சம்பாவின் கலைகள்
சம்பாவின் கலைகள் (Art of Champa) என்பவை இன்றைய வியட்நாமின் தெற்கு, மத்திய பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் செழித்திருந்த இந்தியச் சார்புப் பண்பாடான சம்பா பண்பாட்டுக்குரிய கலைகளைக் குறிக்கும். இந்தப் பண்பாடு ஏறத்தாழ கிபி 500 தொடக்கம் 1500 வரையான ஆயிரம் ஆண்டுக் காலத்தில் நிலைத்திருந்தது. இந்தோனீசியத் தீவுகளில் இருந்து வியட்நாமியப் பகுதிகளில் குடியேறிய இந்தப் பண்பாட்டுக்குரிய சம் மக்கள் வணிகம், கப்பலோட்டுதல், கடற்கொள்ளை ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது நகரங்கள், இந்தியா, சீனா, இந்தோனீசியத் தீவுகள் ஆகியவற்றை இணைக்கும் வணிகப் பாதையில் அமைந்த துறைமுக நகரங்களாக இருந்தன. சம்பாவின் வரலாறு சாவா, கெமெர், கம்போடியாவில் உள்ள அங்கூர், இன்று வியட்நாமின் வட பகுதியாக இருக்கும் டாய் வியெட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுடனான முரண்பாடுகளையும், ஒத்துழைப்புக்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. சம்பா இறுதியாக டாய் வியெட் மக்களிடம் தனது சுதந்திரத்தை இழந்தது.
சம்பாவின் கலை மரபு முதன்மையாக மணற்கற்களில் செதுக்கப்பட்ட முழுமையான அல்லது புடைப்புச் சிற்பங்களையும், செங்கற் கட்டிடங்களையும் உள்ளடக்குகின்றது. இவற்றுடன் சில உலோகச் சிலைகளையும், அலங்காரக் கூறுகளையும் காணக்கூடியதாக உள்ளது. இன்று எஞ்சியுள்ள பெரும்பாலான கலைப்பொருட்கள் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. இவற்றுட் சில பொருட்கள் வெறும் அலங்காரங்களாக இருக்கின்றன. ஏனையவை சம் மக்களின் சமய வாழ்க்கை சார்ந்த செயற்பாடுகளுக்கு உரியவை. இவை இந்து சமயம் (குறிப்பாக சைவம்), புத்த சமயம், உள்ளூர் வழிபாடுகள் ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன.
அக்கறை இன்மையாலும், போரினாலும், வேண்டுமென்றே சிதைக்கப்பட்டதனாலும், இக்கலை மரபு பெருமளவு அழிந்துவிட்டது. கூடுதலான அழிவுகள் 20 ஆம் நூற்றாண்டிலேயே இடம்பெற்றன. என்றி பார்மென்டியர், ஜேன் பொய்செலியர் போன்ற சில பிரெஞ்சு அறிஞர்கள், பிற்காலத்தில் அழிந்துவிட்ட சில கலைப்பொருட்களின் ஒளிப்படங்களை எடுத்தும், வரைபடங்களை வரைந்தும், எழுத்துமூல விபரங்களை உருவாக்கியும் அவற்றை ஆவணப்படுத்தி உள்ளனர். சம்பாவின் மரபுச் செல்வங்கள் அழிவதற்குக் காரணமான அக்கறையின்மை இன்றுவரை தொடர்ந்தே வருகிறது. குறிப்பாக, சம்பாவின் வரலாறு தொடர்பான முக்கியமான தகவல்களின் மூலங்களாக இருக்கும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நினைவுக் கற்கள் தொடர்பிலான அக்கறையின்மையைக் குறிப்பிடலாம். வியட்நாம் போரில் ஈடுபட்ட தரப்புக்களும் தமது பங்குக்கு அழிவுகளை ஏற்படுத்தினர். டொங் டுவோங்கில் இருந்த புத்த மடத்தின் எச்சங்கள் அழிக்கப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.[1] வேண்டுமென்றே சிதைத்தலும், கலைத் திருட்டும் இன்றும் தொடர்கின்றன.
சாம் கலையின் மிகப் பெரிய சேகரிப்பு டா நாங்கில் உள்ள சாம் சிற்ப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள குய்மெட் அருங்காட்சியகத்திலும், சைகோனில் உள்ள வியட்நாம் வரலாற்று அருங்காட்சியகத்திலும், அனோயில் உள்ள வரலாற்று அருங்காட்சியகத்திலும் குறிப்பிடத்தக்க அளவு சேகரிப்புக்கள் உள்ளன. சைகோனிலும், அனோயிலும் உள்ள நுண்கலைகள் அருங்காட்சியகங்களில் குறைந்த அளவு சேகரிப்புக்களைக் காண முடியும்.
காட்சிக்கலை வடிவங்கள்
[தொகு]செந்நெறிச் சாம் கலையில் இன்று எஞ்சியிருப்பவை செங்கற் கோயில்களும், மணற்கற் சிற்பங்களுமே ஆகும். சில வெங்கலச் சிலைகளும், உலோக அலங்காரப் பொருட்களும் எஞ்சியுள்ளன. சலவைக்கல் அல்லது வேறு உயர்தரக் கற்களாலான சிற்பங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதைப் போலவே ஓவியங்களோ, வரைபடங்களோ இல்லை. சம்பா மக்கள் ஓலைகளிலேயே எழுதியும், வரைந்தும் வந்தனர். இவை கரையோர வியட்நாமின் வெப்பமும் ஈரலிப்புமான காலநிலைக்குத் தாக்குப் பிடிக்காமல் அழிந்துபோயிருக்கலாம். மரங்கள் போன்ற அழியக்கூடிய பொருட்களாலான பொருட்களும் தற்போது கிடைக்கவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guillon, Treasures from Champa, p.36.