உள்ளடக்கத்துக்குச் செல்

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு (Corey–Winter olefin synthesis) 1,2-டையால்களை ஒலிபீன்களாக மாற்றுகின்ற தொடர் வினைகளின் வரிசையைக் குறிக்கிறது[1][2]. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கனிம வேதியியல் விஞ்ஞானி எலியாசு யேம்சு கோரி மற்றும் அமெரிக்க-எசுதோனிய வேதியியலாளர் ரோலேண்டு ஆர்தர் எட்வின் விண்டர் ஆகியோரை நினைவுபடுத்தும் விதமாக இவ்வினைக்கு கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினை என்று பெயரிடப்பட்டது [3]

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினை
கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினை

.

மேற்காணும் வினையில் பயன்படுத்தப்பட்டுள்ள பாசுகீனுக்குப் பதிலாக பெரும்பாலும் தயோகார்பனைல்டையிமிடசோல் சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள். பாசுகீனுக்கு இணையான நச்சுத்தன்மையை தயோபாசுகீனும் கொண்டுள்ளது என்பதே இதற்கு காரணமாகும். எனவே தயோகார்பனைல்டையிமிடசோல் மிகப்பாதுகாப்பான மாற்றாகக் கருதப்படுகிறது.

வினை வழிமுறை

[தொகு]

டையால் மற்றும் தயோபாசுகீனிலிருந்து வளைய தயோகார்பனேட்டு உருவாக்கப்படுதல் வினை வழிமுறையில் ஒரு முக்கிய அங்கமாகும். இதைத் தொடர்ந்து இரண்டாவது படிநிலையில் டிரைமெத்தில் பாசுப்பைட்டு வினையில் ஈடுபடுகிறது. கந்தக அணுவை இது தாக்கி வலிமையான P=S இரட்டைப் பினைப்புடன் கூடிய சேர்மம் S=P(OMe)3 உருவாக்கி கார்பீனை விடுவிக்கிறது.[4]. கார்பனீராக்சைடு இழப்புடன் கார்பீன் உடைந்து ஒலிபீனைக் கொடுக்கிறது

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினைக்கு முன்மொழியப்பட்ட வினைவழிமுறை
கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினைக்கு முன்மொழியப்பட்ட வினைவழிமுறை

.

தனி கார்பீன் இடைநிலை பங்குபெறாத மாற்று வினை வழிமுறை ஒன்றும் அறியப்படுகிறது. ஆனால், இங்கு கார்பன் எதிர்மின் அயனியின் தாக்குதலில் டிரைமெத்தில் பாசுப்பைட்டின் இரண்டாவது மூலக்கூறு உடனியங்கும் கந்தக-கார்பன் பிணைப்பின் பிளவுடன் பங்கேற்கிறது. பாசுபரசால் நிலைபெற்ற கார்பன் எதிர்மின் அயனி பின்னர் நீக்க வினைக்கு உட்பட்டு ஓர் அசைல் பாசுப்பைட்டுடன் சேர்த்து ஓர் ஆல்க்கீனைக் கொடுக்கிறது, பின்னர் இந்த ஆல்க்கீன் கார்பாக்சிலேட்டு நீக்கம் அடைகிறது.

மாற்று வினை வழிமுறை
மாற்று வினை வழிமுறை

கோரி-விண்டர் ஒலிபீன் தொகுப்பு வினை ஒரு முப்பரிமானச்சிறப்பு வினையாகும். முப்பரிமானமாற்றிய வினைபடு பொருள்கள் வினைபுரிந்து முப்பரிமான மாற்றிய வினைவிளைபொருள்கள் உருவாதல் இச்சிறப்பு வினையின் பண்பாகும். இவ்வினையில் மாறுபக்க-டையால் வினைபுரிந்தால் மாறுபக்க-ஆல்க்கீனையும் ஒருபக்க-டையால் வினைபுரிந்தால் ஒருபக்க-ஆல்க்கீனையும் கொடுக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Corey, E. J.; Winter, R. A. E. J. Am. Chem. Soc. 1963, 85, 2677. (எஆசு:10.1021/ja00900a043)
  2. Corey, E. J.; Hopkiss, P. B. Tetrahedron Lett. 1982, 23, 1979. (எஆசு:10.1016/S0040-4039(00)87238-X)
  3. Block, E. Org. React. 1984, 30, 457. எஆசு:10.1002/0471264180.or030.02
  4. Horton, D.; Tindall, Jr., C. G. J. Org. Chem. 1970, 35(10), 3558-3559. (எஆசு:10.1021/jo00835a082)