ஸெர்யோஷா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸெர்யோஷா[1]
நூலாசிரியர்வேரா பானோவா
மொழிபெயர்ப்பாளர்பூ.சோமசுந்தரம்
அட்டைப்பட ஓவியர்பொரீஸ் மர்க்கேவிச்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகுழந்தையைப் பற்றிய குறுநாவல்
வெளியீட்டாளர்முன்னேற்றப் பதிப்பகம், சோவியத் ருஷ்யா (விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்)

ஸெர்யோஷா ((உருசியம்: Серёжа, 1955) சோவியத் நூலாசிரியை வேரா பானோவா எழுதிய நூல். ஸெர்யோஷா எனும் ஆறு வயதுள்ளச் சிறு பையனைச் சுற்றி அமைந்து, அவனுக்கும் அவனது புதிய தந்தைக்கும் இடையே அரும்பும் நேசத்தைக் கூறும் இக்குறுநாவல் குழந்தைகளுக்காக அல்லாமல் பெரியவர்களுக்காக, பெரியவர்கள் குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இந்த நாவலின் திரைவடிவம்[2] 1960 ஆம் ஆண்டில் கார்லோவி வாரீ எனும் இடத்தில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் ’படிக பூமியுருண்டை’ எனும் முதல் பரிசைப் பெற்றது.

கதைச் சுருக்கம்[தொகு]

கதை முழுவதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களது உலகம் வர்ணிக்கப்படுகின்றது. சின்னது என்று அவர்களது ஊரைப் பெரியவர்கள் கருதுவது சரி அல்ல என்றும் பெரிய நகரம் அது என்றும் ஸெர்யோஷாவும் அவனது தோழர்களும் கருதுவதில் ஆரம்பித்து, பெரியவர்கள் சூனியக்காரிகள் பற்றி புத்தகங்களில் வாசித்துக் கதை கூறிவிட்டு, அதே மூச்சில் ’சூனியக்காரிகள் இல்லை’ என்று கூறுவதால் சிறுவனுக்கு புத்தகங்கள் மீது வரும் நம்பிக்கையின்மை, போரில் வீர மரணமடைந்துவிட்டதால் தந்தையைப் பற்றி அறிந்திராத சிறுவனுக்கு தாயின் மறுமணத்தால் கிடைக்கும் தந்தையின் மீதான ஆரம்பகால சந்தேகங்கள், பின்னர் மற்றவர்களை விட புதிய தந்தையான கொரஸ்தெல்யோவ் தனது சொற்களைக் காப்பாற்றுவது, சிறுவனை பெரிய மனிதனாக அங்கீகரித்து அவனுக்கு பதில் சொல்வது ஆகியவற்றால் ஈர்க்கப்படுவது, தம்பி வரப்போகிறான் என்றதும் உடன் ஓடிவிளையாடும் சகோதரனை எதிர்பார்த்து விட்டு எடுத்ததெற்கெல்லாம் அழும் ஒரு சிறு குழந்தையாகப் புதிதாகப் பிறந்த சிறு தம்பியைக் கண்டு அடையும் ஏமாற்றம், அவனது வாழ்க்கை முறையில் அவனுக்கே உண்டான சிரமங்கள் என்று கதை விரிகின்றது.

வேலை மாறுதல் காரணமாக குடும்பத்துடன் வேறு ஊர் மாற வேண்டிய கட்டாயத்திலிருக்கும் தந்தையும் தாயும், தனது குறும்புத்தனங்களால் அடிக்கடி உடல்நலக்குறைவு அடையும் சிறுவனை மட்டும் பாஷா அத்தையிடம் விட்டு விட்டு கைக்குழந்தையுடன் செல்ல முடிவெடுக்கும் சூழலில் சிறுவனின் புறக்கணிக்கப்பட்ட மனநிலையையும், பெரியவர்கள் போன்று அவன் சிந்திப்பதையும், பெரியவர்களின் வரம்பற்ற அதிகாரம் மிக்க உலகில் தன்னை நிர்கதியானவனாக உணர்வதையும், மற்ற அனைவரையும் தாண்டி தனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் புதிதாக வந்த தந்தை கொரஸ்தெல்யோவிடம் தன்னை உடன் அழைத்துச் செல்ல வேண்டுவதும், அனைவரும் புறப்படக் கிளம்பியதும், பிரிவைத் தாங்க இயலாத கொரஸ்தெல்யோவ், ஸெர்யோஷாவைக் கிளப்பி உடன் அழைத்துச் செல்வதுமான குறுங்கதையை, குழந்தைகளின் உணர்வின் வடிவில் வடித்துள்ளார் ஆசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸெர்யோஷா; வேரா பானோவா; முன்னேற்றப் பதிப்பகம்
  2. Horton, Andrew; Brashinsky, Michael (1992). The Zero Hour: Glasnost and Soviet Cinema in Transition. New Jersey: Princeton University Press. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691019207. பார்க்கப்பட்ட நாள் February 6, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸெர்யோஷா_(நூல்)&oldid=1878171" இலிருந்து மீள்விக்கப்பட்டது