குனூ தளையறு ஆவண உரிமம்
GFDL இலச்சினை | |
ஆக்குநர் | கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை |
---|---|
அண்மைய பதிப்பு | 1.3 |
வெளியீட்டாளர் | Free Software Foundation, Inc. |
வெளியிடப்பட்டது | அண்மைய பதிப்பு: நவம்பர் 3, 2008 |
DFSG compatible | Yes, with no invariant sections (see below) |
FSF approved | ஆம் |
GPL compatible | இல்லை |
Copyleft | ஆம் |
குனூ தளையறு ஆவண உரிமம் (GNU Free Documentation License, GNU FDL அல்லது GFDL) என்பது கட்டற்ற ஆக்கங்களை உறுதி செய்வதற்கான அளிப்புரிமை தரும் உரிமம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSF) குனூ திட்டத்திற்காக உருவாக்கியதாகும். தொடக்கத்தில் மென்பொருள் ஆவணப்படுத்தலில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற படைப்புகளுக்கும் பயனாகிறது.
படைப்பாக்கத்தின் பயனைத் தடுக்காது மேலும் மேலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் இது பொதுவாக அளிப்புரிமம் என வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு படைப்பாளி உரிமம் வழங்குகிறார் என்றால் குனூ தளையறு ஆவண உரிமம் வரையறைகளின் கீழ் எவரும் தனது ஆக்கத்தை மீண்டும் வெளியிடவோ, பகிரவோ, மாற்றவோ அவருக்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்த வரையறைகளில் முதன்மையானது எந்த ஓர் ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழ் உள்ள ஆக்கத்திலிருந்து பெறப்பட்டால் அந்த ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழேயே அமையும். தளையறு ஆவண உரிம ஆக்கங்களை மாற்றியமைத்து மாறுபட்ட பதிப்புரிமை உள்ள ஆக்கங்களை வெளியிட இயலாது. எனவே இந்த உரிமம் அந்தப் படைப்பின் உடனேயே தங்கியிருப்பதால் சிலநேரங்களில் இது நுண்ணுயிரி உரிமம் எனவும் அழைக்கப்படுகிறது.
மேலும் ஓர் படைப்பைப் பகிரவோ மாற்றவோ செய்கையில் பயனர் முந்தைய படைப்பாளிகளுக்கு ஆக்குநர்சுட்டு அளிப்பதுடன் மாற்றங்களைப் பட்டியலிடவும் வேண்டும் என குனூ தளையறு ஆவண உரிமம் வலியுறுத்துகிறது.
இறுதியாக, இந்த உரிமத்தின் கீழ் வெளியாகும் எந்தப் படைப்பும் ஏதாவது ஓரிடத்தில் இந்த உரிமத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து நேரங்களிலும் இயலாது என விமரிசனங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலின் இறுதியில் முழு உள்ளடக்கத்தையும் வெளியிட முடியும்; ஆனால், ஓர் ஒளிப்படத்தில் அல்லது இசைத்துண்டில் வெளியிட இயலாது.