உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவு மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவு மரம் (Holoptelea integrifolia) தாவரவியல் பெயர்: ஹலோப்டேலியா இன்டெக்ரிபோலியா, உல்மேசி[1][2] தாவரக் குடும்பத்தை சேர்ந்த இது நாடெங்கும் ஆண்டிற்கு 800 மில்லி அளவிற்கு மேல் மழையுடைய பகுதிகளில் காணப்படுகிறது. மகாராட்டிராவில் பருவ மழைக் காடுகளிலும், உத்திரப்பிரதேசத்தில் இலையுதிர்க் காடுகளிலும் அதிகமாக உள்ளன. வெப்ப மண்டல மரம். ஆயா, ஆமிலி, தம்பச்சி என்ற வேறு பெயா்களிலும் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது.

விவரிப்புகள்

[தொகு]

இந்திய எல்ம் எனப்படும் இந்த ஆவு மரம் 20மீ முதல் 25 மீ உயரம் வரை வளரும் இலையுதிர்வக மரமாகும்; அரிதாக, 30 மீ உயரமும் இது வளரலாம். அகன்ற முடு போன்ற கவிப்புடைய இம்மரம் மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு மேல் கிளைகள் மேல் நோக்கி பிரிந்து வளர்ந்திடும் அடர்ந்த தழையமைப்புடையது. மரப்பட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் முதிர் மரங்களில் தக்கை போன்ற உரியும்செதில்கள் இருக்கும். இலைகள் ஒன்றுவிட்டொன்றாக மாற்றொழுங்கமைவில், நீள்வட்ட முட்டை வடிவத்தில் 8.0 முதல் 13.0 செ.மீட்டர் நீளமும்,3.0 முதல் 6.0 செ.மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். முழு இலை விளிம்பும் சீராகவோ அல்லது அரம்பப் பல் வடிவத்திலோ அமையும். காம்புப்பகுதியின் இலையடி வட்டமாக அல்லது இதய வடிவத்தில் நுனியில் நீண்ட கூரிய முனையுடனும் இருக்கும். இலைக் காம்பு இலான்சு வடிவில் இருக்கும். காம்பின் நீளம் 1.25 செ.மீட்டருக்கும் சற்றுக் குறைவானது. இலையின் மேற்புறம் பளபளப்பாகவும் கீழ்ப்புறம் நரம்புகள் பளிச்செனத் தெரியும். நசுக்கிய இலை அருவெருப்பு தரும் மணம் கொண்டிருக்கும்.

இலைச் சந்துகளில் பச்சை நிறத்தில் மலர்கள் கொத்துக்களாக காணப்படும். மலர்கள் சின்னஞ்சிறியன; மலர்களின் நிறம் பசுமஞ்சள் முதல் பழுப்பு நிறமாக இலை உதிர்ந்த வடுக்களில் கொத்தாகவோ மஞ்சரியாகவோ அமையும். பூமடல்கள் வெல்வெட் பளபளப்புடன் நான்காக அமையும். இதன் வட்டவடிவ வெடியா சிறகு கனி 2.5 செமீ விட்டத்துடன் தட்டையான விதையில் இணைந்த சிறகுப் படலமாக அமையும். விதையைச் சுற்றிச் சிறகு போன்ற அமைப்பு இருப்பதால், காற்றூடாக இதனால் நெடுந்தொலைவு வரை பரவமுடியும்.

வளர்ப்பும் பயன்பாடுகளும்

[தொகு]

ஆவுமரம் மலிவான இருக்கைகள் செய்யவும் ஊரகப் பகுடிகளில் விறகாகவும் பயன்படுகிறது. இது வெப்ப ஏற்புதிறமும் வறட்சி தாங்குதிறமும் மீளுயிர்ப்புதிறமும் கொண்டிருப்பதால் சுற்றுச்சூழல் காப்புக் காடாகப் பயன்படுகிறது. இதன் பூக்களும் இலைகளும் பட்டையும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

காட்சி மேடை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 1, 2nd Ed.,Chennai, New century book house pvt ltd.,

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவு_மரம்&oldid=3914198" இலிருந்து மீள்விக்கப்பட்டது