உள்ளடக்கத்துக்குச் செல்

சவாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவாசனம் (Savasana, Shavasana, சமக்கிருதம்: शवासन), என்பது செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை ஆகும். இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.[1][2][3]

குறிப்புகள்

[தொகு]

உட‌லி‌ல் குறைந்த அளவு விரியும் தன்மை உள்ள ஆடை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அமைதியான, தூ‌ய்மையான சூழல் இந்த ஆசனத்திற்கு தேவைப்படும். தரையில் துணியோ அல்லது பாயோ விரிக்கவும்.

செய்முறை

[தொகு]
  • வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை, ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும்.
  • தொடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும்.
  • உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.
  • வாயை லேசாக திறக்கவும்.
  • இப்போது நீங்கள் அமைதியான உறக்கத்திற்கு செல்லவே‌ண்டும்.
  • மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும்.
  • உடல் மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்கவேண்டும்.
  • இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது மனம் ஒரு நிர்வாண நிலையில் இருக்கும்.

பலன்கள்

[தொகு]
  • மனத்தையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம். வேலைக்கும் ஓய்வுக்குமான சமச்சீர் நிலையை உருவாக்குவதில் உதவும்.
  • நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.[சான்று தேவை]
  • ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.
  • பலவிதமான தொந்தரவுகள் உள்ள பல மணி நேர இடைஞ்சலான உறக்கத்தை விட ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனோ-உடல் தணிவு நிலை அதிக பலனளிக்கும். வயது முதிர்ந்தோருக்கு சவாசனம் ஒரு சிறந்த பயிற்சி.
  • மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோக பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை

[தொகு]
  • இந்த ஆசன நிலையில் இருக்கும்போது மூச்சுக்காற்று மந்தமடையும், மன இயக்கங்கள் நிறுத்தப்படும். சவம் போல் அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும்.[சான்று தேவை]
  • இந்த ஆசனத்தை எத்தனை நேரம் வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் அதிகபட்சமாக அரை மணி நேரம் வரை செய்யலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Corpse Pose". Yoga Journal. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.
  2. Sinha, S. C. (1996). Dictionary of Philosophy. Anmol Publications. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-293-9.
  3. Hatha Yoga Pradipika, Chapter 1, verse 32
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாசனம்&oldid=3893843" இலிருந்து மீள்விக்கப்பட்டது