வேழம் (புல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேழம் என்னும் புல்

வேழம் என்பது ஒருவகைப் புல்.

உடலறிவு மட்டும் கொண்ட உயிரினத்தை கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் புலவர் தொல்காப்பியர் புல் என்றும் மரம் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்தியுள்ளார்.[1]
புல் என்பது உள்ளீடு இல்லாமல் உள்ளே துளை கொண்ட தாவரம்.

சங்கப்பாட்டில் வேழம்[தொகு]

வேழம் என்னும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்கும்.
ஐங்குறுநூறு என்னும் சங்கநூல் தொகுப்பில் உள்ளது ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய மருதத்திணைப் பாடல்கள். அவரது 100 பாடல்களில் இரண்டாம் பத்தாக உள்ளது வேழப்பத்து என்னும் பகுதி. இதில் வேழப்புல் பற்றிய குறிப்புகள் உள்ளன. வேழப்புல்லை இக்காலத்தில் கொறுக்கைப்புல் என்றும் கொறுக்கைச்சி என்றும் கூறுகின்றனர்.[2]

வேழமும் செருந்தியும் வயலில் விளையும் [3]
வீட்டில் நட்ட வயலைக்கொடி (வீட்டு வேலியில் உள்ள) வேழத்தில் சுற்றும்.[4]
மராஅம் என்னும் வெண்கடம்ப மரச் சோலையில் வேழ வெண்பூ பூக்கும்.[5]
கொடிப்பூக்கள் வேழத்தில் ஏறிப் படரும்.[6]
வேழம் மூங்கில் போல் துளை கொண்டிருக்கும்.[7]
வேழப்பூ கரும்புப்பூ போல இருக்கும்.[8]
வேழத்துப் பூக்காம்பிலும் துளை உண்டு.[9]
வேழப்பூ குதிரைக் குடுமி போல இருக்கும்.[10]
வேழப்பூ வானில் பறந்தாடும் குருகுப் பறவை போல ஆடும்.[11]
நீராடிய மகளிர் வேழப்புதரை புணர்ச்சிக்கு மறைவிடமாகப் பயன்படுத்திக் கொள்வர்.[12]

அடிக் குறிப்பு[தொகு]

 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் - ”புறக் காழனவே புல்லென மொழிப - புல் வெளிப்புறம் உறுதியாகவும் உட்புறம் ஒன்றுமில்லாமல் இருக்கும் (எ.கா) மூங்கில்”
 2. முளைவர். ச. வே. சுப்பிரமணியன், (நூல்) சங்க இலக்கியம், (மூலம் முழுவதும்), மணிவாசகர் பதிப்பகம், 2006, குறிப்பு
 3. இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி 18
 4. மனைநடு வயலை வேழம் சுற்றும் - 11
 5. (மராஅம் பொழிலில்) வேழ வெண்பூ வெள் உளை சீக்கும் 19
 6. கொடிப்பூ வேழம் தீண்டும் 14
 7. காம்பு கண்டன்ன தூம்புடை வேழம் 20
 8. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் – 12
 9. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் 16
 10. பரியுடை நன்மான் பொங்கு உளை அன்ன அடைகரை வேழம் வெண்பூ பூக்கும் – 13
 11. புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகின் தோன்றும் 17
 12. புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழம் 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேழம்_(புல்)&oldid=3420814" இருந்து மீள்விக்கப்பட்டது