உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலகக் காடுகள் ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசிலில் உள்ள அமேசன் மழைக்காடு
தென் மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரித்து அழிக்கப்பட்டுள்ள காடு.

ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டைக் காடுகள் அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. தற்போது வாழும் மக்களினதும், எதிர்காலத் தலைமுறையினரினதும் நன்மைக்காக, பேண்தகு காட்டு மேலாண்மை, எல்லாவிதமான காடுகளினதும் பாதுகாத்துப் பேண்தகு வளர்ச்சியுறச் செய்தல் போன்றவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.[1][2][3]

பின்னணி

[தொகு]

உலகம் தழுவிய பேண்தகு வளர்ச்சியில் காடுகள் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி 1.6 பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்க்கைக்குக் காடுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் 300 மில்லியன் மக்கள் காடுகளுக்குள்ளேயே வாழ்கின்றனர். காட்டு உற்பத்தித் தொழில் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்களுக்குமான முக்கிய மூலங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் காட்டு உற்பத்திகளின் வணிகத்தின் மொத்தப் பெறுமதி 327 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. காடழிப்பினால் 130,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் ஒவ்வொரு ஆண்டும் அழிந்து போவதாக உணவு வேளாண்மை நிறுவனம் மதிப்பிடுகிறது.

உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, புவி சூடாதலுக்குக் காரணமாக உள்ள பசுங்குடில் வளிம வெளியேற்றத்தின் 20 வீதம் காடழிப்பினாலேயே ஏற்படுகிறது. உலகில் கானப்படும் உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டவைகளுக்குக் காடுகளே வாழிடங்களை வழங்குகின்றன. அத்துடன் வெப்பவலய மழைக்காடுகளின் அழிப்பினால் நாளொன்றுக்கு 100 இனங்கள் வரையிலான உயிர்ப்பல்வகைமை இழப்பு ஏற்படுவதாகவும் உலக வங்கியின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இயற்கையின் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம், காட்டு நிலத்தோற்ற மீள்விப்புத் தொடர்பான கூட்டாண்மை ஆகிய அமைப்புக்கள், உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட எக்டேர் பரப்பளவு கொண்ட அழிந்துபோன அல்லது தரம் குறைந்துபோன காடுகளை மீள்விக்க முடியும் என்கின்றன.

பரப்புரை

[தொகு]

ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றத்தின் செயலகமே காடுகள் அனைத்துலக ஆண்டின் நோக்கங்களைச் நிறைவேற்றுவதற்கான மைய அமைப்பாக உள்ளது. இதற்காக நாடுகளின் அரசுகளின் துணையோடும், காடுகள் தொடர்பான ஒன்றிணைந்த கூட்டாண்மை மற்றும் அதுபோன்ற அமைப்புக்களின் உதவியோடும் ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றம் செயற்படுகின்றது. அரசுகளும், பிற பிரதேச, பன்னாட்டு அமைப்புக்களும், குடிமக்கள் சமூக அமைப்புக்களுடன் இணைந்து அந்தந்த நாடுகளில் இது தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான தேசியக் குழுக்களை அமைக்கின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. UN official site
  2. "Launch of International Year of Forests". The Beehive (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
  3. Victor Giurgiu (Sep 2011). "Dezbaterea națională "Starea și viitorul pădurilor României", dedicată Anului Internațional al Pădurilor – 2011". Revista pădurilor (3–4): 97–101. http://www.revistapadurilor.ro/(1)Colectia-pe-ani/(16714)anul-2011/(16738)nr-3-4-2011/(16749)Cronica/(16751)Dezbaterea-nationala-Starea-si-viitorul-padurilor-Romaniei-dedicata-Anului-International-al-Padurilor-2011. பார்த்த நாள்: 2011-10-15. (in Romanian, webpage has a translation button)