விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 26, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யேர்மன் தமிழர்கள் தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களாவர். யேர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிகொள்ளலாம். ஏறக்குறைய 60,000 தமிழர்கள் யேர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இங்கு உருவாக்கப்படுள்ள 24 இந்துக்கோயில்களில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்(படம்) குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது.10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன. 15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது.


ஒளிமின் விளைவு (photoelectric effect) என்பது மாழை (உலோகம்) போன்ற ஒரு பொருள் மீது குறிப்பிட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி அல்லது மின்காந்த அலைகள் விழுதால், அப்பொருளில் இருந்து எதிர்மின்னிகள் வெளியேறும் என்னும் விளைவாகும். இவ் விளைவைக் கண்டுபிடித்தவர் ஐன்றிக் ஏர்ட்ஃசு (Heinrich Hertz) என்பவர். நியூட்டனிய இயற்பியல் கொள்கைகளின்படி இவ்விளைவை விளக்க இயலாதநிலையில் இவ்விளைவை ஆல்பர்ட் ஐன்சுட்டைன் குவாண்டம் இயல்பியல் கொள்கைகளின் படி விளக்கியதற்காக அவருக்கு 1921 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வெளியேறும் எதிர்மின்னிகளை (இலத்திரன்களை) ஒளியுந்து இலத்திரன்கள் (photoelectrons) என அழைக்கப்பட்டன. அத்துடன் ஒளிவிலகல், ஒளிச்சிதறல், விளிம்பு விளைவு (Diffraction) போன்றவற்றை விளக்கும் அலை-துகள் இருமை ஆகியவையும் விளக்க இவ்விளைவின் அறிவு உதவியது.