1948 தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல்
1948 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில், எதிர்க் கட்சியான ஹெரெனிக்டே நஷனேல் கட்சி இனவொதுக்கல் கொள்கைகளை முன்வைத்துப் போட்டியிட்டது. இக் கட்சியின் தலைவரான டி. எஃப். மாலன் கலப்புத் திருமணங்களைத் தடை செய்தல், கறுப்பு இனத்தவரின் தொழிற்சங்கங்களைத் தடை செய்தல், தீவிர பணி ஒதுக்க நடைமுறைகள் போன்றவற்றை முன்வைத்துப் பரப்புரை செய்தார். இக் கட்சி ஆளும் கட்சியான ஐக்கியக் கட்சியைத் தோற்கடித்தது. பிரதமர் ஜான் ஸ்மத்ஸ் (Jan Smuts) தனது தொகுதியான ஸ்டாண்டர்ட்டனிலேயே தோல்வியடைந்தார்.
மாலனின் கட்சியும் அவரது கூட்டணிக் கட்சியான ஆப்பிரிக்கானர் கட்சியும் சேர்ந்து 79 தொகுதிகளில் வென்றன. ஆளும் கட்சிக் கூட்டணிக்கு 74 இடங்களே கிடைத்தன. ஹெரெனிக்டே நஷனேல் கட்சியும், ஆப்பிரிக்கானர் கட்சியும் தேசியக் கட்சி என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இக் கட்சி தென்னாப்பிரிக்காவை 1994 ஆம் ஆண்டுவரை ஆண்டது.
தேர்தல் முடிவுகள்:
கட்சி | இடங்கள் |
ஹெரெனிக்டே நஷனேல் கட்சி | 70 |
ஐக்கியக் கட்சி | 65 |
ஆப்பிரிக்கானர் கட்சி | 9 |
தொழிற்கட்சி | 6 |
சுயேச்சைகள் | 3 |
மொத்தம் | 153 |