உள்ளடக்கத்துக்குச் செல்

சுழற்சியலைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:1937-French-Cyclotron - University of Washington.jpg
சுவிச்சர்லாந்து நாட்டின் சூரிச்சில், 1937ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சுழற்சியலைவி
கதிரியக்க சிகிச்சைமுறையில் பயன்படும் ஒரு தற்கால சுழற்சியலைவி

சுழற்சியலைவி (ஆங்கிலம்: Cyclotron) ஒரு வகைத் துகள் முடுக்கி ஆகும். இச்சுழற்சியலைவியானது மின்னூட்டம் பெற்ற துகள்களை, உயர்ந்த ஆற்றலைப் பெறுமாறு முடுக்க உதவும் அமைப்பாக விளங்குகிறது.

தத்துவம்

[தொகு]

காந்தப்புலத்திற்குச் செங்குத்தான திசையில் மின்னூட்டம் பெற்ற துகள் இயங்கும்போது செயல்படும் லொரென்ஸ் விசை, துகளை வட்டப் பாதையில் இயங்கச் செய்கிறது. இத்தத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டே சுழற்சியலைவி செயல்படுகிறது.

அமைப்பு

[தொகு]
லாரன்சின் காப்புரிமையில்(1934ம் வருடம்) தரப்பட்ட சுழற்சியலைவியின் அமைப்பு விளக்கப்படம்

இதில் உள்ளீடற்ற உலோக உருளை 1,2 இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெற்றிட அறையில் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வரையுருளைகள் (dees) இரண்டும் சற்று இடைவெளி விட்டு வைக்கப்பட்டு இடையே அயனிமூலம் வைக்கப்படுகிறது. இவ்வமைப்பு வலிமையான மின்காந்தத் துருவங்களுக்கு இடையே வைக்கப்படுகிறது. இவ்வரையுருளைகள் உயர்-அதிர்வெண் அலையியற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

செயல்பாட்டு முறை

[தொகு]

q மின்னூட்டமும் , m நிறையும் கொண்ட நேர் மின் அயனி, மூலத்திலிருந்து வெளிப்பட்டால் , அந்தக் கணத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற அரையுருளையால் ஈர்க்கபடும். செங்குத்தாகச் செயல்படும் காந்த விசையால் துகள் வட்டமான பாதையில் இயங்கும். அரையுருளைகளுக்கு இடைப்பட்ட பகுதியினை அயனி அடையும்போது, அரையுருளைகளின் துருவம் மாறுபடும். எனவே துகள், மீண்டும் அடுத்த அரையுருளையினுள் அதிக வேகத்துடன் ,அதிக ஆரம் கொண்ட சுருள்வில் பாதையில் இயங்கும்.

அயனியானது அரையுருளைகளின் விளிம்பிற்கு அருகே சென்றவுடன் விலக்கத்தகடுகள் மூலம் வெளியேற்றப்படும். இந்த உயர்-ஆற்றல் துகளை , தேவையான இலக்கின் மீது மோதச் செய்யலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழற்சியலைவி&oldid=3866907" இலிருந்து மீள்விக்கப்பட்டது