க. இந்திரகுமார்
க. இந்திரகுமார் | |
---|---|
இறப்பு | டிசம்பர் 21, 2008 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | இலண்டன் |
கல்வி | கொழும்பு சென். தோமஸ் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி |
அறியப்படுவது | ஈழத்துக் கலைஞர்,ஈழத்துத் திரைப்பட நடிகர் ,ஈழத்து எழுத்தாளர் |
க. இந்திரகுமார் (இறப்பு: டிசம்பர் 21, 2008) இலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு மருத்துவராகச் செயலாற்றினார். தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கே. இந்திரக்குமார் தனது ஆரம்பக் கல்வியை 1958களில் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிக நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் இரண்டு மொழிகளிலும் பல நூல்களை ஆக்கியுள்ளார். மறைந்த தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50ற்கு 50 என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உரையை ஆங்கிலத்தில் நூலாக்கினார்.
விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் வெளியிடப்பட்டது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 ஆடிக் கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, இலங்கேஸ்வரன், தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றியும் ஒரு நூலை எழுதியுள்ளார்.
திரைப்படத்துறையில்
[தொகு]தனது துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியது மட்டுமல்லாது நடிப்புத் துறையில் அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் கதாநாயகனாக நடித்த வாடைக்காற்று திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.
அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ. நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.
எழுதிய நூற்கள்
[தொகு]- மண்ணில் இருந்து விண்ணுக்கு, 1972
- டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, 1998 மணிமேகலைப் பிரசுரம்
- புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல், 2005 மணிமேகலைப் பிரசுரம்
- விண்வெளியில் வீர காவியங்கள், 1996 மணிமேகலைப் பிரசுரம்
- இலங்கேஸ்வரன்
- தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக, கானா பிரபாவின் பதிவு
- க.இந்திரகுமார் எழுதிய புத்தகங்கள்