விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 29, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூரயா செல்பேசிகள்

தூரயா (Thuraya) என்பது பூமி சார்பு செய்மதிகள் இரண்டின் மூலம் இயங்கும் செய்மதித் தொலைபேசியாகும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை முதன்மையாகக் கருத்திற் கொண்டு நிலையாக இயங்கும் ஒரேயொரு பூமி சார்பு தொலைத் தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இன்னும் ஓரு செயற்கைக்கோள் பின்னணியில் இயங்குகின்றது. மேலும் ஒரு செயற்கைக்கோளை 2007 நவம்பர் 21 இல் ஏவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்தும் இந்த வலையமைப்பை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது பல்வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு பல நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.


மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலைப் பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கிறது. இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவதாகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை முன்னிறுத்துகிறது. இதற்காக குறைந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது.