உடன்படிக்கை (விவிலியம்)
உடன்படிக்கை (Covenant) என்னும் சொல் விவிலியத்தில் வருகின்ற ஒரு முக்கியமான கருத்தைக் குறிப்பதாகும். இது கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குறிக்கிறது[1]. பிற்காலத்தில் கிறித்தவ சமயம் இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் உலக மக்களோடு ஒரு "புதிய உடன்படிக்கை" [2] செய்துகொண்டார் என்று அறிக்கையிட்டது.
பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை
[தொகு]- உடன்படிக்கை என்பது சமயச் சடங்கு ஒன்றை நிறைவேற்றிச் செய்யப்படுகின்ற ஆடம்பரமான ஒப்பந்தம் ஆகும். தொடக்க காலத்தில் உடன்படிக்கை வாய்மொழி வழியாக நடைபெற்றது. ஆனால் விவிலியக் காலத்தில் அது எழுத்து வடிவில் அமைந்தது. ஒப்பந்தம் செய்கின்ற இரு தரப்பினரும் அதன்படி நடப்பதாக உறுதி அளித்தார்கள்.
- உடன்படிக்கை இரு தனியாள்களுக்கிடையே நடைபெறலாம், அல்லது இரு நாடுகளுக்கிடையே நிகழலாம். விவிலியத்தில் தொடக்க நூலில் வருகின்ற உடன்படிக்கைகள் இவை:
தொடக்க நூல் 26:26-28 - ஈசாக்கு - அபிமெலக்கு உடன்படிக்கை
தொடக்க நூல் 31:44-46 - யாக்கோபு - லாபான் உடன்படிக்கை
- நாடுகளுக்கிடையே நடக்கும் உடன்படிக்கைகள் சில:
யோசுவா 9:3-15 - யோசுவா கிபயோன் மக்களோடு செய்த உடன்படிக்கை
1 அரசர்கள் 5:2-12 - சாலமோன் மன்னரும் ஈராமும் செய்த உடன்படிக்கை
1 அரசர்கள் 15:19 -ஆசா அரசனும் பெனதாதும் செய்த உடன்படிக்கை
- உடன்படிக்கை கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே நிகழலாம்.
உலகெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கடவுள் நோவாவோடு உடன்படிக்கை செய்தார் (தொடக்க நூல் 9:4-12).
ஆபிரகாம் கடவுளோடு உடன்படிக்கை செய்தார் (தொடக்க நூல் 15:10-21).
- விவிலியத்தில் நாடுகளுக்கும் கடவுளுக்கும் இடையே நிகழ்ந்த உடன்படிக்கை விவிலியக் காலத்தில் பிற நடு ஆசிய மக்கள் நடுவே நிலவிய பழக்கத்தை எதிரொளித்தது. சீனாய் மலையில் கடவுள் மோசே வழியாக மக்களோடு செய்த உடன்படிக்கையின் தனிக் கூறு என்னவென்றால் அந்த உடன்படிக்கை செய்துகொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சம நிலையில் இல்லை. பேரரசன் ஒருவன் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசனோடு செய்யும் உடன்படிக்கையில் எப்படி இருவருக்கும் இடையே சமநிலை இல்லையோ, அதுபோலவே, கடவுள் மக்களோடு செய்த உடன்படிக்கையில் மக்கள் கடவுளுக்குத் தாங்கள் சமமானவர்கள் என்று உரிமைபாராட்ட முடியாது. கடவுள் செய்யும் உடன்படிக்கை மக்களுக்கு அவர் காட்டும் இரக்கத்தின், அன்பின் அடையாளம். மக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்.
- உடன்படிக்கை இருவருக்கிடையே நிகழ்ந்துவிட்ட பின் இருவருமே அதைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
- அக்காலத்தில் வழக்கத்திலிருந்த உடன்படிக்கைகளில் ஆறு கூறுகள் காணப்பட்டன. அவை:
- உடன்படிக்கை செய்வோரின் பெயர்களைக் குறிப்பிடும் முன்னுரை.
- தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசனுக்குப் பேரரசன் செய்துவந்துள்ள நன்மைகள் பட்டியலிடப்படும்.
- சிற்றரசன் கடைப்பிடிக்க வேண்டியது யாது என்பது குறிக்கப்படும்.
- உடன்படிக்கை ஏடு காக்கப்பட வேண்டும் என்றும் யாவரும் அறிய பறைசாற்றப்பட வேண்டும் என்றும் குறிக்கப்படும்.
- உடன்படிக்கைகுச் சாட்சிகளாகத் தெய்வங்கள் பெயர் குறிப்பிடுதல்.
- உடன்படிக்கையை மீறினால் தெய்வங்களிடமிருந்து வரும் சாபக் கேடும், அதைக் கடைப்பிடித்தால் விளையப்போகும் நன்மையும் பட்டியலிடப்படும்.
- மேற்கூறிய பாணியில் இசுரயேலிலும் உடன்படிக்கை நிகழ்ந்தது. ஆனால், இசுரயேல் பல தெய்வங்களை ஏற்காமல் யாவே என்னும் ஒரே கடவுளையே ஏற்றதால் மேலே குறிப்பிட்ட ஐந்தாம் நிபந்தனை செயல்படுத்தப்படவில்லை.
- கடவுள் இசுரயேலோடு செய்த உடன்படிக்கைக்கு எடுத்துக்காட்டாக, விடுதலைப் பயண நூலிலிருந்து கீழ்வரும் பகுதிகளைக் காட்டலாம்:
- முன்னுரை: விடுதலைப் பயணம் 20:2
- ஏற்கனவே செய்யப்பட்ட நன்மைகள்: விடுதலைப் பயணம் 20:2 (19:4)
- அதிகாரத்துக்கு உட்பட்ட ஆள் (நாடு) கடைப்பிடிக்க வேண்டியவை: விடுதலைப் பயணம் 20:3-17; 20:23-23:17
- உடன்படிக்கை பறைசாற்றப்படுதல்: விடுதலைப் பயணம் 24:3-8; 24:12
- (சாட்சிகளாகத் தெய்வங்கள் அழைக்கப்படுவது இசுரயேலில் இல்லை)
- சாபக் கேடுகளும் ஆசிகளும்: விடுதலைப் பயணம் 20:5-6; 23:25
- இசுரயேல் மக்களுக்குக் கடவுள் காட்டிய தனி அன்பு அவர்களோடு கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கையில் வெளிப்பட்டது. சீனாய் மலையில் நிகழ்ந்த உடன்படிக்கையின் போது,
"கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது...
என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (விடுதலைப் பயணம் 20:1-6).