விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 25, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி எழுத்துக்களின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படும் முறையாகும். இதன்படி ஒரு தமிழ் பிராமி எழுத்துத்தொடரில் காணப்படும் க் என்னும் மெய் எழுத்தை குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி (+) மட்டும் கொண்டு குறிப்பிட்டு க, கா போன்ற அகர ஆகரமேறிய எழுத்துக்களைக் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேல் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு () குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். அதுவே க், க என்னும் மெய் எழுத்தையும், அகரமேறிய மெய் எழுத்தையும் குறிக்க அடிப்படைக் குறியான கூட்டல் குறி (+) மட்டும் கொண்டு குறிப்பிட்டு, கா என்னும் ஆகரமேறிய எழுத்துக்களைக் மட்டும் குறிக்க கூட்டல் குறியீட்டின் மேலில் வலப்பக்கத்தில் ஒரு படுக்கைக்கோடு () குறிக்கப்பட்டிருக்குமாயின் அது காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும். ஐராவதம் மகாதேவன் என்ற தொல்லியலாளர் இம்முறையை உருவாக்கி தமிழ் பிராமி எழுத்துக்களை மூன்று வளர்ச்சி நிலைகளாக பிரித்தார். தொல்லியல் அறிஞரான நடன காசிநாதன் இம்முறையை மேலும் விரிவுப்படுத்தி தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி நிலைகளை நான்காக பிரித்தார். (படம்)


ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை விளங்கியது. இரும்புக் கால புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாக கி.மு.508இல் கிளீஸ்தீன்ஸினால் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாக மக்களாட்சி ஏதென்சில் தோற்றம்பெற்றது. 1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.