல் வெளிவந்த இவரது  Falling Out of Time என்ற நூல் குழந்தைகளது இறப்புக்குப் பிறகான பெற்றோரது துயரத்தைப் பற்றிப் பேசுவதாகும்.   A Horse Walks Into a Bar என்ற இவரது நாவலுக்காக  2017ல் மேன் புக்கர் இன்டர்நேஷனல் பரிசு இவருக்கும் இவரது உடனுழைப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெஸிகா கோஹனுக்கும் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

இவரது தாயார் மிக்காயெலா கட்டளைப் பாலஸ்தீனத்தில் பிறந்தவர். தந்தை யிட்ஸாக் அவரது ஒன்பதாவது வயதில் விதவைத் தாயுடன் போலந்திலிருந்து வந்து குடியேறியவர். இவரது தாயாரின் குடும்பம் ஒரு வறிய ஸீயோனிஸக் குடும்பமாகும். கலிலேயாவில் சாலைகள் அமைக்கும் வேலையில் இருந்த இவரது தாய்வழிப் பாட்டனார் தரைவிரிப்புகளை வாங்கி விற்று கூடுதல் வருமானம் ஈட்டி  வந்தார். இவரது தாய்வழிப் பாட்டி ஒரு விரல் ஒப்பனைக் கலைஞர். தனது பிறப்பிடத்திலிருந்து எப்போதும் வெளியிடங்களுக்குச் சென்றிராத இவரது தந்தைவழிப் பாட்டி போலீஸாரது தொல்லையினால்  போலந்திலிருந்து வெளியேறினார். தனது மகன் மற்றும் மகளுடன்  பாலஸ்தீனத்துக்குப் பயணித்த அவர்  பணக்கார வீடுகளில் துப்புரவுப் பணிபுரிந்தார்.

கிராஸ்மனின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுனர், பின்னர் அவர் ஒரு நூலகராகப் பணிபுரிந்தார். இவரால்தான் "வாசிக்கும் குழந்தை"யான டேவி்ட் இலக்கிய ஆர்வம் பெற்றார், பின்னர் அதையே தனது வாழ்வாகவும் அமைத்துக் கொண்டார். "அவர் எனக்குப் பல நூல்களையும் தந்தார், ஆனால் அதிகமும் அவர் எனக்களித்தது ஷாலம் அலைக்கும் (Sholem Aleichem)" என்கிறார் கிராஸ்மன். உக்ரைனில் பிறந்த அலைக்கும் யிட்டிஸ் மொழியிலெழுதிய மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இருப்பினும்  Fiddler on the Roof என்ற இசை நாடகம் எழுதப்பட ஊக்கமளித்த கதைகளை எழுதியவராகவே அதிகமும் அறியப்படுகிறார். தனது ஒன்பதாவது வயதில் ஷாலம் அலைக்குமின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான ஒரு போட்டியில் வெற்றி பொற்றார் கிராஸ்மன். அதனைத் தொடர்ந்து  தேசிய வானொலியில் குழந்தை நடிகராக இருந்தார். தொடர்ந்து ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இஸ்ரேல் வானொலியில் (Israel Broadcasting)அவர் பணியாற்றினார்.[1]

1971 ம் ஆண்டு ராணுவ உளவுத்துறையில் சேர்ந்து தனது தேசியப்பணியைத் (national service) தொடங்கினார். இவர் ராணுவத்திலிருந்த போதுதான் 1973ல்   யோம் கிப்பூர் போர் ஆரம்பித்தது, எனினும் இவர் போர்க்களப் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை.

ஜெரூசலம் எபிரேயப் பல்கலைக் கழகத்தில் தத்துவமும் நாடகவியலும் படித்தார் கிராஸ்மன். பல்கலைப் படிப்பு முடிந்ததும் தான் முன்பு குழந்தை நடிகராகப் பணியாற்றிய  வானொலியில் மீண்டும் பணி செய்யத் தொடங்கினார். இறுதியாக அவர் இஸ்ரேல் தேசிய வானொலியான Kol Yisraelல் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். 1988ல் பாஸ்தீனிய  தலைமை தனது தனி நாட்டை அறிவித்து இஸ்ரேல் என்ற நாடு இருப்பதற்கான இணக்கத்தையும் தெரிவித்தது. இந்தச் செய்தியை ஒலிபரப்பக்கூடாது என்ற உத்தரவை மீறியதற்காக கிராஸ்மன் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கிராஸ்மன் ஜெருசலத்துக்கு வெளியே உள்ள மெவாஸெரெட் ஸீயோனி் வசிக்கிறார். அவரது மனைவி மிகால் கிராஸ்மன் ஒரு குழந்தை மனவியலாளர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள், யானதான், ரூத், ஊரி. ஊரி இஸ்ரேல் ராணுவத்தில் பீரங்கி படையதிகாரியாக இருந்தார். 2006ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடந்த போரில் லெபனானில் கொல்லப்பட்டார். கிராஸ்மன் பின்னர் எழுதிய Falling Out of Time நூலில் ஊரியின் வாழ்வு புகழ்ந்துரைக்கப்பட்டது.

அரசியலும் களச் செயல்பாடும்[தொகு]

கிராஸ்மன் மனதில் பட்டதைச் சொல்லும் இடதுசார்ந்த அமைதிச் செயல்பாட்டாளர். 2006ம் ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தற்காப்பு என்ற முறையில் ஆதரித்த கிராஸ்மன், 2006 ஆகஸ்ட் 10ம் தேதி  சக இஸ்ரேலிய எழுத்தாளர்களான அமோஸ் ஓஸ் மற்றும் ஏ.பி. யெஹோஷுவாவுடன் சேர்ந்து நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போதுதான் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வு ஏற்படுமென்றனர். 'எதிர்த்துப் போரிடும் உரிமை நமக்கிருந்தது. ஆனால் எல்லாம் சிக்கலாகி விட்டன. இப்போது போர் தவிர்த்து வேறு  வழிகளும் இருப்பதாக நம்புகிறேன்' என்றார் கிராஸ்மன்.

இரண்டு நாட்கள் கழித்து 41வது ஆயுதப் படையணியி  ஸ்டாஃப் சார்ஜன்ட் ஆக இருந்த  அவரது 20 வயது மகன் ஊரி, போர் நிறுத்தத்துக்குச் சற்று முன்பாக பீரங்கி வண்டி  எதிர்ப்பு ஏவுகணை தாக்கி இறந்தார். தனது மகனின் மரணம் பாலஸ்தீனியர்கள் பற்றிய இஸ்ரேலின் கொள்கைக்கு எதிரான தனது  நிலைப்பாடு மாற்றிவிடவில்லை என விளக்கமளித்தார் கிராஸ்மன். அவரது பத்திரிகை எழுத்தல்லாது கதைகளிலும்கூட அரசியலை எழுதுவதை கிராஸ்மன் கவனமாகத் தவிர்த்து வந்த நிலையில் அவரது மகனின்  மரணம் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போர் குறித்து விரிவாக எழுதத் தூண்டியது. 2008ல் வெளியான அவரது To The End of the Land நாவலில் இது வெளிப்பட்டது.

அவரது மகனின் இறப்புக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, 1995ல் கொல்லப்பட்ட இட்சாக் ராபினின் நினைவேந்தலுக்காகத் திரண்டிருந்த லட்சம் இசுரேலியர்கள்  முன்பு உரையாற்றினார். எஹுத் ஓல்மர்ட்டின் அரசு தனது தலைமைப் பண்பில் தோல்வியுற்று விட்டதாகவும் பாலஸ்தீனர்களுடன் பேசுவதே அப்பிராந்தியத்தில் முன்னேற்றம்  ஏற்படுவதற்கான சிறந்த நம்பிக்கை என்றும் அவர் பேசினார். ஆமாம் என் மகனது மரணத்தை எண்ணி நான் துயருறுகிறேன். ஆனால் என் வேதனை என் கோபத்தை விடவும்  வலுவானது. என்னுடைய வேதனை இந்த நாட்டையும், இந்த நாட்டுக்காக நீங்களும் (ஓல்மர்ட்) உங்கள் நண்பர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நினைத்துதான்.

போருடன் தனது தனிப்பட்ட தொடர்பு குறித்து கிராஸ்மன் சொன்னது.மக்கள் என்னை இவன் இப்படித்தான் என்றார்கள், இந்த விவரமறியாத இடதுசாரி தனது பிள்ளைகளை  ராணுவத்துக்கு அனுப்ப மாட்டான் என்றார்கள். வாழ்க்கை என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இஸ்ரேலை ஒருவர் கடுமையாக விமர்சிக்கலாம் அதே நேரம்  அவர் அந்நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகவும் இருக்கலாம் என்பதை அவர்கள் இப்போது உணரும் கட்டாயம்ஏற்பட்டிருக்குமென நினைக்கிறேன்; இஸ்ரேல் ராணுவத்தில் ஒருதயார்நிலைப் படைவீரனாக இதை நான் சொல்கிறேன்.

2010ல் கிராஸ்மனும் அவரது மனைவியும்,குடும்ப உறுப்பினர்களும் இசுரேல் தனது குடியிருப்புகளை விரிவு படுத்துவதற்கு எதிராக நடந்த போராட்டங்களில் பங்கு கொண்டனர். பாலஸ்தீனர்களது குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றுவதை எதிர்த்து  கிழக்கு ஜெருசலத்திலுள்ள ஷேக் ஜராவில் நடைபெறும் வாராந்திர போராட்டங்களில்  கலந்துகொண்டபோது கிராஸ்மன் காவல்துறையினரால் தாக்கப்பட்டார். எப்படி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் இப்படித் தாக்கப்படலாம் என தி கார்டியன் பத்திரிகையின்  நிருபர் கேட்டபோது, "அவர்களுக்கு நான் யாரென்று தெரியுமா என்பது தெரியவில்லை" என்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. George Packer (27 September 2010). "The Unconsoled". The New Yorker.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கிராஸ்மன்&oldid=3437511" இலிருந்து மீள்விக்கப்பட்டது