உள்ளடக்கத்துக்குச் செல்

கடலலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலலை

காற்றலை (wind wave) அல்லது கடலலை என்பது நீர்நிலைகளின் அல்லது கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.எளிமையாகக் கூறுவதென்றால் காற்றினால் தோன்றுகின்ற அலைகள் காற்றலைகள் என்ப்படும். நீர்ப்பரப்புகளின் மீது அலைகள் ஒரே சீராக அமைவதில்லை. எனவே ஒவ்வொரு அலைகளும் வேறுபடுகின்றன. அலைகள் மேலும் கீழுமாக அசைகின்றதே தவிர முன்னோக்கி நகருவதில்லை. உராய்வு, வேகத்தடை, அலைமுறிவு, நிலத்தை வந்து மோதுகிற கடல் அலைகள் ஆகியவற்றின் காரணமாக கடல்நீர் நகருகிறது. இவ்வாறு நகர்கின்ற அலைகள் பல்லாயிரம் மைல்களைக் கடந்த பிறகே நிலப்பகுதியினை அடைகின்றன. நகர்கின்ற இவ்வலைகள் சிற்றாலைகள் முதல் 100 அடிகள் வரை உயர்கின்ற பேரலைகள் வரை கடலில் காணப்படுகின்றன[1].

அலைகளை உருவாக்கும் காரணிகள்

[தொகு]

கடல் அலைகள் உருவாகக் காற்று காரணமாக அமைகிறது. ஒரு கடல் பரப்பின் மீது வீசுகிற காற்றின் வேகம், வீசுகிற காலஅளவு, வீசுகிற நேரம் ஆகியவற்றைப் பொறுத்தே கடலலைகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கடல்பரப்பின் மீது காற்று தொடர்ந்து வீசும்போது அக்கடல்பரப்பின் மீது தோன்றுகின்ற அலைகள் அவற்றின் உச்சக்கட்ட உயரத்தை அடைகின்றன. இவை சாதாரண சிற்றலை முதல் 30 மீட்டர் உயரம் கொண்ட இராட்சத அலைகள் (சுனாமி) வரை தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

அலைகளின் நுரை

[தொகு]

காற்று தொடர்ந்து வீசும்போது அலைகள் செங்குதாக மேலெழும்பினால் அதனைத் தாங்கிப் பிடிக்கும் அந்த அலைகளின் முகப்புப்பகுதி உடைந்து சிதறுகிறது. அவ்வாறு உடைந்து சிதறுகிற அலையின் பகுதி "வெள்ளைத்தொப்பிகள் "(WHITE CAPS)" என அழைக்கப்படுகிறது. இதனால் அந்நீர் "நுரைதிறள்"(SURF) உடையதாகிறது.

அலைகளினால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்

[தொகு]
  1. புதிய கடற்கரைகள்
  2. மணல் திட்டுகள்
  3. ஓங்கல்கள்
  4. அலைவெட்டுத் தளங்கள்
  5. அசாதாரண குகைகள்
  6. கடல் மேல்வளைவுகள்
  7. கடலோரக் கொடும்பாறைகள்

உருவாக்கம்

[தொகு]

ஆற்றல் வாய்ந்த கடல் அலைகள், கடலை நோக்கி சரிந்துள்ள நிலங்களை அரித்து, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகளைத் தகர்த்து கடற்கரைகளை உருவாக்குகின்றன. பாறைகள் சிதைவும் கடல் நீரோட்டங்கள் மற்றும் கடலோர அலைகளின் இழுப்பாற்றலும் சேர்ந்து படிவப் பொருள்களலான தோற்றங்களை உருவாக்குகின்றன. இவை மணல் திட்டுகள் எனப்படும். இவற்றுள் கடலோரங்களை ஒட்டி நீளவாக்கில் கணப்படும் மணல் தொடர்கள் நீரடி மண்கரை (SPITS) ஆகும். வளைகுடாவின் குறுக்கே உருவாகி, அந்த வளைகுடாவை பெருங்கடலில் இருந்து பிரிக்கின்ற மணல் திட்டு வளைகுடா மணல்திட்டு (BAY MOUTH BAR) ஆகும். ஒரு தீவை அதன் முதன்மை நிலத்துடனோ அல்லது மற்றொரு தீவுடனோ இணைக்கும் மணல் தொடர் டாம்போலோ ஆகும்.

கடலலை கடற்கரையோர நீட்டு நிலங்களின் அடிப்பரப்பை அரித்து உருவாக்கும் தோற்றம் ஓங்கல் எனப்படும். நாளைடைவில் ஏற்படும் அரிப்புகளால் ஓங்கல்கள் சிதைந்து இருக்கை போன்ற தோற்றம் கொண்ட அலை அரிமேடைகள்(அலை வெட்டுத்தளங்கள்)-(Wave Cut Platform) ஆகின்றன. அலைகள் தொடர்ந்து அரிமேடையை அரிப்பதால் அது அகலமாகிறது பின் சிதைந்து பாறைகள் ஆகிவிடுகின்றன. மிருதுவானதும் பிளவுகளையும் கொண்ட பாறையை கடலோர அலைகளின் நுரைதிறள்களால் வேகமாக அரித்துச் செல்கின்றன. இத்தோற்றங்களால் கடல் குகைகள் உருவாகிறது. நீட்டு நிலங்களுக்கு எதிர் திசையில் உருவான இரு கடல்குகைகள் ஒன்றிணைந்து கடல் மேல்வளைவு உருவாகிறது. கடல் மேல்வளைவுகள் அரிப்பினால் வீழ்ந்து தனிப்பாறை அல்லது கொடும்பாறை உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tolman, H.L. (23 June 2010), "Practical wind wave modeling", in Mahmood, M.F. (ed.), CBMS Conference Proceedings on Water Waves: Theory and Experiment (PDF), Howard University, US, 13–18 May 2008: World Scientific Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4304-23-8{{citation}}: CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலலை&oldid=3406562" இலிருந்து மீள்விக்கப்பட்டது