உள்ளடக்கத்துக்குச் செல்

கர்தேகர் மஞ்சப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்தேகர் மஞ்சப்பா (Hardekar Manjappa) (1886-1947) இவர் ஓர் கன்னட அரசியல் சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும், எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மஞ்சப்பா வட கன்னட மாவட்டக் கிராமமான பனவாசியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் அருகிலுள்ள சிர்சி நகரில் படித்தார். மேலும் 1903இல் முல்கி (தற்போதைய ஆரம்பக் கல்வி) இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். [1] பின்னர் மாதத்திற்கு ஏழு ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இயக்கம்

[தொகு]

மஞ்சப்பாவும் இவரது சகோதரரும் சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டனர். இச்சகோதரர்கள் மராத்தியை அறிந்திருந்தனர். எனவே 1906 செப்டம்பர் 2 ஆம் தேதி 10,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் கொண்ட தனுர்தரி என்ற பத்திரிகையைத் தொடங்கினர். இவர் படிப்படியாக சீர்திருத்தவாதி பசவண்ணாவின் போதனைகளில் ஈர்க்கப்பட்டார். பசவரின் போதனைகளில் சாதிவாதத்தை நீக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய எண்ணற்ற தீமைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை அடங்கும். பசவரின் போதனைகளை வெளிக்கொணர மஞ்சப்பா பல சிறு புத்தகங்களை எழுதினார். மேலும் அவரைப் பின்பற்றுபவர்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்க முயன்றார். 1913ஆம் ஆண்டில், இவர் பசவ ஜெயந்தியை பொதுமக்களிடையே கொண்டாடத் தொடங்கினார்.

மஞ்சப்பா 1927 இல் அல்மட்டியில் ஒரு ஆசிரமப் பள்ளியைத் திறந்தார். காந்திஜியின் ஆக்கபூர்வமான பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் வடக்கு கர்நாடக கிராமங்களுக்குச் சென்றார். பசவண்ணா மற்றும் காந்தியின் போதனைகளுக்கு இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதை இவர் உணர்ந்தார். மஞ்சப்பா இந்த போதனைகளை பொது உரைகளில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் வெளிப்படுத்துவதில் திறமையானவர்.

பின்னர் வேலை

[தொகு]

சத்தியாக்கிரகம், தேசபக்தி, தேசியவாதம் போன்ற தலைப்புகளில் மஞ்சப்பா ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1924ஆம் ஆண்டில் தனது அணியின் 'பசவேசுவரா சேவா தலம்' உதவியுடன் பெல்காமில் காங்கிரசு கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அமர்வில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்த இவர் காந்திக்கு பசவண்ணா பற்றிய புத்தகத்தை வழங்கினார்.

மஞ்சப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரர், இவர் " கர்நாடகாவின் காந்தி" என்று பிரபலமாக அறியப்பட்டார். [2] இவர் சுயசரிதை உட்பட 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1947 சனவரி 3 அன்று மஞ்சப்பா இறந்தார். [3]

குறிப்புகள்

[தொகு]
  1. https://web.archive.org/web/20130130005209/http://www.lingayatreligion.com/Lingayat/Hardekar_Manjappa.htm
  2. "Kamat's Potpourri: Amma's Column - Gandhi of Karnataka - Hardekar Manjappa". Kamat.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.
  3. https://web.archive.org/web/20130130005209/http://www.lingayatreligion.com/Lingayat/Hardekar_Manjappa.htm [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்தேகர்_மஞ்சப்பா&oldid=2951060" இலிருந்து மீள்விக்கப்பட்டது