உள்ளடக்கத்துக்குச் செல்

கொதிநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொதி நிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொதி நிலை (Boiling point) என்பது ஒரு நீர்மம் (திரவம்) வெப்பத்தால் சூடேறி ஆவியாகும் நிலையில் உள்ள வெப்பநிலை ஆகும். ஒரு நீர்மத்தில் இருந்து அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மேற்பரப்பில் இருந்து வெளியேறுவது எல்லா வெப்பநிலைகளிலும் ஓரளவிற்கு நிகழ்வதுதான், ஆனால் நீர்மம் முழுவதும் ஆவியாகும் நிலையில் சூடேறி, நீர்மக்குமிழிகள் உண்டாகிக் கொதிநிலைக்கு வருவதற்குத்தான் கொதிநிலை என்று பெயர். இன்னொரு வகையாகச் சொல்வதென்றால், ஒரு நீர்மத்தின் ஆவி அழுத்தத்தை அதன் சூழ் அழுத்தத்திற்கு இணையாக்கும் வெப்பநிலையே கொதிநிலை எனப்படும்.

இந்த வெப்பநிலை அந்த நீர்மத்தின் சூழல் காற்றழுத்தத்தைப் பொருத்து மாறுபடக்கூடியது. எடுத்துக்காட்டாக நீரானது கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்ததில் 100 °C வெப்பநிலையில் ஆவியாகும். ஆனால் மலை போன்ற உயரமான இடங்களில் காற்றழுத்தம் குறைவதால், கொதிநிலை (ஆவியாகும் வெப்பநிலை) குறையும். எவரெஸ்ட் மலை உச்சியில் நீரானது 69 °C வெப்பநிலையிலேயே கொதி நிலைக்கு வந்துவிடும். கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 101.325 kPa (கிலோ பாஸ்கல்), ஆனால் எவரஸ்ட் மலையின் உச்சியில் காற்றின் அழுத்தம் 26 kPa (கிலோ பாஸ்கல்)தான், எனவே கொதிநிலை குறைகின்றது. சூழ்ந்துள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால், நீர்மத்தில் உள்ள அணுக்களோ, மூலக்கூறுகளோ எளிதாக வெளியேற முடியும், எனவே குறைவான வெப்பநிலையே போதும்.

கடல் மட்டத்தில் (அதாவது 101.325 கிலோ பாஸ்கல் அழுத்தத்தில்) நீர்மத்தின் கொதிநிலைக்குச் சிறப்பான ஒரு பெயர் உண்டு. அது இயல்நிலைக் கொதிநிலை அல்லது சூழ் அழுத்தக் கொதிநிலை என்று வழங்கப்படும். இயல்நிலைக் கொதிநிலையில் நீர்மத்தின் ஆவி அழுத்தமும் 101.325 கிலோ பாஸ்கல் அளவில் இருக்கும்.

தனிமங்கள் யாவற்றிலும் ஹீலியம் (ஃஈலியம்)தான் மிகக்குறைந்த கொதிநிலை கொண்டது. இத்தனிமம் 4.22 K (அல்லது -268.92 °C) வெப்பநிலையில் கொதிநிலை அடைகின்றது. யாவற்றினும் மிக அதிக கொதிநிலை கொண்ட தனிமங்கள் தங்குதன் (W) மற்றும் இரேனியம் (Re) ஆகும். இவை 5000 K (5300 °C) வெப்பநிலையையும் மீறியவையாகும்.

கொதிநிலை என்பது திரவங்கள் ஆவியாகும் வெப்பநிலை ஆகும். திரவங்கள் வெப்பமாகும்போது குறித்த ஒரு வெப்பநிலையை அடைந்தவுடன் திரவம் கொதித்து ஆவியாகத் தொடங்கும். நியம அமுக்கத்தில் திரவம் ஆவியாகும் வெப்பநிலை குறித்த திரவத்தின் கொதிநிலை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொதிநிலை&oldid=2150153" இலிருந்து மீள்விக்கப்பட்டது